மெக்கானிக்கல் என்ஜினியர் இலக்கியவாதியாக மாறிய கதை!

0

மெக்கானிக்கல் என்ஜினியர் இலக்கியவாதியாக மாறிய கதை!

தினமலர் டிவிஆர் நினைவு சிறுகதைப் போட்டியில் பங்கேற்று முதல்பரிசை பெற்றிருக்கிறார் திருச்சியைச் சேர்ந்த ஏகரசி தினேஷ். திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டை அருகிலுள்ள சேடபட்டி கிராமம்தான் தினேஷின் பூர்வீகம். அங்கேயே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தவர், தற்போது திருச்சி பாரதமிகுமின் நிறுவனத்தின் ஊரகத்தில் வசித்து வருகிறார். படித்தது மெக்கானிக்கல் என்ஜினியரிங். பணி தனியார் நிறுவனத்தில் குவாலிட்டி கண்ட்ரோல் ஆபீசர்.

ஸ்ரீ சத்யா புரோமோட்டர்ஸ்

பொறியாளர்களுக்கும் இலக்கியத் திற்கும் வெகுதூரம் என்ற பொது நியதியை உடைத்து சிறுகதை எழுதுவதில் எப்படி ஆர்வம் ஏற்பட்டது? என்ற கேள்வியோடு தினேஷ் என்ற இயற்பெயரை கொண்ட ஏகரசி தினேஷ் அவர்களை திருச்சி பாரதமிகுமின் நிறுவனத்தின் ஊரகத்தில் (பெல் டவுன்ஷிப்பில்) சந்தித்தோம். ”தொலைந்ததைத் தேடுவதை விடுத்து, தேடலில் தொலைந்திட விரும்பும் சிலரில் நானும் ஒருவன். எத்தனை முறை தொலைந்து மீண்டாலும் மீண்டும் மீண்டும் தொலைந்திட இடம் தரும் புத்தகத்தையும் இயற்கையையும் தொடர்ந்து படித்தும், இரசித்து வியக்கும் சாமானியன் நான். பொறியியலைத் தொழிலாகவும், எழுத்து மற்றும் வாசிப்பை வேட்கையாகவும் கொண்டவன்.” என கவித்துவமான வரிகளோடு தொடங்கினார் உரையாடலை.

“ஆழ்ந்த வாசிப்பு பழக்கமுடைய என் தந்தையைப் பார்த்து வளர்ந்தவன். பள்ளி நாட்களில் அவர் அறிமுகம் செய்த நூலகமே முதல் படி. சூழலியல் அற்புதங்களையும் வாழ்க்கை சுவாரஸ்யங்களையும் காலத்தால் அழியாதவாறு தன்னுள் படிமமாக்கி, தேடுபவர்களுக்குள் விருட்சமாய் வளரும் வாசிப்புலகம் என்னுள்ளும் பள்ளி நாட்களில் நல்லொழுக்க கதைகளால் முளைத்து, கல்லூரி நாட்களில் சிறுகதைகளால் வளர்ந்து புனைவுகளால் விரிந்தது. கருத்தியல் செறிவுகளும் தமிழ் நெடியும் வீசும் கவிதைகளும் புனைவுகளும் சமூகம் நோக்கிய பார்வையைத் திறந்திட்டது. புத்தகங்களோடு உறவாடிய ஏதோ ஒரு நொடியில் எழுதத் தொடங்கினேன். ஏன் தொடங்கினேன் என்றால் எனக்காகவே தொடங்கினேன்.” என்கிறார்.

- Advertisement -

நவீன சமூக கட்டமைப்பில் வளர்ந்த பெண்ணியம் பேசும், பெண்ணியம் விரும்பும் ஒரு பெண் தன்னைப் போன்ற இணையைத் தேடி ஏமாற்றமடைவதைக் கருவாகக் கொண்ட “தராசு முள்” என்ற சிறுகதைதான் இவர் எழுதிய முதல் சிறுகதை. சமூகத்தில் பெண்களின் நிலை, கிராமிய சூழல், வட்டார மொழி, இயற்கை அழகு, உறவுகள் என பல்வேறு தளங்களில் இதுவரை ஐம்ப துக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கிறார்.

4 bismi svs

கழிவறை இன்றி அவதியுறும் கிராமப்புற பெண்களின் நிலையை மையமாகக் கொண்டு எழுதிய “இடர்களையாய்; விவசாயத்தை மட்டுமே தொழிலாகக் கொண்டவர்கள் நவீன மயமாக்கலில் சிக்கி படும்பாட்டை பற்றிய “விவசாயி கனவு” ; சமூகத்தில் மூன்றாம் பாலினத்தவர்களின் நிலையைப் பற்றிய சிறுகதையான “உமையொரு பங்கன்” போன்றவை இவரது குறிப்பிடத்தகுந்த படைப்புகள்.
குடும்ப அமைப்பு என்ற பெயரில் பெண்களின் கனவுகளை மறுக்கும் சூழலுக்கு மாற்று என்ற வகையில் நான் இதை சமூக விழிப்புணர்வு கதைதான், தற்போது முதல் பரிசு பெற்றுள்ள மனையாளன் சிறுகதையின் கரு என்கிறார். “பிசி”, “திருக்கல்யாணம்” ஆகிய குறுநாவல்களை எழுதியிருக்கும் இவர், எதிர்காலத்தில் நாவல் எழுதும் எண்ணம் இருப்பதாகவும் குறிப்பிடுகிறார். ”நான் எழுதும் கதைகளின் முதல் வாசகி, விமர்சகர் என் மனைவியே. ஒவ்வொரு கதையையும் மனைவியோடு விவாதித்து மெருகேற்றிய பின்னரே எங்கும் அனுப்புவேன்.” என்கிறார்.

”பல தலைசிறந்த எழுத்தாளர்களின் சிறுகதைகள் என்னைத் தொடர்ந்து செதுக்கிக் கொண்டிருந்தாலும், தமிழ்ச் சிறுகதைகளுக்கென்று இலக்கணம் வடித்துக்கொடுத்த புதுமைப்பித்தன் அவர்களும், கட்டுப்பாடுகளைத் தகர்த்தெறிந்த ஜெயகாந்தன் அவர்களும் எனது வழிகாட்டி என்பதைப் பறைசாற்றி பெருமையோடு கதை இலக்கியத்தில் இயங்கி வருகிறேன். ” என்கிறார். இலக்கியத்தில் தடம்பதிக்க வாழ்த்துக்கள் கூறி விடைபெற்றோம். இலக்கிய வானத்தில் நம்பிக்கை நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருந்தன.

–  ஆதவன்

வீடியோ லிங்:

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.