வெறும் விளம்பரங்களைக் காண்பித்தே வெற்றிகரமான ஆட்சியை நடத்த முடியுமா? அதியன் பதில்கள் (பகுதி- 7)
தற்போது மகளிருக்கு உரிமைத்தொகை ரூ.1000 வழங்கிவரும் நிலையில் பண்டிகைக்காலப் பரிசு வினியோகம் அரசுக்குக் கூடுதல் செலவு தானே?
மக்கள் நலனுக்குச் செலவிடுவதுதான் அரசின் தலையாய, முதன்மையான நோக்கமாகும். அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கும்போது அரசு தரப்பில் இத்தனை கோடி செலவாகிறது என்று குறிப்பிடப்படும். மக்களிடம் பணம் வழங்கும்போதுதான் பணச்சுழற்சி இருக்கும். அரசுக்குக் கூடுதல் செலவு என்பது மகிழ்ச்சியான செய்தி தான்.
தமிழக மக்களை அயோத்திக்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபடும் பாஜகவினர் மற்ற மதத்தினரை அதன் முக்கியக் கோவில்களுக்கு அழைத்துச் செல்வார்களா?
இந்தியா என்பது மதச்சார்பற்ற நாடு என்பதுதான் அதன் தனிச்சிறப்பாகும். ஆனால் மோடி அரசு மதச்சார்புள்ள அரசாகச் செயல்படும் இச்சூழலில் மற்ற மதத்தினரை மதிக்கும் வாய்ப்பு மிகவும் குறைவே.
தூத்துக்குடி வெள்ளப்பாதிப்பைப் பார்வையிட்டு மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட இயக்குநர் மாரி செல்வராஜ், சாதியச் சமூகத்தினரால் விமர்சிக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது என்று அறிவுச் சமூகத்தின் தலைவர் தமிழ்முதல்வன் குறிப்பிட்டுள்ளரே?
தமிழ்ச் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட பலரும் மாரி செல்வராஜ் மீது இணைய வழியில் நடத்தப்பட்ட விமர்சனங்களைப் பலரும் கண்டித் துள் ளனர். உதயநிதியோடு மாரி செல்வராஜ் இணைந்து வெள்ளப் பாதிப் பைப் பார்வையிட்டதே விமர்சனத்திற்கு அடிப்படைக் காரணம்.
ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா அவர்கள் தமிழகத்திற்குப் பேரிடர் நிதி கொடுக்கமுடியாது என்று உறுதிபடக் கூறியுள்ளது ஏற்புடையதா?
தமிழகத்தில் பேரிடர் ஏற்படவில்லை அதனால் நிதி வழங்க முடியாது என்று நிதி அமைச்சர் கூறியுள்ளார். சரி… ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புக்கும் மக்களின் மறுவாழ்வுக்கும் நிதி வழங்க முன்வரவேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் வேண்டுகோள்.
நிர்மலா சீத்தாராமன் தூத்துக்குடி வருகை மக்கள் மேல் கரிசனம் தானே..?
அப்படியும் எடுத்துக்கொள்ளலாம். பத்தோடு பதினொன்று என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
சுனாமி பாதிப்பையே பேரிடர் என அறிவிக்காத மத்திய அரசு, எந்த விஷயங்களைப் பேரிடர் என ஒத்துக்கொள்கிறது?
இயற்கைச் சீற்றங்கள் உத்திரபிரதேசம், குஜராத் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் நடைபெற்றால் பேரிடராக அறிவிக்க வாய்ப்பு உள்ளது.
திமுக அமைச்சரவையில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி அவர்கள் சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றிருப்பது எதை உணர்த்துகின்றது?
பொதுவாழ்வில் இருப்போர் மக்கள் நலனைக் கருத்தில் கொள்ளவேண்டும். தன் பெண்டு, தன் பிள்ளை எனும் சிறிய கடுகு உள்ளம் கொண்டவர்களாக இருக்கக்கூடாது என்பதையே உணர்த்துகின்றது.
தேவிபாரதி எழுதிய ’நீர்வழிப்படூஉம்’ என்ற நாவலுக்கு 2023ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது கிடைத்துள்ளதே… அதன் கதை என்ன?
நீர்வழிப்படூஉம் என்பது, நீரின் தன்மையை நிகர்த்திருத்தல் என்பது ஆகும். நாவிதச் சிறுகுடி மக்களின் வாழ்க்கைப் பின்னணியில் காரு என்ற தனிமனிதனின் வாழ்க்கையின் வீழ்ச்சியை, அதன் மூலமாக நொய்யல் கரை மனிதர்களின் வாழ்வுப் புலத்தையும், அவர்களின் உள்மன உளவியல் சிக்கல்களையும் அங்குள்ள சமூகத்தைப் பின்னணி யாகக் கொண்டு, இப்புதினம் உருவாக்கப்பட்டுள்ளது.
பிரதமர் வருகையை முன்னிட்டுப் பாதுகாப்புக்காக ஆயிரக்கணக்கில் போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறதே… விஞ்ஞானம் முன்னேறிய நிலையில் குறைந்த செலவில் பாதுகாப்பு சாத்தியமில்லையா?
பிரதமரின் திருச்சி வருகையை யொட்டிப் பாதுகாப்பு மற்றும் தூய்மை பணி ஆகியவற்றுக்குச் செய்யப்பட்ட செலவு சுமார் 70 கோடி செலவு செய்யப் பட்டுள்ளது. விஞ்ஞானத்தை வைத்துக் குறைந்த செலவில் பாதுகாப்பு கொடுப்பது என்பது சாத்தியமில்லை. அதிகச் செலவில்தான் ஆடம்பரம் தெரியும்.
இளவயதிலேயே இளைஞர்கள் சாதி வன்மத்தோடு ரவுடியாகும் நிலைக்கு அரசு தான் காரணமா?
இல்லை. தாயும் தந்தையும் கொண்டுள்ள சாதிய வன்மம்தான் இளைஞர்களிடம் தொடர்கிறது. சாதிய வன்மத்திற்குச் சில அரசியல் கட்சிகள் காரணமாக இருக்கலாம். அரசு ஒருபோதும் காரணமாக இருக்க முடியாது.
பிஜேபியை தோற்கடித்து இந்தியா கூட்டணியை ஆதரித்தால் ஊழலற்ற ஆட்சி மலர்ந்திடுமா?
இந்திய அரசியலில் ஊழல் என்பது நீக்கமற நிறைந்துள்ளது. யார் ஆட்சி வந்தாலும் ஊழல் இல்லாத ஆட்சியை வழங்க முடியாது. இந்தியா கூட்டணியும் இதற்கு விதிவிலக்கு அல்ல. ஊழலை வளர்த்தெடுப்பது பொது மக்களே.
வெறும் விளம்பரங்களைக் காண்பித்தே வெற்றிகரமான ஆட்சியை நடத்த முடியுமா?
மோடியை மனதில் நினைத்து கேட்கப்பட்ட கேள்வி போல தெரிகிறது. மக்களின் அரசியல் விழிப்புணர்வோடு தொடர்புடைய ஒன்று.
விளம்பரத்தை வைத்து எந்த அரசும் வெற்றி கரமான ஆட்சியை நடத்த முடியாது. மக்கள் நலன் சார்ந்த ஆட்சியே வெற்றிகரமாக அமையும்.