இணையவழி சைபர் குற்றங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் குறும்படங்கள் !
மதுரை மாநகர் மற்றும் புற நகரங்களில் உள்ள பள்ளி, கல்லூரி, பேருந்து நிலையம் மற்றும் பொது இடங்களில் இணையவழி குற்றங்களை குறித்து விழிப்புணர்வு குறும்படங்களை காண கீழே உள்ள க்யூ. ஆர் கோடுகளை ஸ்கேன் செய்யவும் என மதுரை மாவட்ட காவல்துறையினரால் பொதுமக்கள் பார்வையில் படும்படி நகரங்கள் முழுவதும் ஆங்காங்கே பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. இதை அறிந்த நாம் சைபர் கிரைம் குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கருப்பையாவை நேரில் சந்தித்தோம் அவர் கூறியது …..
சைபர் குற்றம் என்பது கணினிகள், டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் நெட்வொர்க்குகளைப் பயன்படுத்தி நடைபெறும் குற்ற செயல்களை குறிக்கும் தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் சைபர் குற்றவாளிகள் தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி நிதி மோசடி முதல் அடையாள திருட்டு மற்றும் இணையத்தள அத்துமீறல் (Cyberbullying) வரை பல்வேறு குற்றங்களைச் செய்கிறார்கள்.

வங்கியியல் தொடர்பு, ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் வணிகப் பரிவர்த்தனைகளுக்கு இன்டர்நெட்டின் மீது அதிகமான நம்பிக்கை வைக்கப்படுவதால் சைபர் அச்சுறுத்தல்களும் கணிசமாக அதிகரித்துள்ளன. ஹேக்கர்கள் மோசடிகள் மற்றும் சைபர் குற்றவாளிகள் மால்வேர் (Malware), பிஷிங் (Phishing) தாக்குதல்கள், ரேன்சம் வேர் (Ransomware) மற்றும் சமூக பொய்ப்பேச்சு நுட்பங்களை (Social Engineering Tactics) பயன்படுத்தி தனிநபர்கள் நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களை இலக்கு செய்கிறார்கள்.
சைபர் குற்றங்கள் பல்வேறு தீவிர விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் அதாவது நிதி இழப்பு, தனியுரிமை மீறல், கண்ணியத்திற்கேடும் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மன அழுத்தம் போன்றவை தொழில்நுட்பம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வரும் நிலையில் மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து வலுவான கடவுச்சொற்களைப் பயன்படுத்தி இரட்டை அடையாளம் உறுதிப்படுத்தலை (Two Factor Authentication) செயல்படுத்தி சந்தேகமான ஆன்லைன் நடவடிக்கைகளுக்கு எதிராக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அரசுகள் மற்றும் சைபர் பாதுகாப்பு அமைப்புகள், சட்டங்கள், விதிமுறைகள் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் சைபர் குற்றங்களை தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. இருப்பினும், தனிநபர்களுக்கிடையேயான விழிப்புணர்வு மற்றும் டிஜிட்டல் கல்வி என்பது சைபர் அச்சுறுத்தல்களுக்கு எதிரான முதல் பாதுகாப்புக் கேடயமாகும்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
பொதுமக்களிடையே சைபர் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நமது தமிழ்நாடு காவல்துறை சைபர் குற்றப்பிரிவு தலைமையகத்திலிருந்து சைபர் விழிப்புணர்வு குறும்படங்கள் மற்றும் தற்போது நடைபெறுகின்ற சைபர் குற்றங்களை பற்றியும் அதிலிருந்து பாதிக்கப்படாமல் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது பற்றியும் தெரிந்து கொள்வதற்காக (சைபர் குற்றங்களும் மற்றும் தம்பியின் வழிகாட்டலும்) என்ற சைபர் குற்ற விழிப்புணர்வு புத்தகத்தை டிஜிட்டல் வடிவில் (QR code) வெளியிட்டுள்ளது.
இந்த QR code scan செய்து பொதுமக்கள் தங்களது செல்போனிலேயே பார்த்து விழிப்புணர்வு பெறலாம். இந்த குறும்படங்கள் மற்றும் சைபர் குற்றங்கள் பற்றி பொதுமக்கள் விழிப்புணர்வு பெற இந்த புத்தகம் மிகவும் உதவியாக இருக்கும் என சைபர் குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கருப்பை யா கூறினார்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.