பிரமிப்பில் ஆழ்த்தும் திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை!
பணம் கொழிக்கும் தொழில்களுள் ஒன்றாக மருத்துவத்துறையும் மாறிவிட்ட இந்த காலத்தில், கடந்த 90 ஆண்டுகளுக்கும் மேலாக அன்று போலவே இன்றும் சேவை மனப்பான்மையுடன் இயங்கிவருகிறது, ஜோசப் கண் மருத்துவமனை.
வீடியோவை காண
1934 டாக்டர் ஜோசப் ஞானாதிக்கம் என்பவரின் பெரும் முயற்சியால் உருவாக்கப்பட்ட இம்மருத்துவமனை, இன்று தேசிய தர நிர்ணய சான்றிதழ் பெற்று கண்களுக்கான மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக உயர்ந்துள்ளது.
ஜோசப் கண்மருத்துவமனையின் பாரம்பரியம் மற்றும் கடந்து வந்த பாதை குறித்து இம்மருத்துவமனையில் பணியாற்றும் மூத்த கண் மருத்துவர் டாக்டர் லோகநாதன் நம்மோடு பகிர்ந்து கொண்டார். “டாக்டர் ஜோசப் ஞானாதிக்கம் என்பவரால் உருவாக்கப்பட்டு இன்று 20 கண் மருத்துவர்கள், 50-க்கும் மேற்பட்ட செவிலியர்கள், 150-க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் ஆகியோரின் பங்களிப்போடு திருச்சியில் கண் மருத்துவத்தில் தன்னிகரற்று சேவையாற்றி வருகிறது.
கிராமப்புறத்தில் வசிக்கும் கடைக்கோடி ஏழை, எளிய மக்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற உயர்ந்த லட்சியமே ஜோசப் கண் மருத்துவமனையின் வளர்ச்சிக்கு காரணம். இங்கு பணியாற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட ஒவ்வொரு ஊழியரும் மருத்துவ சேவையாகவே பாவித்து வருகிறார்கள்.
மக்களிடம் இப்போது இருப்பதைப்போன்ற அடிப்படையான விழிப்புணர்வுகூட இல்லாத 1950-களின் காலகட்டம் அது. கிராமப்புறங்களில் 60 வயதை கடந்தவர்கள் பெரும்பாலானோர் கண்புரையால் பாதிக்கப்பட்டிருந்தனர். எளிய அறுவை சிகிச்சையின் மூலம் கண்புரை பாதிப்பிலிருந்து மீண்டுவிடலாம் என்ற விழிப்புணர்வு அப்போது அவர்களுக்கு இல்லை. இதன் காரணமாக பலரும் கண்புரை நோய் தாக்கம் காரணமாக பார்வையிழந்தனர். இத்தகைய பின்னணியில் ஒவ்வொரு குக்கிராமங்களாக அவர்களின் வீடுகளுக்கே சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு, சிறப்பு கண்சிகிச்சை முகாம்களையும் நடத்திய பெருமைக்குரியவர், ஜோசப் கண் மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் ஜோசப் ஞானாதிக்கம்.
அன்று எமது நிறுவனரே கிராமங்களைத் தேடி சென்ற நிலையில், இன்று ரோட்டரி சங்கங்கள், லயன்ஸ் சங்கங்கள் மற்றும் பரவலான தன்னார்வலர்களின் பேருதவியோடு அவர் விட்டுச் சென்ற மகத்தான பணியையும் தொடர்ந்து வருகிறோம்.
இதனால் நோய் பாதிப்பை தொடக்கத்திலேயே கண்டறிவதுடன் சிகிச்சை அளிப்பதும் பார்வை இழப்பை தடுப்பதும் எளிதாகிறது. இப்படி நாங்கள் மேற்கொள்ளும் முகாம்களில் அதிகப்படியான பிரச்சனையாக பார்ப்பது குளுக்கோமா மற்றும் கண் நீர் அழுத்த நோய் ஆகிய இரண்டும்தான். சர்க்கரை நோய் இருந்தால் கண் பார்வை இழப்பும் நேரிடக்கூடும். ஆகவே 40 வயதை கடந்தவர்கள் ஒருமுறையாவது கண் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது அவசியம்
அவர் எப்போதும் மருத்துவத்தை மக்களுக்கு ஆற்றும் சேவையாகவே கருதியவர். எளிய மக்களுக்கும் குறைந்த செலவில் தரமான கண் மருத்துவ சிகிச்சை கொடுக்க வேண்டும் என்பதே அவரின் வாழ்நாள் குறிக்கோளாகவும் இருந்தது. இதையே தற்போது நாங்கள் லட்சியமாக கொண்டு செயல்பட்டு வருகிறோம். இதன் காரணமாகத்தான் திருச்சியின் தவிர்க்க முடியாத மருத்துவ அடையாளமாக ஜோசப் கண் மருத்துவமனை உருவாகியுள்ளது.
இதுஒருபுறமிருக்க, கண் பார்வையை இழந்து நிர்க்கதியாக நின்ற ஆயிரக்கணக்கான மக்களுக்கு திருச்சி மன்னார்புரத்தில் பார்வையிழந்தோருக்கான மறுவாழ்வு மையத்தையும் அமைத்து கொடுத்தார், டாக்டர் ஜோசப் ஞானாதிக்கம். அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த சோப்புகள் தயாரிப்பது, கேக் தயாரிப்பது, மெழுகுவர்த்தி தயாரிப்பது உள்ளிட்ட தொழில்களை கற்றுக்கொடுத்து பார்வையிழந்தவர்கள் வாழ்வில் ஒளியேற்றினார்.
ஏதோ, சேவை செய்கிறோம் என்பதற்காக மருத்துவ சிகிச்சை முறைகளில் எப்போதும் சமரசம் செய்து கொண்டதில்லை. கண் மருத்துவத்தில் உலக தரத்திற்கு இணையான சிகிச்சை முறைகளை, மேம்படுத்தப்பட்ட நவீன கருவிகளை காலத்திற்கேற்ப தொடர்ந்து புதுப்பித்தும் வருகிறோம்.” என்றார்.
– சந்திரமோகன்