மகளிர் சுய உதவிக்குழு மாபெரும் மோசடி ! மக்களே உஷார் ! தொடர் – 1
என் பணியின் பொருட்டு அடிக்கடி எந்த மகளிர் குழுவில் உள்ளீர்கள் என்ற ஒரு கேள்வி ஆன்லைன் படிவங்களில் கேட்கப்படுவதால், நான் வசிக்கும் எங்கள் பகுதியில் ஒரு குழுவில் இணைத்துக் கொள்ளும் படி கேட்டிருந்தேன்.
ஏற்கனவே உள்ள குழுவில் உள்ளவர்கள் யாரேனும் குழுவை விட்டு வெளியேறினால், ஒரு தீர்மானம் நிறைவேற்றி வேறு ஒரு புது நபரை அந்த (பழைய) குழுவில் இணைத்துக் கொள்ளலாம் என்பது சட்டபூர்வ விதி அதனால் கேட்டிருந்தேன். அதன்படி ஒரு குழுவில் என்னை உறவுக்கார பெண்மணி ஒருவர் இணைத்துக் கொண்டார்.
முதல் நாள் இணைந்தேன். அடுத்த நாள் வங்கிக்கு வரச்சொன்னார்கள், வங்கிக்கணக்கு தொடங்க வேண்டும் என்று. அங்கே சென்ற பிறகுதான் வங்கி கடனுக்கு அந்த குழு தயாராக இருந்தது என்று தெரியவந்தது. எனக்கோ ”வங்கிக்கடன் வேண்டாம்” என்று சொல்ல முடியாத நிலை.
காரணம் நான் வேண்டாம் என்று ஒதிங்கினால், மற்ற 12 பெண்களும் பாதிக்கப்படுவார்கள் என்று கூறினார் கடன் ஏற்பாடு செய்து தரும் அந்த பெண். அதோடு என்னைப் போன்றே ”குழுக்கடன் வேண்டாம்” என்ற இரண்டு பெண்களை வசைபாடி, ”வந்தே ஆகவேண்டும் வாங்கியே ஆகவேண்டும்” என்று மிரட்டிக்கொண்டிருந்தாள். அவர்களை அடுத்த நாள் வங்கிக்கு வந்தாக வேண்டும் என்றாள்.
அந்த பெண்களும் என்னைப்போலவே வேறு வழியின்றி சரியென்றார்கள். நானும் சரி நம்மால் இந்த குழுக்கடன் நின்றுவிட வேண்டாம் என்று சரியென்றேன். சரி மகளிர் குழு லோன் தானே ஒரு ரூபாய் வட்டி தான். வாங்கினால், மருத்துவம் படிக்க போகும் என் மகனுக்கு மடிக்கணினி வாங்கி தந்து விடலாம் என்று நினைத்தேன்.
அடுத்தடுத்த நாளில்தான் எங்கள் கிராமத்து பெண்களுக்கு மகளிர் குழுவில் அடிப்படை அறிவும் அதனைச் சார்ந்த விழிப்புணர்வும் இல்லை என்பதும்; அதனால், பல வகையில் பல வருடங்களாக பத்திற்கும் மேற்பட்ட குழுக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள் என்பதும்; எங்கள் ஊரைச் சுற்றி கிராமம் மற்றும் நகரத்து பெண்கள் பலரும் ஏமாற்றப்பட இருக்கிறார்கள் என்றும்; அந்த பெண்ணைப் போலவே, குளித்தலை பகுதி முழுக்க பலர் ஏமாற்றப்படிருக்கிறார்கள் என்பதும்; கோடிக் கணக்கில் வங்கி மோசடி நடந்திருக்கிறது என்றும் தெரிய வந்தது. வங்கிசார்ந்த கல்வி விழிப்புணர்வினை கிராமத்து மக்களுக்கு வகுப்பெடுக்கும் வேலையை தற்சமயம் செய்கிறேன் என்பதால் எளிதாக மக்களிடம் பேசி இந்த விசயத்தினை தெரிந்துக் கொண்டேன்.
திருச்சியில் இருந்து இரண்டு வருடங்களுக்கு முன்புதான் எங்கள் கிராமத்திற்கு குடியேறினேன். பெரும்பாலும் விடியற்காலையில் என் பணி நிமித்தமாக கிளம்பினால், இரவில் தான் வீடு வருவேன். அதனாலும், தெருவில் முதல் வீடு தனித்த வீடு என்பதாலும், தெருவில் என்ன நடக்கிறது என்று இதுவரை எனக்கு தெரியவும் இல்லை .
சரி விசயத்திற்கு வருகிறேன். ஒரு லட்சம் வங்கி கடன் என்றார்கள். இதில் லோன் ஏற்பாடு செய்யும் பெண்ணிற்கு 1700 ரூபாய் கமிஷன். 5000 ரூபாய் டெபாசிட் பிடித்தம். சரி இதெல்லாம் பரவாயில்லை. கண்ணை மூடிக்கொண்டால் அடுத்த கொடுமை …
(கொடுமைகள் தொடரும் )
– காவியா சேகரன்.