“இருக்கு… ஆனா, இல்லை”- ஆயுஷ் மருத்துவமனைகளின் அவலம் ! தமிழக சுகாதாரத்துறை அலட்சியம் ! வீடியோ செய்தி
தேனி – திருவண்ணாமலையில் ஆயுஷ் மருத்துவமனை ”பில்டிங்” இருக்கு … ஆனால் “சிகிச்சை” கிடையாது!
வடிவேலுவின் அல்டிமேட் காமெடிக் காட்சிகளுள் ஒன்று, “அய்யா, என் கிணத்தைக் காணோம்” என்று கதறுவது. மற்றொன்று, “இருக்கு… ஆனா, இல்லை” என்பது. இந்த இரண்டு காமெடிக் காட்சிகளுக்கும் கணக்கச்சிதமாகப் பொருந்தி போகிறது, தேனி மற்றும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைகளில் செயல்படுவதாக கணக்குக் காட்டப்படும் ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனை விவகாரம்.
வீடியோ லிங்
தேனி மற்றும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனை வளாகத்தில், ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனை என்ற பெயர்ப்பலகை இருக்கிறது. பிரம்மாண்டமான கட்டிடம் இருக்கிறது. மருத்துவமனை ஒவ்வொன்றிலும் தலா 50 படுக்கை வசதிகளும் இருக்கிறது. ஆனால், என்ன? யார் ஒருவர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற விரும்பினாலும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்களோ, மருத்துவப் பணியாளர்களோ இல்லை என்பதுதான் வேடிக்கையானது.
தமிழக சுகாதாரத்துறையின் அலட்சியம் காரணமாகவே, இந்த அவலம் நீடித்து வருவதாக குற்றஞ்சாட்டுகிறது, ஆயுஷ் நலவாழ்வு அமைப்பு (AFAAQ).
என்னதான் பிரச்சினை என்ற கேள்வியோடு, ஆயுஷ் நலவாழ்வு அமைப்பின் தலைவர் டாக்டர் பா.ஸ்ரீமுகநாகலிங்கத்திடம் அங்குசம் சார்பில் பேசினோம். “ஆயுர்வேதா, யோகா, யுனானி, சித்தா, ஹோமியோபதி ஆகிய ஐந்து மருத்துவமுறைகளின் ஒருங்கிணைந்த துறைதான் ஆயுஷ் என்பது. மக்களுக்கான மருத்துவத்தை பன்முகத்தன்மையோடு செயல்படுத்தும் நோக்கத்தில், மத்திய அரசு தேசிய ஆயுஷ் மிஷன் (NAM) நிதியின் மூலம் மாநிலங்களில் ஆயுஷ் துறையில் இரண்டாம் நிலை, ( secondary care ) மூன்றாம் நிலை (Tertiary care) மருத்துவமனைகளை தொடங்குவதற்கு கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் நிதி உதவி செய்து வருகிறது.
இதன்படி, 10, 30, 50 படுக்கை வசதிகளை கொண்ட ஆயுஷ் மருத்துவமனைகளை நாடுமுழுவதும் செயல்படுத்துவதற்கான செயல்திட்டங்களை கொண்டிருக்கிறது. தமிழகத்தில் ஆயுஷ் மருத்துவமனைகள் அமைப்பதற்கு மத்திய அரசு கொடுக்கும் நிதி திட்டத்தின் கீழ் கடந்த 2016-17 ஆம் ஆண்டில் தேனி மற்றும் திருவண்ணாமலை ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் தலா 50 படுக்கை வசதிகளுடன் ஆயுஷ் மருத்துவமனை பிரிவை தமிழக சுகாதார துறை உருவாக்கியது. ஆனால், இந்த மருத்துவமனைகள் கொரோனா காலத்திற்கு முன்பே கட்டப்பட்டு நிறைவடைந்தும் இரண்டு வருடங்களாக திறக்கப்படாமல் முடக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 2023 இல் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த இரண்டு ஆயுஷ் மருத்துவமனைகளையும் காணொளிக் காட்சி மூலம் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார் . ஆனாலும், கடந்த 2022 -23 மற்றும் 2023- 2024 காலகட்டங்களில் மத்திய அரசிடம் எந்த நிதி உதவியும் கோராமல் இருந்து வருவதோடு, தேசிய ஆயுஷ் மிசன் வழிகாட்டல் படி பணியாளர்களையும் தலைமை மற்றும் சிறப்புநிலை மருத்துவர்களையும் இதுவரை நியமிக்கவில்லை.
குறிப்பாக, தேசிய ஆயுஷ் மிஷன் வழிகாட்டுதல்படி, ஒரு மருத்துவமனையில் ஆயுஷ் பிரிவு முழுமையாக செயல்பட வேண்டுமெனில், உள்நோயாளிகள் மருத்துவமனை கண்காணிப்பாளர், மூன்று சிறப்பு சிகிச்சை மருத்துவ நிபுணர்கள், 6 உதவி மருத்துவ அலுவலர், 1 உறைவிட மருத்துவர் என குறைந்தபட்சம் 10 மருத்துவர்களாகவது இருக்க வேண்டும். உதவிநிலை பணியாளர்கள், சிகிச்சை பணியாளர்கள், நர்சிங் பணியாளர்கள் என 50-க்கும் அதிகமான பணியாளர்களுடன் இயக்கப்பட வேண்டும். ஆனால், இதுவரை ஒரு மருத்துவர் மட்டும் நியமிக்கப்பட்டு, மற்ற பணியிடங்கள் எதுவும் நிரப்பப்படாமல் முடக்கி வைக்கப்பட்டிருக்கிறது.
சுமார் 14 கோடி ரூபாய் செலவழித்து கட்டடங்கள் கட்டி தலா 50 படுக்கை வசதிகளை புதிதாக ஏற்படுத்தியும் தற்போது வரையில், புறநோயாளிகள் பிரிவுகள் மட்டுமே இயங்கி வருகிறது.
இதற்கிடையில், கடந்த பிப்ரவரி மாதம் தேசிய ஆயுஷ் மிஷினின் கண்காணிப்புக் குழு தமிழகத்திற்கு ஆய்வுக்கு வந்தபொழுது, தேனி மருத்துவமனையில் ஆயுஷ் பிரிவு எப்போதும் போல இயங்குவது போல போலியாக கணக்கு காண்பித்திருக்கிறார்கள்.
இதேபோன்று, கடந்த 2018 ஆம் ஆண்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் 50 படுக்கைகள் கொண்ட ஆயுஷ் மருத்துவமனை அமைப்பதற்கு, 4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், இன்று வரை கட்டிடம் கூட கட்டப்படாமல் பணிகள் முடங்கிக் கிடக்கின்றன.
இதுதவிர, நாமக்கல், சென்னை அண்ணா மருத்துவமனை வளாகத்திலும் தலா 50 படுக்கைகளுடன் ஆயுஷ் மருத்துவமனையை நிறுவிக்கொள்ள மத்திய அரசின் சார்பில், பகுதியளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், அவையும் அப்படியே கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன.
ஆக, ஏற்கெனவே திறந்து வைக்கப்பட்ட தேனி, திருவண்ணாமலை உள்ளிட்டு, புதுக்கோட்டை, நாமக்கல், சென்னை அண்ணா மருத்துவமனை ஆகிய ஐந்து இடங்களிலும் 250 படுக்கைகளுடன் செயல்பாட்டு வந்திருக்க வேண்டிய ஆயுஷ் மருத்துவமனை, தமிழக அரசு சுகாதாரத்துறையின் அலட்சியம் காரணமாக தடைபட்டு கிடக்கிறது.
மிகவும் பின்தங்கிய உத்தரபிரதேச மாநிலத்தில் 19 ஆயுஷ் மருத்துவமனைகள் முழுமையாக மக்களின் பயன்பாட்டுக்கு வந்து விட்டன. சுகாதாரத்துறையில் முன்னணியில் இருப்பதாக சொல்லப்படும் தமிழகத்தில் முதல்வர் கையால் தொடங்கி வைக்கப்பட்ட ஆயுஷ் மருத்துவமனைகளைக்கூட சுகாதார துறை அதிகாரிகள் முடக்கி வைத்திருக்கின்றனர்.
ஆயுஷ் துறையில் தரமான அரசு கட்டமைப்பை முறையாக பயன்படுத்த தவறினால், பொருளாதார மற்றும் பின்தங்கிய கிராம மற்றும் நகர்ப்புற ஏழைகள் போலி மருத்துவர்களிடம் சிகிச்சை எடுக்கும் அவலநிலை தொடரும் .
தமிழகத்தில் முடக்கப்பட்டிருக்கும் ஐந்து ஆயுஷ் மருத்துவமனைகளையும் வெகு விரைவில் முழுமையான பொதுமக்களின் சுகாதார பயன்பாட்டுக்கு கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.” என்பதாக தெரிவிக்கிறார்.
மிக முக்கியமாக, இந்த சிக்கல்களை களைய, “சுகாதாரத்துறை செயலர் தலைமையில், சுகாதாரத்துறையின் உயர்மட்ட அலுவலர்களைக் கொண்ட உயர்மட்டக்குழுவை அமைக்க வேண்டும். அதில், ஆயுஷ் நலவாழ்வு சார்ந்த எங்கள் அமைப்பின் பிரதிநிதிகளும் இடம்பெறுவதை உறுதிபடுத்த வேண்டும். மிக முக்கியமாக, திட்டக்குழுவின் வழிகாட்டுதலுடன் இணைந்து வளர்ச்சித்திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் திறன் கொண்ட குழுவாக இது அமைய வேண்டும்.” என்பதை தீர்வாக முன்வைக்கிறார், டாக்டர் பா.ஸ்ரீமுகநாகலிங்கம்.
இந்த விவகாரம் தொடர்பாக, இந்திய மருத்துவத்துறை இணை இயக்குநரிடம் அங்குசம் சார்பில் பேசினோம். ’’சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் விசாரித்துவிட்டு பேசுகிறேன்’’ என்பதாக பதிலளித்தார்.
முதல்வரே திறந்து வைத்த ஆயுஷ் மருத்துவமனையின் உள்நோயாளிகள் பிரிவு இரண்டு ஆண்டுகளாக செயல்படாமல் முடங்கிக்கிடக்கிறது என்ற தகவலைவிட, இதுவரை சுகாதாரத்துறையின் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கே கூட எட்டாமல் இருப்பது தான் பேரதிர்ச்சியாக இருக்கிறது.
– ஆதிரன்.