தனியார் கொரியர் நிறுவன வாகனத்தில் தடை செய்யப்பட்ட கணேஷ் புகையிலை கடத்தல் ! ஓட்டுநர் கைது !
தமிழகம் முழுவதும் தடைசெய்யப்பட்ட போதைப்பாக்குகள், போதைப்புகையிலைப் பொருட்களின் விற்பணையை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். அதிரடி ரெய்டுகளை நடத்தி வருகிறார்கள். இருந்தாலும், கள்ளத்தனமாக மார்க்கெட்டில் போதைப்பொருட்களின் நடமாட்டம் முற்றிலும் தடை செய்ய முடியாத நிலையே நீடித்து வருகிறது.
இதற்கு முக்கிய காரணமே, அன்றாட பயன்பாட்டுக்கான சரக்கு வாகனப் போக்குவரத்தை கள்ளப்பொருட்களின் கடத்தலுக்கு பயன்படுத்தி வருவதை சொல்கிறார்கள்.
அப்படி ஒரு சம்பவம் விருதுநகரில் அரங்கேறியுள்ளது. வெளி மாநிலங்களிலிருந்து தனியார் கொரியர் வாகனத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து, சாத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் நாகராஜன் தலைமையிலான தனிப்படை போலீசார், அக், 24 அன்று காலை சாத்தூர் நான்கு வழிச்சாலை வெள்ளக்கரை ரோடு அருகே சேலத்தில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் கொரியர் வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர்.
அந்த வாகனத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் போல கையால் கசக்கி வாயில் அடைத்து பயன்படுத்தும் வகையிலான கணேஷ் புகையிலை பத்து மூட்டைகள் ஓட்டுனரின் இருக்கைக்கு கீழே மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர்.
கடத்தலில் ஈடுபட்ட தென்காசி மாவட்டம் திருவேங்கடம் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் ஸ்டாலினை கைது செய்தும் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய தனியார் கொரியர் நிறுவனத்தின் வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், “ஓட்டுநர் ஸ்டாலின் எப்போதெல்லாம் கொரியர் வாகனத்தில் பணிக்கு செல்கிறாரோ அப்போதெல்லாம் புகையிலையை கடத்தி நான்கு வழிச்சாலைகளில் உள்ள மாவட்டங்களான, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, ஆகிய இடங்களுக்கு தொடர்ந்து விற்பனை செய்து வந்ததாக” தெரிவித்திருக்கிறார்.
மேலும், இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் குறித்தும் தீவிர விசாரணையை சாத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் நாகராஜன் தலைமையிலான தனிப்படை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
— மாரீஸ்வரன்.