பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடிப்படை தீம் ‘கண்’ தான்….
இப்போது தமிழ் பிக்பாஸ் தொகுப்பாளர் விஜய்சேதுபதி வாராவாரம் சன்கிளாஸ் அணிந்துதான் நிகழ்ச்சியை நடத்துகிறார். சன் கிளாஸ் என்பது ஸ்டைலாக இருக்கலாம், கண் கூச்சம் போன்ற குறைபாடுகளுக்கு பயன்படுத்தலாம். ஆனால், ‘பிக்பாஸ்’ போன்ற விவாத நிகழ்ச்சியில் தொகுப்பாளரின் கண்ணையே பங்கேற்பாளர்கள் பார்க்க முடியாமல் விவாதிப்பது என்பது சரியல்ல. தொகுப்பாளரின் மனவோட்டத்தை அவரது கண்கள் மூலம் அறிய முடியும். நாம் ஒருவரோடு விவாதிக்கும்போது அவரது வாயைப் பார்ப்பதில்லை, கண்களைதான் பார்க்கிறோம்.

அந்த வாய்ப்பை விஜய்சேதுபதி தொடர்ச்சியாக இந்நிகழ்ச்சியில் மறுத்து வருகிறார். சில சமயங்களில் கண்ணாடி அணியாமல் வந்தாலும்கூட, பிரேக்குக்கு ‘உள்ளே’ போய்விட்டு வந்தபின்னர் கருப்புக் கண்ணாடியோடு வருகிறார். கடந்த சீசனில் அவர் கருப்புக் கண்ணாடியோடு பங்கேற்ற நிகழ்வுகள் குறைவாக இருந்ததாக நினைவு. விவாத நிகழ்ச்சிகளில் கருப்புக் கண்ணாடியோடு பங்கேற்பது என்பது தொகுப்பாளரின் பலகீனத்தை மறைப்பதற்குதான் உதவும். கண் நோய், லைட் அலர்ஜி போன்ற பிரச்சினைகளுக்கு விதிவிலக்கு அளிக்கலாம்.

முன்பு இதே நிகழ்ச்சியை தொகுத்துக் கொண்டிருந்த கமல்ஹாசன், பெரும்பாலும் கண்ணாடியே அணியாமல்தான் நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தார். ஒவ்வொரு பங்கேற்பாளரிடம் பேசும்போதும் கண்களாலேயே உணர்வுகளை கடத்துவார், அதட்டுவார், கொஞ்சுவார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடிப்படை தீம் ‘கண்’தான். அந்நிகழ்ச்சியின் லோகோவிலேயே அதனால்தான் கண் வரையப்பட்டிருக்கிறது. விஜய்சேதுபதி கண்ணு, மண்ணு தெரியாமல் பேசுகிறார் என்று எழுகிற விமர்சனத்தை தவிர்க்க வேண்டும்.
— கிருஷ்ணகுமார்.எல்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.