தந்தை பெரியாருக்குப் பாரத ரத்னா விருது – எதிர்ப்பும் – ஆதரவும் !
அண்மையில் நடைபெற்ற கடைசி நாடாளுமன்ற மக்களவைக் கூட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆற்றிய உரையில், சமூக நீதி காத்த தந்தை பெரியாருக்கும், வி.பி.சிங் இவர்களுக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். சமூக ஊடகங்களில் தொல்.திருமாவின் கருத்துக்கு எதிர்ப்பாகவும் ஆதரவாகவும் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. அதில் பேராசிரியர் த.செயராமன் அவர்களின் எதிர்ப்பும், சமத்துவமணி அவர்களின் ஆதரவும் அங்குசம் செய்தி இதழ் வாசகர்களுக்கு முன்வைக்கப்படுகின்றது.
பேராசிரியர் த.செயராமனின் எதிர்ப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தொல். திருமாவளவன் அவர்கள் நமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரியவர். பெரியாரைப் பெரிதும் மதிப்பவர் அவர். நாட்டின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் “பாரத ரத்னா” பெரியாருக்கு வழங்கப்பட வேண்டும் என்று அவர் கூறியது உயர்ந்த நோக்கில்தான். அதில் சந்தேகம் இல்லை. பாரத ரத்னா விருதைப் பார்ப்பனியத் தொண்டில் ஈடுபட்டவர்களுக்குத் தான் தொடர்ந்து வழங்கினார்கள். முதலில் வர்ணாசிரமப் பற்றாளர் ராஜாஜிக்கு வழங்கினார்கள்.
புத்தம், சமணம் ஆகியவை இந்து மதத்தின் உட்பிரிவுகள்தான் என்று அறிவுலக மோசடி செய்த டாக்டர் எஸ், இராதாகிருஷ்ணனுக்கு வழங்கினார்கள். ஏராளமான பார்ப்பனர்கள் மந்திரங்களை முழங்கக் குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற டாக்டர் ராஜேந்திரப் பிரசாத்துக்கு வழங்கினார்கள். இந்திய விடுதலையின்போது இந்து – முஸ்லீம் கலவரங்கள் நிகழ்ந்த நிலையில் இந்துக்களின் வன்முறைகளுக்கு ஆதரவாக இருந்தவர் வல்லபாய் பட்டேல். காந்தியார் படுகொலையில் குற்றவாளிகள் தப்பிக்கவும், படுகொலையை நிகழ்த்திய ஆர்.எஸ்.எஸ் மீதான தடை ஒன்றரை ஆண்டுகளில் நீங்கப்பட்டு,சர்வ சுதந்திரமாக மீண்டும் அது செயல்படவும் துணையாக நின்ற வல்லபாய் படேலுக்குப் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
இந்தியாவிற்கு இந்தி மட்டுமே ஆட்சி மொழியாக வருவதற்கு அரும்பாடுபட்ட புருஷோத்தம் தாஸ் டாண்டனுக்கு 1961 – இல் வழங்கப்பட்டது. இவ்வாறு தொடர்ந்து பார்ப்பனச் சேவையில் ஈடுபட்டவர்களுக்கு வழங்கினார்கள். அப்பட்டமாகத் தெரியும் என்பதால் நேருவுக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. பார்ப்பனியத்தோடு முரண்படாத தலைவர்களுக்குப் பின்னர் வழங்கினார்கள்.
ஒரு சில போற்றத்தக்க பெருமக்களுக்கும் வழங்கினார்கள். நாம் கருதுவது போலப் பாரத ரத்னா என்பது கறாராகத் தகுதியின் அடிப்படையில் வழங்கப்படவில்லை. அரசியல் காரணங்களுக்காகவும் தங்களுக்கு இருக்கும் அன்பைக் காட்டவும் வழங்கப்பட்டன. எம்ஜிஆர் அவர்களுக்கு ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போதும், அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு வி.பி.சிங் பிரதமராக ஆன பிறகும் வழங்கினார்கள். சமூக நீதி காவலர் வி.பி.சிங் பிரதமராக வந்த பிறகுதான் அண்ணல் அம்பேத்கருக்கு ஒரு விருதை வழங்க முடிந்தது என்றால், அந்த விருதின் தன்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இப்போது யாருக்கெல்லாம் வழங்குகிறார்கள்? சமூக நீதி பேசிய அம்பேத்கருக்கும் பாரத ரத்னா விருது. இரதயாத்திரை நடத்தி மதக் கலவரத்தை உருவாக்கி ஆயிரக்கணக்கானவர்கள் படுகொலைக்கும், பாபர் மசூதி இடிப்பிற்கும் காரணமான ஆர். எஸ்.எஸ். காரர் எல்.கே. அத்வானிக்கும் பாரத ரத்னா விருது! (பாரதத்தை அதன் உண்மையான பொருளில் படைக்க உழைத்தவர் எல்.கே அத்வானி என்ற சனாதனி) இன்று அத்வானிக்குப் பாரத ரத்னா வழங்குகிறவர்கள் நாளை சாவர்க்காருக்கு வழங்க மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
சமத்துவமணியின் ஆதரவு
பாரதத்தையே ஏற்காத தந்தை பெரியாருக்குப் பாரதரத்னா கோரிக்கை வைக்கிறோமே என்பது திருமாவளவனுக்குப் புரியாமலா இருக்கும்? நன்றாகப் புரியும். கோரிக்கை வைத்த உடனே கொடுத்துவிடப் போகிறார்களா என்ன? அதுவும் திருமாவுக்கு தெளிவாகவே தெரியும். பெரியார் உயிருடன் இருந்திருந்தால் இந்த விருதை மறுத்திருப்பார் என்பது நம்மைவிட நன்றாகவே திருமாவுக்குத் தெரியும். பிறகு ஏன் அந்தக் கோரிக்கை? 10 வருடங்களுக்கு முன் கலைஞர் இதே கோரிக்கையை வைத்தாரே? பெரியாருக்கு மட்டுமல்லாமல் அண்ணாவுக்கும் சேர்த்து வைத்தாரே, அதற்கு என்ன காரணமோ அதே காரணம்தான் இப்போது இன்னும் அதிகமாக வேண்டியிருக்கிறது.
பெரியாரின் கொள்கைகள் இந்தியா முழுவதும் பரவ வேண்டும் என்று இந்தியாவை ஏற்காதவர்களே சொல்வதில்லையா? அது போலத்தான். பெரியாரின் அஞ்சல் தலை வெளியிடப்பட்ட போது, இந்தியா முழுக்கப் பெரியார் அறிமுகம் ஆகிறாரே என்று நாமெல்லாம் மகிழவில்லையா? அதுபோலத்தான். ஆதிக்கத்தை எதிர்த்த பெரியாரை வட இந்தியாவிலுள்ள சூத்திரப் பஞ்சம மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்தக் கோரிக்கையே தவிர, பாரதத்தையோ அல்லது இந்தியாவையோ புகழ்ந்து பாட வேண்டும் என்பதற்காக அல்ல. தமிழ்நாட்டின் மீது ஒன்றிய அரசு ஆதிக்கம் செலுத்துகின்ற இந்த நேரத்தில், பெரியாரை வட இந்தியா முழுமைக்கும் கொண்டு செல்லத் தமிழ்நாட்டிலிருந்து ஒரு குரல் கேட்கிறது என்று வட இந்தியர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் அந்தக் கோரிக்கை. இந்த விவாதம் வட இந்தியா முழுக்கக் கொண்டு செல்லப்பட வேண்டும்.
தந்தை பெரியாரைத் தப்பும் தவறுமாகத் தமிழ்நாட்டிலேயே சிலர் சித்தரித்து வைத்திருக்கும் போது, சங்கிகள் மிகுந்த வடஇந்தியாவில் பெரியார் என்னவாகக் காட்டப்பட்டிருக்கிறாரோ அந்தப் பிம்பத்தை உடைத்து, மனித நேயத்தையும் சமூக நீதியையும் அவர்களுக்கும் காட்டுகின்ற முயற்சியாகத்தான் இந்தக் கோரிக்கையைப் பார்க்க வேண்டும். நெல்சன் மண்டேலாவுக்குப் பாரத ரத்னா விருது கொடுத்தபோது எப்படி அவருக்கும் இந்தியாவுக்கும் தொடர்பில்லையோ அதுபோலப் பெரியாருக்கும் இந்தியக் கருத்தியலுக்கும் எந்தக் காலத்திலும் தொடர்பில்லை. ஆனால் இந்திய ஒன்றியத்தில் வாழும் நமக்குப் பெரியாரை வட இந்தியா முழுமைக்கும் கொண்டு செல்ல வேண்டிய கடமை இருக்கிறது என்ற கோணத்தில், இந்த நாடாளுமன்றத்தின் கடைசி கூட்டத் தொடரில் திருமாவளவன் ஆற்றிய உரையைப் பார்ப்போம். மற்றபடி, ஒன்றிய அரசு இந்தக் கோரிக்கையை நிறைவேற்றாது என்பது திருமாவுக்கு தெரியாதா என்ன?
–ஆதவன்
இதில் குறிப்பிட்ட தலைவர்கள் அனைவருக்கும் காங்கிரஸ் கட்சி தான் வழங்கியது