பாரதிதாசன் பல்கலைக்கழக கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் ! மாணவர் பெருமன்றம் கோரிக்கை !
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் பல்வேறு வகையினங்களுக்கும் உயர்த்தப்பட்ட கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் சார்பில் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
இந்த விவகாரம் தொடர்பாக, அவ்வமைப்பின் மாநிலத் தலைவர் க.இப்ராகிம் மற்றும் மாநிலச் செயலாளர் பா.தினேஷ் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் விவசாய தொழிலை பிரதானமாகக் கொண்ட டெல்டா பகுதியில் உள்ள மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பை உறுதி செய்வதற்காக 1982 ஆம் ஆண்டு திருச்சியை மையமாகக் கொண்டு புதியதோர் உலகம் செய்வோம் என்ற முழக்கத்தை முன்வைத்து பாரதிதாசன் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் உறுப்புக்ன கல்லூரிகளில் பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய, நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய பின் தங்கிய பகுதிகளில் வாழும் மாணவர்களும் பெரும் அளவில் படித்து வருகின்றனர். இப்படி விளிம்பு நிலை குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களின் முக்கிய கல்வி ஆதாரமான பாரதிதாசன் பல்கலைக்கழகம் அவப்பொழுது பல்வேறு வகையான கட்டணங்களை உயர்த்துவதை தொடர்கதையாக கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், தற்போது 07.10.2024 அன்று பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் உறுப்புக்கல்லூரிகள் படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு வகை கட்டணங்களை உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இவ்வாறு இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் 75 ரூபாயில் இருந்து 100 ரூபாயாகவும், செய்முறை தேர்விற்கு 100 ரூபாயில் இருந்து 140 ரூபாயாகவும், முதுகலை தேர்விற்கு 150 ரூபாயில் இருந்து 175 ரூபாயாகவும் மற்றும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், மொத்த மதிப்பெண் சான்றிதழ் கட்டணங்களும் பன்மடங்கு உயர்த்தப்பட்டு இருப்பது வன்மையான கண்டனத்திற்கு உரியது.
மேலும் குறித்த அவகாசத்தில் செலுத்த தவறும் மாணவர்களிடம் அபராத தொகை வசூலிப்பது மாணவர்களை சுரண்டும் போக்காகும். எனவே பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களின் நலன் கருதி உயர்த்தப்பட்ட கட்டணங்களை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் தேர்வு கட்டணம் செலுத்தும் அவகாசத்தை நீடிப்பு செய்து தர வேண்டும் என்று அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், தமிழ்நாடு மாநிலக் குழு வலியுறுத்துகிறது.” என்பதாக குறிப்பிட்டிருக்கிறார்கள்.
— அங்குசம் செய்திப்பிரிவு.