அங்குசம் சேனலில் இணைய

அங்குசம் பார்வையில் ‘பைசன்’ காளமாடன்’ 

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தயாரிப்பு : ‘அப்ளாஸ் எண்டெர்டெய்மெண்ட்’ சமீர் நாயர், தீபக் சாகல் & நீலம் புரொடக்‌ஷன்ஸ்’ பா.இரஞ்சித், அதிதி ஆனந்த். எழுத்து—இயக்கம் : மாரி செல்வராஜ். நடிகர்-நடிகைகள் : துருவ் விக்ரம், பசுபதி, அமீர், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், லால், மதன் கிருஷ்ணமூர்த்தி, அழகம் பெருமாள், அனுராக் அரோரா,சுபத்ரா ராபர்ட். ஒளிப்பதிவு : எழில் அரசு,, இசை : நிவாஸ் கே.பிரசன்னா, எடிட்டிங் : சக்தி திரு, ஸ்டண்ட் : திலீப் சுப்பராயன், ஆர்ட் டைரக்டர் : குமார் கங்கப்பன், நடனம் : சாண்டி, காஸ்ட்யூம் டிசைனர் : ஏகன் ஏகாம்பரம், மேக்கப்: கலையழகன், பி.ஆர்.ஓ. : குணா, யுவராஜ், சதீஷ் [ எய்ம் ]

இயக்குனர் மாரி செல்வராஜின் தூத்துக்குடி மாவட்டம் தான் கதைக்களம். அப்படின்னா அதே சாதிக் கதை தானே, அதே வெட்டுக்குத்து தானே நீங்க நினைச்சா.. கண்டிப்பாக இல்லை.  அதுக்கு நேர்மாறாக, சாதிக்கத் துடிக்கும் ஒரு கபடி வீரனின் போராட்டம் தான் இந்த ‘பைசன்’ என்பதை முதலிலேயே சொல்லி, ஆகச்சிறந்த கதை சொல்லியாக ஜொலித்திருக்கும் மாரி செல்வராஜுக்கு மனப்பூர்வமான பாராட்டுக்களை சொல்லிவிடுவோம்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

‘பைசன்’ காளமாடன்’  வனத்தி கிராமத்தில் தலித் சமூகத்தில் பிறந்த கிட்டாவுக்கு[துருவ்] சின்ன வயதிலிருந்தே கபடியில் பேரார்வம், அந்த விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியம். இவரின் லட்சியத்திற்கு துணை நிற்கிறார் அப்பள்ளியின் விளையாட்டு ஆசிரியர் மதன் கிருஷ்ணமூர்த்தி. ஆனால் அந்த ஊரில் கொழுந்துவிட்டு எரியு,ம் சாதித்தீக்குப் பயந்து மகனின் ஆசைக்கு தடை போடுகிறார் அப்பா பசுபதி. மகனின் லட்சியமும் வேட்கையும் குறையாமல் இருப்பதைப் பார்த்து பசுபதியே சம்மதிக்கிறார். மாநில அளவிலான கபடிக்குழு, தேசிய அளவிலான கபடிக்குழு என படிப்படியாக உயர்ந்து 1994-ல் நடக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பாகிஸ்தானுடன் மோதும் வாய்ப்பும் கிட்டாவுக்கு கிடைக்கிறது.

ஆசியப் போட்டியில் இந்திய கபடி அணி தங்கப்பதக்கம் வென்றதா? மாபெரும் வீரனாக கிட்டா ஜெயித்தானா? இதான் ‘பைசன்’ காளமாடன்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

கிராமத்து மண்ணின் நிறம், மனிதர்களின் குணம் மாறாமல் அச்சு அசலாக திரைமொழிக்கு கடத்துவதில் வல்லவன் என்பதை நான்காவது முறையாக இந்த ‘பைசன்’ மூலம் நிரூபித்துவிட்டார் இயக்குனர்-எழுத்தாளர் மாரிசெல்வராஜ். விளையாட்டு வீரர்களை சினிமாவில் ஷோக்காக காட்டுவார்கள். ஆனால் மாரி செல்வராஜோ, துருவ் என்ற சினிமா நடிகனை நிஜமான கபடி விளையாட்டு வீரனாக மாற்றி பிரமிக்க வைத்துள்ளார்.

‘பைசன்’ காளமாடன்’  படைப்பாளி மாரிசெல்வராஜின் மனசும் மூளையும்  யோசித்த விளையாட்டு வீரனுக்கு உருவம் கொடுத்து, அதற்கு உயிரும் கொடுத்து, அதற்கு அசாத்திய உழைப்பையும் கொடுத்து கபடி வீரன் கிட்டானாக வெற்றிக்கொடி நாட்டியுள்ளார் துருவ் விக்ரம். கபடி பயிற்சிக்காக முழு வாழை மரத்தை இரு  கைகளாலும் தோளில் சுமந்தபடி ஓடுவது, அக்கா ரஜிஷா விஜயனை ஏரில் உட்கார வைத்து வயக்காட்டில் இழுப்பது, தண்ணீரில் ஓடுவது, மரத்தில் ஏறுவது, மனசுக்கு தப்புன்னு தெரிந்தா பல கிலோ மீட்டர் ஓடிக் கொண்டே இருப்பது, உள்ளூரிலும் ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் கபடி மைதானத்தில் வித்தியாசம் காட்டியிருப்பது என, மாரி செல்வராஜின் ஆதர்ஷ நாயகனான நிஜ கபடி வீரர் மனத்தி கணேசனை கண்முன்னே கொண்டு வந்துவிட்டார் இந்த வனத்தி கிட்டான் என்ற துருவ்.

தனது அக்கா வயதுள்ள அனுபமா பரமேஸ்வரனின் காதலை நிராகரிப்பது, ஊருக்குள் தாண்டவமாடும் சாதி வெறியை நினைத்து அப்பா பசுபதியிடம், “எனக்கு ஒண்ணுமே புரியலப்பா” என விம்மி அழுவது,  ஊரைவிட்டு ஓடு என பசுபதி சொல்லும் போது, “நான் ஏம்பா ஓடணும்” என வெடித்து அழுவது, அமீரால் வெட்டுப்பட்டு  ரத்தச் சகதியில் சரிபவனைப் பார்த்து சுவரோரம் ஒதுங்கி, பயத்தில் வேர்த்துக் கொட்டுவது,  ஒரு கை ஒடிந்த நிலையில் மைதானத்தில் சீற்றத்துடன் விளையாடுவது, குறிப்பாக க்ளைமாக்ஸில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் காட்டும் வீரம், விவேகம் என அருமைச் சகோதரன் துருவ் ரசிகர்களின் மனசெல்லாம் காளமாடனாக கம்பீரமாக காட்சி தருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். இதே கடின உழைப்பு, சீரிய முயற்சியுடன் பயணித்தால் திரைவானில் வெற்றி நட்சத்திரமாக ஜொலிக்கலாம்.

‘பைசன்’ காளமாடன்’  பசுபதி என்னும் மகா கலைஞனைப் பற்றி, அவரின் நடிப்புத்திறன் பற்றி நாம் சொல்லித் தெரியவேண்டும் என்பதில்லை. “ஆடு ஒண்ணுக்குப் போனதுக்கே வெட்டிச் சாச்ச சாதிவெறி ஊருங்க இது” என கந்தசாமியிடம் [லால்] பேசும் சீனாகட்டும், “கத்தியை தூக்கமாட்டேன்னு சத்தியம் பண்ணு” என மகனிடம் சொல்லும் அதே பசுபதி, ஒரு கட்டத்தில் “கையில எதையாவது எடுடா” என ஆவேசம் காட்டும் இடம் உட்பட பல காட்சிகளில் பின்னிட்டார் மனுஷன்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

படத்தில் நான்கைந்து காட்சிகளே என்றாலும் ஃபயராக ரொம்பவும் பவர்ஃபுல்லாக வருபவர் பாண்டியராஜா[அமீர்]வாக வரும் நம்ம அண்ணன் அமீர் தான். பசுபதி பாண்டியனை நினைவுபடுத்தும் பாண்டியராஜா கேரக்டரில் நடிப்பு ராஜாவாக தெரிகிறார் அமீர். “இந்தப் புள்ளைக்காகத் தான் அம்புட்டு ஒசரத்துக்குப் போயிருக்கான் அந்தப் பையன், இங்க யார் மேல, யார் கீழங்கிற சண்டையில காலம் ஓடிரும் போல” மாரிசெல்வராஜின் மனசைப் பேசியிருக்கார் அண்ணன் அமீர்.

‘பைசன்’ காளமாடன்’  இதற்கடுத்து மனதில் நிற்பவர் பி.டி.மாஸ்டராக வரும் மதன் கிருஷ்ணமூர்த்தி தான். துருவ்வை சிறந்த கபடி வீரனாக்க அவர் எடுக்கும்முயற்சிகள், “இவன் நம்மாளுகளா?” என புரோட்டாக் கடையில்  துருவ்வைக் காட்டி பேசுபவனிடம், “ஏலே வாய்ல சோத்தைத் திங்கியா, வேற எதுவும் திங்கியா? என சீறுவது, துருவ் ஊர்க்காரர்களிடம் பேசும் போது, “இங்க பிரச்சனைங்கிறது முக்கியமில்ல, யாருடன் யாருக்கு பிரச்சனைங்கிறது தான் முக்கியம்” என ஆதங்கப்படுவது என மதனின் இருப்பு, ஜொலிப்பு.

இன்னொரு சாதித் தலைவர் கந்தசாமியாக லால் செம ஜோர். “ஏலே சாதி பாத்தாலே உன்னை என் டீமில சேர்த்தேன்” என துருவ்விடம் உருகும் சீனிலும் “இதான்லே நான் உன்னைப் பார்க்குறது கடைசி” என துருவ்வைக் கட்டியணைத்து கலங்கும் சீனிலும் சபாஷ் போட வைக்கிறார் லால்.

அனுபமா பரமேஸ்வரன் கொஞ்சம் மெலிந்து, கன்னம் ஒட்டிப் போயிருந்தாலும் நடிப்பில் கனம் காட்டியிருக்கார். இதே போல் துருவ்வின் அக்காவாக ரஜிஷா விஜயன், நேஷனல் டீமில் துருவ்வைச் சேர்க்க பாடுபடும் அழகம் பெருமாள், அவரது மகளாக வருபவர், அனுபமாவின் அப்பா சுந்தரமாக வருபவர், அமீரின் ஆலோசகராக வரும் பெரியவர், இந்திய கபடி அணியின் கேப்டன் ரத்னமாக வரும் நடிகர், கபடி அணியின் கோச்சாக வரும் அரோரா என எல்லாக் கலைஞர்களுமே திரையில் நன்றாக தெரிகிறார்கள், தெரியவைத்துள்ளார் படைப்பாளி மாரி செல்வராஜ். ஜெயலலிதா ஆட்சியின் கொடூர நிகழ்வான கொடியன்குளத்தையும் ‘பைசனில்’ பார்க்க வைத்துள்ளார் மாரிசெல்வராஜ்.

‘பைசன்’ காளமாடன்’  ஒளிப்பதிவாளர் எழிலரசுவின் உழைப்பும் நிவாஸ் கே.பிரசன்னாவின் ”காட்டரளி மாலைகட்டி ஓடிவரான் காளமாடன்” உட்பட எல்லாப் பாடல்களும் பின்னணி இசையும் , குறிப்பாக கை ஒடிந்த பின் துருவ் விளையாடும் கபடிக் காட்சி, க்ளைமாக்சில் ஜப்பானில் நடக்கும் ஆசிய விளையாடுப் போட்டிக் காட்சிகளின் பின்னணி இசையும் பைசனின் பாய்ச்சலுக்கு பக்கபலம்.

வனத்தி கிராமத்தையும் 1990-களின் கபடி மைதானங்களையும் நாம் பார்ப்பதற்கு உறுதுணையாக இருந்துள்ளார் ஆர்ட் டைரக்டர் குமார் கங்கப்பன். சகதியிலும் வயக்காட்டிலும் நடக்கும் ஆக்‌ஷனில் தெரிகிறார் திலீப் சுப்பராயன்.

‘பைசன்’ காளமாடன்’ கொண்டாடப்பட வேண்டியவன்.

 

—     ஜெடிஆர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.