திமுக எம்.பி.யைக் கண்டித்து தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற பாஜகவினர்
திமுக எம்.பி.யைக் கண்டித்து
தடையை மீறி
ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற பாஜகவினர்
திமுக எம்.பி.யைக் கண்டித்து தஞ்சை ரயில் நிலையம் முன்பாக காவல்துறையினரின் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நீடித்தது.
தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் ஆகஸ்ட் 6-ம் தேதி அம்ரித் திட்டத்தின் கீழ் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. இப் பணிகளை பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியின்போது ‘பாரத் மாதா கி ஜெய்’ என முழக்கமிட்ட பாஜகவினரை ஒருமையிலும், அவதூறாகவும் பேசிய திமுகவைச் சேர்ந்த தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்தைக் கண்டித்து தஞ்சை ரயில் நிலையம முன்பு இன்று (திங்கள்கிழமை) மாலை பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை பாஜகவினர் செய்து வந்தனர்.
இப் போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர்.
அதோடு ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தஞ்சை ரயில் நிலையம் முன்பாக தஞ்சை சரக காவல்துறை டிஐஜி ஜெயச்சந்திரனின் நேரடி கண்காணிப்பில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், காவல்துறையினரின் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட பாஜகவினர் தஞ்சாவூர் ரயில் நிலையத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து அணி அணியாக வந்தனர்.
அப்போது திமுகவைச் சேர்ந்த தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்தையும், ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்த காவல்துறையினரையும் கண்டித்து பாஜகவினர் கோஷங்கள் எழுப்பினர். அங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் பாஜகவினரை தடுத்து நிறுத்தி கைது செய்து அழைத்துச் சென்றனர்.
மாநில பொதுச் செயலாளர் கருப்பு எம்.முருகானந்தம் பாஜகவினர் புடைசூழ பேரணியாக தஞ்சை ரயில் நிலையத்திற்கு வந்தார். அவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
பாஜக தெற்கு மாவட்டத் தலைவர் ஜெய் சதீஸ், வடக்கு மாவட்டத் தலைவர் சதீஸ்குமார் உள்பட பாஜகவைச் சேர்ந்த சுமார் முந்நூறு பேர் கைது செய்யப்பட்டனர்.
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கருப்பு முருகானந்தம், ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்கெனவே அனுமதி கேட்டிருந்த நிலையில் திடீரென போலீஸார் அனுமதி மறுத்துவிட்டதாகக் கூறினார்.
நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று தேசிய அளவில் உள்ள நிர்வாகிகளை அழைத்து வந்து மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றார் கருப்பு முருகானந்தம்.