அங்குசம் பார்வையில் ‘ப்ளடி பெக்கர்’
அங்குசம் பார்வையில் ‘ப்ளடி பெக்கர்’
தயாரிப்பு : ஃபிலெமெண்ட் பிக்சர்ஸ் நெல்சன். டைரக்ஷன் : சிவபாலன் முத்துகுமார். நடிகர்-நடிகைகள்; கவின், ராதாரவி, ரெடின் கிங்ஸ்லி, பிரியதர்ஷினி மற்றும் பலர்…பலர்….. ஒளிப்பதிவு : சுஜித் சாரங், இசை : ஜென் மார்ட்டின், எடிட்டிங் : நிர்மல், ஆர்ட் டைரக்டர் : மணிமொழியன் ராமதுரை, தமிழ்நாடு ரிலீஸ் : ஃபைவ் ஸ்டார் செந்தில். பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா & அப்துல்நாசர்.
கால் ஊனம், கை ஊனம் என பொய் சொல்லிப் பிச்சையெடுக்கும் கவினுக்கு பெரிய அரண்மனை போன்ற பங்களாவில் வாழணும் என்ற ஆசையும் லட்சியமும் இருக்கு. பெரிய மனிதர் ஒருவரின் நினைவு நாளை முன்னிட்டு, அரண்மனை ஒன்றில் தடபுடல் விருந்து நடக்கிறது. இதற்காக பிச்சைக்காரர்கள் சிலரை அங்கே அழைத்துப் போகிறார்கள். இதில் கவினும் ஒருவர்.
விருந்து முடிந்ததும் யாருக்கும் தெரியாமல் அந்த அரண்மனைக்குள் புகுந்துவிடுகிறார் கவின். அங்கே போன பின்பு தான் ஒரு பெரும் கூட்டம் ஒன்று அந்த சொத்தைக் கொள்ளையடிக்கும் திட்டம் தெரிகிறது. இவருக்குத் தெரிந்துவிட்டது என தெரிந்து கொண்ட அந்தக் கூட்டம், கவினையும் போட்டுத் தள்ள பிளான் போடுகிறது. கவின் தப்பிச்சாரா? இல்ல படம் பார்க்கும் நாம தப்பிச்சமா? இதான் இந்த ‘ப்ளடி பெக்கர்’ க்ளைமாக்ஸ்.
ஆள் மெலிந்து, கருப்பாகி, பிச்சைக்கார கெட்டப்புக்கு ரொம்பவே மெனக்கெட்டிருக்கார் கவின். ஆனால் தகிடுதத்தோம், ததிகினத்தோம் போடும் திரைக்கதையும் பிளாக் காமெடி என்ற பெயரில் கடுப்பேத்தும், எரிச்சலூட்டும் சீன்களும் நம்மைப் பார்த்து “ப்ளடி ஃபூல் ஏண்டா இங்க வந்த?” என்கிறது.
இதே மாதிரி அடித்தொண்டையில கத்துறது தான் காமெடின்னு நம்பிக்கிட்டிருந்தேன்னு வை, எப்பா ரெடின் கிங்ஸ்லி வண்டி ரொம்ப நாள் ஓடாதுப்பு.
ஒரு மாதத்திற்கு முன்பு வெளியான இந்தப் படத்தின் புரமோ வீடியோ ஒன்றில், “டேய் கவினுக்குப் போட்ட அந்த பிச்சைக்கார மேக்கப் செட்களை பத்திரமா வைங்கடா “ என்பார் ரெடின். “ஏண்டா?” என்பார் படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் நெல்சன். “பின்ன பட ரிலீசுக்குப் பிறகு உனக்கு உதவும்ல” என்பார் ரெடின் கிங்ஸ்லி.
-மதுரை மாறன்