தமிழ்நாட்டில் பார்ப்பன தர்ஹாக்கள் !
“நெருங்கியவர்””நண்பர்” என்ற பொருளைத்தரும் “வலி”என்ற அரபுச் சொல்லின் பன்மையே “அவுலியா”அல்லது வலிமார்களாகும் .
உலகத்தில் ஒரே நேரத்தில் 440 வலிமார்கள் இருப்பார்கள். ஒருவர் இறப்பிற்குப் பிறகு அவருக்கு அடுத்த நிலையில் இருப்பவர் “வலி” அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவார்.
சைவத்தில் நாயன்மார்கள், வைணவத்தில் ஆழ்வார்கள், கிறிஸ்தவத்தில் புனிதர்கள் என்று அழைப்பார்கள். இவர்கள் இறையடியார்கள். இஸ்லாத்தின் இறையடியார்களை அவுலியாக்கள் என்ற வலிமார்கள். இத்தகைய வலிமார்களின் அடக்கஸ்தலம் தான் தர்ஹா என அழைக்கப்படுகிறது.
தர்ஹா என்ற பாரசீகச்சொல்லுக்கு உறைவிடம் என்று பொருள். ஒருவர் அடக்கம் செய்யப்பட்ட புதைகுழியை அரபு மொழியில் கபுறு என்பர். புதைகுழி உள்ள இடம் கபுருஸ்தான் எனப்படும்.அதன் மேல் கட்டப்படும் சமாதி கோரி எனப்படும்.கோரியை மையமாக வைத்து சுற்றி எழுப்பப்படும் கட்டிடமே தர்ஹா. வலிமார்களுக்கு அதிசய சக்தியை இறைவன் அளிப்பதாக நம்புகிறார்கள். அதற்கு கராமத் என்று பெயர்.
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பார்ப்பன சாதியைச் சேர்ந்த சிலர் இஸ்லாமிய இறையடியார்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளனர். அவர்களின் நினைவாகவும் தமிழ்நாட்டில் சில இடங்களில் தர்ஹாக்கள் உள்ளன.
கிபி 15 ம் நூற்றாண்டில் மதுரையில் வாழ்ந்தவர் மீனாட்சி சுந்தரம் அய்யர். இசையிலும், தமிழிலும் புலமை பெற்றவர். இஸ்லாம் சமயத்தைத் தழுவி மீனா நூர்தீன் என்ற பெயர் பெற்றார். அவுலியா நிலைக்கு உயர்ந்த இவரது அடக்க ஸ்தலம் மதுரை தெற்கு வெளி வீதியில் மீனா நூர்தீன் வலி தர்ஹா என்ற பெயரில் உள்ளது. இவர் வழி வந்த பார்ப்பனர்கள் பலர் இந்த தர்ஹா விழாவில் இன்றளவும் பங்கேற்கின்றனர்.
பாபாசேக் அலாவுதீன் என்பவருக்கும், தஸ்தகீர் என்ற அவரது சீடருக்கும், பார்ப்பன சாதியிலிருந்து இஸ்லாத்தை ஏற்று ஹபீஸ் அம்மா என்று பெயர் பெற்றவருக்கும் சேர்த்து, நாகபட்டினத்திற்கும் வேளாங்கண்ணிக்கும் செல்லும் வழியில் ஒரு தர்ஹா உள்ளது. இதற்கு பாப்பா கோயில் தர்ஹா என்று பெயர். இந்துக்களும் இஸ்லாமியர்களும் இங்கு திரளாக வருவது இன்றளவிலுமான நடைமுறை.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தர்மபுரிக்கும், சேலத்திற்கும் இடையில் தொப்பூர் என்ற ஊர் உள்ளது. இந்த ஊரில் உள்ள தர்ஹாவிற்கு ஹாவாலிக் தர்ஹா எனப் பெயர். இந்த தர்ஹாவில் பார்ப்பன பெண் ஒருவர் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். இங்கு நேர்த்திக்கடன் செய்ய வருவோர் இந்துக்களுக்கு முதலில் உணவு பரிமாறிய பிறகே இஸ்லாமியர்களுக்கு இங்கு உணவு பரிமாறப்படுகிறது.
தஞ்சை நகரின் கிழக்குப்பகுதியில் பழைய மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள தர்ஹாவிற்கு பாப்பாத்தியம்மன் தர்ஹா என்று பெயர். இங்கு இஸ்லாமிய சமயத்தை தழுவிய பார்ப்பனியப் பெண் ஒருவரும், அவருக்கு இஸ்லாத்தை சொல்லிக் கொடுத்த அவுலியா ஒருவரும் அடுத்தடுத்து அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். இங்கும் இந்துக்கள் சந்தனக்கூடு விழாவில் திரளாகப் பங்கேற்கின்றனர்.
இப்பதிவின் நோக்கம் யாதெனில் தமிழகத்தில் மதவெறியர்கள் எவ்வளவுதான் முட்டி மோதினாலும் பெரிய அளவிற்கு எடுபடாததன் காரணம் மக்களின் வாழ்வியலில் இத்தகைய பண்பாட்டுக் கூறுகள் மெல்லியதாய் கலந்துள்ளது.
வழிபாடுகள் அனைத்தும் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட முறை என்றாலும், அதற்குள்ளும் மனிதாபிமான நரம்பு மண்டலங்கள் பின்னிப்பிணைந்துள்ளது.
முருக ராவுத்தரையும்
சிவ ராவுத்தரையும் அறிவீர்களா?
அடுத்த பதிவு அதுதான்.
— சூர்யா சேவியர்.