கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கையில் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல், அத்தியாவசியப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.அத்தியாவசியப் பொருள்களுக்காக மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 13 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட் டுள்ளது. தெருவிளக்குகளும் அணைக் கப்பட்டுள்ளதால் இலங்கை இருளில் மூழ்கியுள்ளது. உயிரைப் பாதுகாக்கும் அத்தியாவசிய மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அவசர அறுவை சிகிச்சைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
மின்சாரத் தட்டுப்பாட்டால் தவிக்கும் இலங்கைக்கு உதவுவதற்கு இந்தியா அனுப்பி வைத்த 40,000 மெட்ரிக் டன் டீசல் கடந்த சனிக்கிழமை 02.04.2022 அன்று இலங்கை சென்றடைந்தது. எரிபொருள்) கடனுதவி அளிக்கும் திட்டத்தின் கீழ் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 40,000 மெட்ரிக் டன் டீசல், இலங்கை எரிசக்தி அமைச்சர் காமினி லோகுகேவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு இந்தியா எரிபொருள் வழங்குவது நான்காவது முறையாகும். கடந்த 50 நாள் களில் இதுவரை 2 லட்சம் மெட்ரிக் டன் எரி பொருள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.
அண்மையில், இலங்கை நிதி மந்திரி பசில் ராஜபக்சே இந்தியா வந்து பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதையடுத்து இலங்கைக்கு உணவுப் பொருள்கள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கொள் முதல் செய்வதற்காக இலங்கைக்கு ரூ.7,500 கோடி (100 கோடி டாலர்) கடனுதவி வழங்குவதாக இந்தியா அண்மையில் அறிவித்தது. இதனை வெறும் கடனாக கொடுக்காமல், கட்சத் தீவினை முழுமையாக வாங்குவதற்கான தொகையாகவும், மேலும் இலங்கையில் தமிழர்களுக்காக நிலத்தையும் வாங்கினால் நல்ல அரசியல் ராஜதந்திரமாக இருக்கும்.