தமிழ் வழியில்…மருத்துவக் கல்வி…  துணை நிற்கும் “தமிழினி துணைவன்”

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

அரசு மேனிலைப் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி பயின்றவர்கள் பலருக்கும் மருத்துவக் கல்வி பயில வேண்டும் என்கிற எண்ணமும் ஆசையும் இருக்கும் அல்லவா? அரசு மேனிலைப் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி பயின்றவர்கள் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று, 7.5 சதவீத இடஒதுக்கீடு மூலமாக அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  இதுவரை தமிழ்வழியில் மட்டுமே படித்து வந்தவர்களுக்கு திடீர் என மருத்துவக் கல்லூரியில், ஆங்கில மொழியில், மருத்துவப் பாடங்களை படிக்க வேண்டும் எனில் புரிதல் குறித்துப் பல்வேறு சிரமங்கள் அவர்களுக்கு இருக்காதா என்ன? இருக்கத்தான் செய்யும். அவர்களுக்காக என்ன செய்வது?

முதலாமாண்டு மருத்துவக் கல்வி என்பது முதலில் புரிதலுக்கும், அடுத்து புரிந்து கொண்டு படிப்பதற்கும், பின்னர் அதனை உணர்ந்து மனதில் இருத்திக் கொள்வதற்கும், வெளிப்படையாகச் சொல்வதென்றால் அவர்கள் போராடித் தான் ஆக வேண்டும். அத்தகையோர்கென்றே பிரத்யேகமாக தொடங்கப் பட்டதுதான் ‘தமிழினி துணைவன்’ வாட்ஸ்அப் குழு.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

தமிழ்வழிக் கல்வி பயின்று மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த வர்களுக்கு என்று மட்டுமே “தமிழினி துணைவன்” என்கிற வாட்ஸ்அப் குழு 2022 பிப்ரவரி தொடங்கப்பட்டு, தொடர்ந்து இயங்கி வருகிறது.

3

மருத்துவக் கல்லூரியின் முதலாமாண்டு மாணவ,மாணவியர்க்கு இது மிகச் சிறந்த வழித்துணை ஆகும். சுமார் நானூறுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் இதில் இணைந்துள்ளனர். தமிழினி துணைவன், தமிழினி துணைவன் 2 என்கிற இரண்டு வாட்ஸ்அப் குழுக்கள். அதன் மாணவ, மாணவியர்களிடம் அவ்வப்போது மருத்துவக் கல்லூரிகளில் நடத்தப்படும் (ஆங்கில மொழி) மருத்துவப் பாடங்களை ஆங்கிலத்திலும் சொல்லி அதனை அப்படியே தமிழ் மொழியில் விரிவாக எடுத்துக் கூறி பாடங்கள் நடத்துகின்றனர். மாணவ மாணவியர்க்குப் புரியாத வகையிலான மருத்துவ ரீதியான ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழில் விளக்கம் அளித்து தெளிவு படுத்துகின்றனர்.

“என் பெயர் குமார் சக்திவேல். என் அப்பா, அம்மா தள்ளுவண்டியில் நிலக்கடலை வறுத்து வியா பாரம் செய்து வருகின் றனர். அரசுப்பள்ளியில் தமிழ்வழிக் கல்வி படித்த வன் நான். இடஒதுக்கீடு மூலமாக சென்னை மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு சேர்ந்துள்ளேன். மருத்துவ கல்லூரியில் ஆரம்பத்தில் பாடங்கள் நடத்தியபோது முதலில் எனக்குக் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட மாதிரி இருந்தது. ‘தமிழினி துணைவன்’ வாட்ஸ்அப் குழுவில் இணைந்தேன். கல்லூரியில் ஆங்கிலத்தில் நடத்தப்படும் பாடங்களைக் கூர்ந்து கவனித்தேன். முக்கியமான ஆங்கில வார்த்தைகளைக் குறித்து வைத்துக் கொள்வேன். அந்த ஆங்கில வார்த்தைகளுக்கான தமிழும் அதன் விரிவான பொருளும் எங்கள் ‘தமிழினி துணைவன்’ வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்து, பின்னர் அதன் முழுமையானப் பொருளைத் தெரிந்து கொள்வேன்.

4

தமிழினி துணைவன் வாட்ஸ்அப் குழு, ஆன்லைனில் கூகுள் மீட் ஆப்சனில் வகுப்புகள் நடத்துகிறது. அதில் நாங்கள் பங்கேற்று பாடங்கள் சார்ந்து சந்தேகங்களைக் குறிப்பிட்டு பதில்கள் பெற்று தெளிவுபடுத்திக் கொள்கிறோம். ‘தமிழினி துணைவன்’ வாட்ஸ்அப் குழுவானது, மருத்துவப் பாடங்களுக்கான ஆங்கில மொழி வழித்துணைவன் ஆகவும் எங்களுக்கு இருந்து வருகிறது” என்கிறார் குமார் சக்திவேல்.

“நான் தொட்டியம் காட்டுப் புத்தூர் பகுதியில் இருந்து வந்துள்ள கிராமப்புற மாணவி. தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ளேன். பனிரெண்டாம் வகுப்பு வரை தமிழ்வழி கல்வி தான் படித்து வந்தேன். என் போன்றவர்களுக்கு தமிழினி துணைவன் வாட்ஸ்அப் குழு ஒரு வரப்பிரசாதம் என்றால் அது மிகையல்ல.

மருத்துவ துறையில் ஒய்வு பெற்ற பேராசிரியர்கள். பணியில் உள்ள பேராசிரியர்கள், அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் ஆகியோர் சேவை மனப்பான்மையுடன் எங்களுக்கு கூகுள் மீட் வகுப்புகள் நடத்துகிறார்கள். மிகவும் முக்கியமானத் தகவல். ஆன்லைன் கூகுள் மீட் வகுப்புகளுக்கு கட்டணம் ஏதும் இல்லை. இது முழுமையாகக் கட்டணம் ஏதும் வசூலிக்காத சேவையாகும்” என்கிறார் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி முதலாமாண்டு மாணவி நற்குண செல்வி.

“மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டுக்கு மூன்று வகையானப் பாடங்கள். உடற்கூறு இயல், உடலியங்கியல், உயிர் வேதியியல் ஆகியன. ஓய்வு பெற்ற உடலியங்கியல் துறை பேராசிரியை நான். தமிழினி துணைவன் வாட்ஸ்அப் குழுவின் ஆன்லைன் கூகுள் மீட் வகுப்புகளில் நான், உடலியங்கியல் பாடங்கள் சார்ந்த சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் தமிழில் பாடம் நடத்தி வருகிறேன்.  சில நேரங்களில் தமிழும் ஆங்கிலமும் கலந்து பேசி மாணவ மாணவியர்க்குப் புரிய வைக்கின்றேன். கூகுள் மீட் வகுப்புகளில் மாணவ மாணவியர் மிகுந்த ஆர்வமுடன் பங்கேற்கின்றனர். நிறைய சந்தேகங்கள் கேட்கின்றனர். நாங்கள் அவைகளைத் தெளிவுபடுத்தி விளக்கம் தருகிறோம். இதில் அவர்களுக்குப் பாடங்களையும் சந்தேகங்களையும் புரிந்து கொண்ட திருப்தி. அவர்கள் புரிந்து கொள்வதால் பாடங்கள் நடத்தும் எங்களுக்கும் மிகப் பெரிய ஆத்ம திருப்தி.” என்கிறார் ஓய்வு பெற்ற மருத்துவப் பேராசிரியை மருத்துவர் சரயு.

‘தமிழினி துணைவன்’ வாட்ஸ்அப் குழு  உருவாக் கிய திருச்சி சமூக மற்றும் நோய்த் தடுப்பு மருத்துவர் சுபாஷ் காந்தி நம்மிடம் கூறுகையில், “ஓய்வு பெற்ற மருத்துவப் பேராசிரியர்கள், பணியில் உள்ள பேராசிரியர்கள், அனுபவம் மிக்க மருத்துவர்கள் பலரிடமும் முதலில் இது குறித்துக் கலந்து பேசினோம். நல்ல சிந்தனை. அவசியம் தேவையான செயல்பாடு என்று எல்லோரும் ஏற்றுக் கொண்டனர். மருத்துவப் பாடங்களின் துறை ரீதியாக அவர்களை ஒன்றிணைத்தோம். அரசுப் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி பயின்று இடஒதுக்கீடு மூலமாக மருத்துவக் கல்லூரிகளில் முதலாமாண்டு சேரும் மாணவ, மாணவியர்க்கு வழிகாட்டுவதற்காக “தமிழினி துணைவன்” வாட்ஸ்அப் குழு உருவாக்கினோம்.

முதலாமாண்டு மாணவ, மாணவியர்க்கு இதனைத் தெரிவித்தோம். இந்தக் குழுவில் அவர்களை ஒருங்கிணைத்தோம். ஆன்லைனில் கூகுள் மீட் வகுப்புகள் தொடங்கினோம். வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் மாலை ஆறு மணி முதல் இரவு எட்டு மணி வரை வகுப்பு களைப் பிரித்துக் கொண்டோம்.

இந்த வகுப்புகள் முதலாமாண்டு மருத்துவ மாணவ, மாணவியரின் ஆங்கில மொழி மருத்துவப் பாடங்கள் சார்ந்த சந்தேகங்களையும் அச்சத்தையும் போக்கும். அவர்களுக்கான சந்தேகங்களையும் கேள்விகளையும் தமிழில் நாங்கள் விரிவாகப் பேசி எடுத்து உரைப்பதால் அவர்கள் தங்களை சிறப்பாகவே தயார் செய்து கொள்ள முடியும்.  தமிழினி துணைவன் வாட்ஸ்அப் குழுவின் முக்கிய நோக்கமும் அது தான்” என்றார்.

 

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.