காரை வைத்து கிறுகிறுக்க வைக்கும் மோசடி ! கோடிகளை குவித்த பலே கேடிகள்?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

காரை வைத்து கிறுகிறுக்க வைக்கும் மோசடி ! கோடிகளை குவித்த பலே கேடிகள்?

இனிய ரமலான் வாழ்த்துகள்

சொந்த பயன்பாட்டுக்கென்று ஆசையாய் வாங்கிய கார்களை வாடகைக்கு விட்டு பணம் பெற்றுத்தருகிறேன் என்பதாகக்கூறி, அவ்வாறு வாங்கிச் சென்ற கார்களை காரின் உரிமையாளருக்கே தெரியாமல் வேறொருவரிடம் அடகு வைத்து மோசடியில் ஈடுபட்டதாக, திருச்சி உறையூரைச் சேர்ந்த வசந்த் என்பவரை உறையூர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த மார்ச் 15 ஆம் தேதி உறையூரைச் சேர்ந்த ராம்பிரசாத் என்பவர் கொடுத்த முதல் புகாரை தொடர்ந்து, உறையூர் குற்றப்பிரிவு போலீசு நிலையத்தில் மட்டுமே, தஞ்சாவூரை சேர்ந்த சரவணக்குமார், திருவெறும்பூர் கணேஷ், உறையூர் விஜய் ஆகியோர் அடுத்தடுத்து வசந்த்-க்கு எதிராக கொடுத்த புகார்களின் அடிப்படையில் நான்கு எஃப்.ஐ.ஆர்.கள் பதிவாகியிருக்கின்றன.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

சினிமா ஷூட்டிங்கிற்கு கார் தேவைப்படுகிறது, தனியார் நிறுவனத்தில் கேட்கிறார்கள், தனிப்பட்ட பயன்பாட்டுக்கு கேட்கிறார்கள் என்பதாகவும் இன்னும் சிலரிடம் தனது தனிப்பட்ட தேவைக்காக, அவசரத் தேவைக்காக, கல்யாணத்துக்கு செல்ல, இறப்பு நிகழ்வில் பங்கேற்க என்ற பல்வேறு காரணங்களை கூறி காரை வாங்கிச்சென்றவர் பல நாட்களாக வாடகையும் தராமல் காரையும் திருப்பித் தராமல் போகவே, போலீசில் புகார் அளித்திருப்பதாக தெரிவிக்கிறார்கள். குறிப்பாக, தங்களிடமிருந்து வாங்கிச் சென்ற கார்களை மாத்தூர், குண்டூரைச் சேர்ந்த பாலலோகேஷ் மற்றும் அவரது சகோதரர் கமலேஷ் என்பவர்களிடம் அடமானம் வைத்திருப்பதாகவும் புகாரில் தெரிவித்திருக்கிறார்கள்.

இதனையடுத்து, மாத்தூர் பாலலோகேஷிடம் 45 கார்களை வசந்த் அடமானம் வைத்திருந்ததாகவும்; அதற்காக, அவர் தங்களுக்கு ஒரு கோடியே ஐந்து இலட்சம் ரூபாய் திருப்பித் தரவேண்டுமென்றும் பாலலோகேஷ் தரப்பில் தெரிவித்திருக்கிறார்கள். இழந்த பணத்தை மீட்டுத்தரும்படி திருச்சி எஸ்.பி.யிடம் புகார் அளித்திருக்கிறார்கள் பாலலோகேஷ் மற்றும் கமலேஷ் ஆகியோர். வசந்த் என்பவர் திருச்சி சிவாவின் உதவியாளர் என்றும் அவரது மருமகனும் பிரபல வழக்கறிஞருமான கராத்தே முத்துக்குமாரிடமும் உதவியாளராக இருந்து வந்தவர் என்றும் எம்.பி. சிவாவின் பெயரை சொல்லி பலரிடம் வேலை வாங்கித் தருவதாகவும் வசந்த் பலரை ஏமாற்றியிருக்கிறார் என்பதாகவும் பகீர் குற்றச்சாட்டுகளை தெரிவிக்கிறார், கமலேஷ்.

மேலும், திருச்சியில் இயங்கிவரும் ஆக்ஸினா ஹூண்டாய் ஷோரூமில் பணியாற்றிவரும் ஜான் என்பவர் தங்களது அனுமதியில்லாமல் தங்கள் வசமிருந்த கார்களை திருடி சென்றிருக்கிறார் என்றும்; அவர் அவரது நண்பர்களின் ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளை வைத்து தனது நிறுவனத்திலேயே கார்களை வாங்கி வசந்திடம் வாடகைக்கு விட்டு பெருமளவு மோசடியில் ஈடுபட்டிருக்கிறார் என்றும் குற்றஞ்சாட்டுகிறார், கமலேஷ்.

ஆக்ஸினா நிறுவனத்தில் பணியாற்றுவதாக சொல்லப்படும் ஜான் பிரதாப் என்பவரும், வசந்த்துக்கு எதிராக புகார் ஒன்றை கொடுத்திருக்கிறார். இதற்கு மத்தியில், பாலலோகேஷுக்கு எதிராக, தஞ்சையை சேர்ந்த சரவணக்குமார் மற்றும் மாத்தூரை சேர்ந்த விஜயஸ்ரீ ஆகியோர் புகார் அளித்திருக்கிறார்கள். அதாவது, வசந்த்-க்கு எதிராக அவரால் பாதிக்கப்பட்டவர்கள் என்ன குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்களோ, அதே குற்றச்சாட்டுகளை பாலலோகேஷ் மற்றும் கமலேஷ் ஆகியோருக்கு எதிராகவும் முன்வைக்கிறார்கள் என்பதுதான் இந்த வழக்கில் முக்கிய திருப்பமாகவும் பார்க்கப்படுகிறது.

தங்களையும் வசந்த் ஏமாற்றிவிட்டார் என்கிறார்கள். ஒரிஜினல் ஆர்.சி. புக் இல்லாமல், வாகனத்தின் உரிமையாளர் நேரில் வராமல் வசந்திடம் எப்படி அந்த கார்களை அடகு பிடிக்கலாம்? திருட்டுக் கார்களை அடகு பிடித்திருக்கிறார்கள் என்றுதானே சொல்ல முடியும்? பவுன் கணக்கில் நகைகளை வாங்கி குவித்திருக்கிறார்கள். அயன்புத்தூரில் பங்களா மாதிரி வீடு கட்டி வருகிறார்கள். இது எப்படி சாத்தியம்? ” என்பதாகவும் கேள்வி எழுப்புகிறார்கள்.

கமலேஷ் தரப்பிலோ, “வசந்துடன் இணைந்து ஒன்னே முக்கால் வருடம் பிசினஸ் செய்து வருகிறோம். இதுவரையில் பிரச்சினை எழவில்லை. தொடக்கத்தில் ஒரிஜினல் டாகுமெண்ட் மற்றும் ஓனரை கூட்டி வந்துதான் அடகு வைத்து சென்றிருக்கிறார். ஆனால், பின்னர் அவசரத் தேவை, பார்ட்டிக்கு ஆபரேஷன் செய்ய பணம் வேண்டும்  என்று கூறி காரை அடகு வைத்து காசை வாங்கிச் சென்றிருக்கிறார். அப்போதுகூட, ஓனரிடம் போனில் பேசிவிட்டுதான் பணம் கொடுத்திருக்கிறோம். மேலும், எங்களிடமும் ஒரிஜினல் டாகுமெண்டை கொடுத்துதான் காரை அடகு வைத்திருக்கிறார். ஆனால், காரின் உரிமையாளரிடமும் இன்னொரு ஒரிஜினல் டாகுமெண்ட் இருக்கிறது. இதை போலீசில் தெரிவித்திருக்கிறோம். அடுத்து, அவையெல்லாம் நாங்கள் சம்பாதித்து சேர்த்த சொத்துக்கள். வசந்திடம் ஒன்றுமில்லை. எங்களிடம் சொத்து இருக்கிறது. எங்களை டார்கெட் செய்தால், பணம் கிடைக்கும் என்று எங்கள் மீது வீண்பழி சுமத்துகிறார்கள்.” என்கிறார், கமலேஷ்.

“வசந்த் சொன்னது போலவே, நீங்களும் காரை வாடகைக்கு விட்டு பணம் பெற்றுத்தருகிறேன் என்று கூறி பலரிடம் பணம் வாங்கியிருப்பதாகவும் சொல்கிறார்களே?” என்றதற்கு, “அப்படி நாங்கள் யாரிடமும் பணம் வாங்கவில்லை” என் மறுக்கிறார், கமலேஷ்.

உங்கள் விளம்பரம் இலட்சக்கணக்கான வாசகர்களை சென்றடைய....

கராத்தே முத்துக்குமாா், வசந்த்
கராத்தே முத்துக்குமாா், வசந்த்

கராத்தே முத்துக்குமாரிடம் உதவியாளராக இருந்தவர்தான் வசந்த் என்ற அடிப்படையில், அவரிடம் பேசினோம். “வசந்த் மட்டுமில்லை; எஸ்.பி. ஆபிசில் யோக்கியன் போல பேசும் கமலேஷ், பாலலோகேஷ் மூன்று பேருமே என்னிடம் வேலை செய்தவர்கள்தான். இன்னும் சொல்லப்போனால், ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். வசந்த் என்னிடம் வரும்போதே பிரச்சினையுடன்தான் வந்தார். அவரது பிரச்சினையை தீர்த்து வைத்தேன். அவரது அப்பா தான் என்னிடமே வேலைக்கு சேர்ந்துவிடுமாறு சொன்னார். என் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகத்தான் இவர்களை நடத்தியிருக்கிறேன். இன்னும் சொல்லப்போனால், வசந்தை என் இரண்டாவது மனைவி என்று சொல்லும் அளவுக்கு நெருக்கமாக இருந்தவர்தான்.

என்னிடம் வேலை பார்ப்பவர்கள் தங்களுக்குள் யாரும் எந்த வகையிலும் பணம் தொடர்பான வரவு-செலவுகளை வைத்துக் கொள்ளக்கூடாது என்று கறாரான முறையில் தெரிவித்திருக்கிறேன். வசந்த் என்னையும்தான் ஏமாற்றியிருக்கிறார். நானே அவரிடம் தனிப்பட்ட முறையில் சில இலட்சங்களை இழந்திருக்கிறேன். அதனால்தான், அவரை நீக்கிவிட்டேன். எனது பெயரையும், எனது மாமா பெயரையும் சொன்னால்தான் எல்லோரது கவனமும் அவர்கள் பக்கம் திரும்பும் என்பதால், கமலேஷ் இவ்வாறு பேசி வருகிறார். எனக்கு இருக்கிற, பிசி ஷெட்யூல்ல இவங்க பஞ்சாயத்தையெல்லாம் பொருட்படுத்திக் கொள்ள அவகாசம் இல்லை.” என்பதாக தெரிவிக்கிறார், வழக்கறிஞர் கராத்தே முத்துக்குமார்.

அடுத்து, ஆக்ஸினா ஜான்பிரதாப் மொபைல் எண் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தரப்பு கருத்தையறிய ஆக்ஸினா ஹூண்டாய் ஷோரூம் உரிமையாளர் கர்ணாவை தொடர்பு கொண்டோம். “எனக்குத் தெரிந்து ஜான் பிரதாப் சட்டவிரோதமான காரியம் எதையும் செய்துவிடவில்லை. காரை வாடகைக்கு வாங்கி விட்டிருக்கிறார். அவர்கள் ஏமாற்றிவிட்டார்கள். நான் கொடுக்கும் 15 ஆயிரம் சம்பளம் போதவில்லை என்றுதான், இந்த பிசினஸில் இறங்கியிருக்கிறார் ஜான். இது என் கவனத்திற்கு வரவே, மூன்று மாதங்களுக்கு முன்பே நீ தனியாக சென்று உன் பிசினஸை பார்த்துக் கொள் என்று கூறி அனுப்பிவிட்டேன். ஜான் பிரதாப் மட்டுமில்லை, அவரோடு ரவி, ஆனந்த் ஆகிய மூவரும் வெளியேறினார்கள். அவர்களுக்கும் எனது நிறுவனத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.” என்று மறுக்கிறார், கர்ணா.

அடுத்து, ”இந்த விவகாரத்தில் உறையூர் போலீசார்தான் சட்டப்படி நடந்து வருவதாகவும்; குறிப்பாக, ஏ.சி. தங்கபாண்டியன், ஆய்வாளர் பெரியசாமி, உதவி ஆய்வாளர் சோனியாகாந்தி ஆகியோர் மிகச்சரியாக இந்த விவகாரத்தை கையாண்டு வருவதாகவும்; அதே நேரத்தில் திருவெறும்பூர் மற்றும் திருச்சி செசன்ஸ் கோர்ட் போலீசார் உள்ளிட்ட மற்ற போலீசார்கள் சம்பந்தபட்ட நபர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு தங்களிடமிருந்து மீட்ட கார்களை அவர்களிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். ” என்ற குற்றச்சாட்டை பாலலோகேஷ் மற்றும் கமலேஷ் தரப்பில் முன்வைக்கிறார்கள்.

இதற்கு எதிர் கருத்தாக, பாதிக்கப்பட்ட வசந்திடம் ஏமாந்த காரின் உரிமையாளர்கள் மற்றும் பாலலோகேஷிடம் பணத்தைக் கொடுத்து ஏமாந்தவர்கள் தரப்பில், “உறையூர் போலீசார் முழுக்க முழுக்க பாலலோகேஷ் மற்றும் கமலேஷுக்கு ஆதரவாகத்தான் செயல்படுகிறார்கள். வசந்த் எங்களை ஏமாற்றியது உண்மை. ஆனால், எங்களை ஏமாற்றி வாங்கிச் சென்ற கார்களை பாலலோகேஷிடம்தான் அடகு வைத்திருக்கிறார். ஒரிஜினல் ஆர்.சி.புக் இல்லாமல், ஓனர் இல்லாமல் காரை அடகுக்கு வாங்கியது குற்றமா, இல்லையா? ஏ1 வசந்த் என்றால், ஏ2 பாலலோகேஷ்தானே? ஆனால், இதுவரை அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவே இல்லை. வசந்தை பலிகடா ஆக்கிவிட்டார்கள். அல்லது, வசந்தும் பாலலோகேஷும் சேர்ந்து நாடகம் ஆடுகிறார்களோ என்ற சந்தேகமும் எழுகிறது. உறையூர் போலீசை பணம் கொடுத்து சரிகட்டிவிட்டார்கள்.” என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள்.

இந்த விவகாரத்தில், வசந்த் மட்டும்தான் குற்றவாளியா? வசந்த் ஒருவர் மட்டுமே இவ்வளவு வேலையையும் செய்துவிட முடியுமா? இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? நூற்றுக்கணக்கான கார்களை அடகு வைத்து வாங்கிய கோடிக்கணக்கான ரூபாய்களை வசந்த் என்ன செய்தார்? இதில், பாலலோகேஷ், கமலேஷுக்கு என்ன சம்பந்தம்? ஜான் பிரதாப் ஏன் இதுவரை போலீசில் புகாருக்கு செல்லவில்லை. அவரும் தலைமறைவாகியிருக்கிறார்? என்பதெல்லாம் போலீசாரின் விசாரணையில் விடை காண வேண்டியவைகளாக நீடிக்கின்றன.

மிக முக்கியமாக, தற்போது போலீசார் மீட்டிருக்கும் கார்கள் பெரும்பாலானவற்றில், போலீஸ், வழக்கறிஞர், நீதிபதி, ஆர்மி, பிரஸ் என்பதாக ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. இவ்வாறு மோசடியில் ஈடுபட்டிருக்கும் கார்கள் கிரைம் மற்றும் கிரிமினல் வேலைகளுக்கு பயன்படுத்தப்பட்டிருக்குமோ? என்ற பெருத்த சந்தேகத்தையும் எழுப்பியிருக்கிறது. திருச்சியில் கே.என்.ராமஜெயம் கொலையில்  அந்த கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கார் பற்றிய தகவலை இன்னும்கூட போலீசாரால் கண்டுபிடிக்கு முடியாத புதிராகவே நீடிக்கிறது என்பதை இங்கே பொருத்திப் பார்க்க வேண்டியிருக்கிறது.

இதன் அடிப்படையில், இந்த விவகாரத்துக்கு உரிய அழுத்தம் கொடுத்து, சிறப்பு விசாரணைக்குழுவை ஏற்படுத்தி போலீசாருக்கு எதிரான இலஞ்சப்புகார் உள்ளிட்டு விரிவான விசாரணையை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை முன் எழுந்திருக்கிறது.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

திருச்சியில் என்றில்லை, சமீப காலமாக தமிழகம் முழுவதுமே இதுபோன்ற கார் மோசடி சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறி வருகின்றன. கார்களும் மோசடியில் ஈடுபடும் நபர்களும்தான் வேறுவேறாக இருக்கின்றனவே தவிர, மோசடிகள் அனைத்தும் ஒரே அடிப்படையில்தான் நிகழ்ந்திருக்கின்றன. பல்வேறு காரணங்களுக்காக சொந்த கார் வாங்கியே தீர வேண்டுமென்ற முரட்டு வைராக்கியத்தில் கடனில் காரை வாங்கிக் கொண்டு, தொடர்ந்து மாதந்திர தவணைத்தொகை கட்ட முடியாமல் தடுமாறும் நபர்கள்தான் இந்த மோசடி கும்பலின் இலக்காக இருக்கிறது.

அடுத்து, சொந்த உபயோகத்துக்கான வாகனத்தை வணிக நோக்கில் வாடகைக்கு விடக்கூடாது என்ற நிலையில், குறுக்கு வழியில் பணம் சேர்க்க ஆசைப்பட்டு அவர்களில் வலையில் விழுபவர்கள் அடுத்தக்குறி. காரை வைத்து பக்காவான சதுரங்க வேட்டையை நடத்திவருகிறார்கள். தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தி வருகிறார்கள். சொந்த உபயோகத்துக்கான கார் வைத்திருப்பவர்களே, உஷார் !

 

—    அங்குசம் புலனாய்வுக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.