சுதந்திர தினத்திற்கு விடுமுறை அளிக்காத 81 தொழில் நிறுவனங்கள் மீது வழக்கு !
சுதந்திர தினத்திற்கு விடுமுறை அளிக்காத 81 தொழில் நிறுவனங்கள் மீது வழக்கு !
சுதந்திர தினவிழாவையொட்டி தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால் தேசிய விடுமுறையான சுதந்திர தினத்தன்று தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்களில் தொழிலாளர்கள் பணிபுரிகிறார்களா? என்று சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி தலைமையில் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சென்று நேற்று ஆய்வு செய்தனர்.
சேலம், மேட்டூர், ஓமலூர், ஆத்தூர், சங்ககிரி உள்பட மாவட்டம் பல்வேறு இடங்களில் முன் அனுமதி பெறாமல் செயல்பட்ட 54 கடைகள், நிறுவனங்கள் மற்றும் 64 உணவு நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது.
இதில், 81 நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காமல் வேலையில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அந்த நிறுவனங்கள் மீது தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை சட்டம் மற்றும் உணவு நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதுபோன்ற ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும், முரண்பாடுகள் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் கிருஷ்ணவேணி தெரிவித்துள்ளார்.