ஜாதிவாரி கணக்கெடுப்பில் மாபெரும் சதி !
”ஜாதிவாரி கணக்கெடுப்பில் ஏற்கெனவே, எடுக்கப்பட்ட சமூக பொருளாதார தரவுகளில் பிழை உள்ளது என்று புறந்தள்ளப்பட்டு, கடைசியாக ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு 96 வருடங்கள் கழித்து, தற்பொழுது 2027 இல் எடுப்பதாக கூறப்பட்ட ஜாதிவெறி கணக்கெடுப்பில், மத்திய அரசு கணக்கெடுப்பிற்கு உண்டான இரண்டாம் கட்ட வினாக்களில் எஸ்.சி., எஸ்.டி., அடுத்து ஜாதிகள் என்று குறிப்பிட்டு ஒரு திறந்தவெளி பதிவே எடுப்பதாக உறுதி செய்துள்ளது. இப்படிப்பட்ட திறந்தவெளி பதிவு மொத்த தரவுகளையும் நீர்த்துப் போக செய்யும் சதியே ஆகும்” என்பது உள்ளிட்ட அதிரடி தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறார்கள் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பினர்.
சாதிவாரிக் கணக்கெடுப்பை வலியுறுத்தி அக்-03 அன்று சென்னை மாரிஸ் ஹோட்டலில், OBC Rights / Party for the Rights of OBC அமைப்பின் தலைவர் இரத்தின சபாபதி தலைமையில், தோழர் தியாகு, அய்யநாதன், திருமுருகன் காந்தி, வாலாசா வல்லவன், அன்பு தனசேகரன், விநாயகம், TSS மணி, குமரன், ஊடகவியலாளர் ஜீவசகாப்தன், சமந்தா, ராமன் ராஜு, மருது பாண்டியன் மற்றும் ஓ பி சி தொழிற்சங்கத் தலைவர்களும், OBC rights / Party for the Rights of OBC நிர்வாகிகளும் கலந்து கொண்ட கூட்டத்தில்தான் இப்படி ஒரு அதிரடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இந்தக்கூட்டத்தில், சாதிவாரிக் கணக்கெடுப்பின் முக்கியத்துவம் குறித்தும்; ஒன்றிய அரசின் துரோகங்கள் குறித்தும்; சாதிவாரிக் கணக்கெடுப்பை வலியுறுத்தியும்; சாதிவாரிக் கணக்கெடுப்பு படிவத்தில் ஓபிசி பிரிவை குறிப்பதற்கு separate column இணைக்கவும்; ஒவ்வொரு சாதிக்கும் unique caste code வழங்கக் கோரியும்; விடுபட்ட ஓ.பி.சி. சாதிகளை இணைத்து புதிய சாதிப் பட்டியல் வெளியிடக் கோரியும்; சமூக நீதிக் கண்ணோட்டத்தில் அதன் தேவைகள் மற்றும் முக்கியத்துவம் குறித்தும் விரிவாக விளக்கிப் பேசினர்.
தமிழகம் தழுவிய அளவில் அனைத்து இயக்கங்களையும் ஒருங்கிணைத்து விரிவான அளவில் இந்தப் பிரச்சினைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறார்கள்.
– அங்குசம் செய்திப்பிரிவு.






Comments are closed, but trackbacks and pingbacks are open.