சி.பி.எஸ்.இ விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடி ! மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடுகிறதா மத்திய அரசு?
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் கடும் கண்டனம்!
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி அமைப்புகள் தொடர்ந்து எடுத்துவரும் பொறுப்பற்ற முடிவுகளாலும், நிர்வாகக் குளறுபடிகளாலும் ஒட்டுமொத்த மாணவர்களும், பெற்றோர்களும், ஆசிரியர்களும், கல்வியாளர்களும், குழந்தை நல செயற்பாட்டாளர்களும் பெரும் அதிர்ச்சியிலும் மன உளைச்சலிலும் ஆழ்ந்துள்ளனர்.
சமீபத்தில் நடந்த நீட் (NEET) மறுதேர்வு விவகாரம் ஏற்படுத்திய வடு மாறுவதற்குள், தற்போது சி.பி.எஸ்.இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்துதலிலும் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்துள்ளதாக வெளியாகி இருக்கும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் (தசிஎகச) தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்கிறது.
நீட் தேர்வு அவலமும் அதிகாரிகளின் அலட்சியமும்:
மத்திய அரசால் 2026-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நீட் நுழைவுத்தேர்வு, வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டு, மீண்டும் மறுதேர்வு எனும் பெரும் அவலத்தை மாணவர்கள் சந்திக்க நேரிட்டது. தேர்வுத்தாள் கசிவு, மறுதேர்வு என மாணவர்களின் ஒட்டுமொத்த உழைப்பையும், பொன்னான நேரத்தையும் அதிகாரிகள் வீணடித்தனர்.
இவ்வளவு பெரிய நிர்வாகத் தோல்விக்குப் பிறகும், அதிகாரிகள் மிகவும் பொறுப்பற்ற முறையில் விளக்கம் அளித்துத் தங்களது கடமையிலிருந்து தப்பிக்க முயன்றனர். இந்தத் தொடர் குளறுபடிகளால் மாணவர்கள் சந்தித்த அவலமும், அடைந்த மன உளைச்சலும் இன்னும் தணியவில்லை.
அடுத்த இடியாக சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள்:
இந்த அவலம் ஏற்படுத்திய பெரும் அதிர்ச்சி அடங்குவதற்குள், அடுத்த இடியாக மத்திய அரசு கட்டுப்பாட்டிலுள்ள சி.பி.எஸ்.இ 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. மாணவர்களின் உயர்கல்வியையும், ஒட்டுமொத்த எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் மிக முக்கியமான இந்த விடைத்தாள்களை மதிப்பீடு செய்ததில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இரவு பகலாகப் படித்து, அதிக மதிப்பெண்களை எதிர்பார்த்து காத்திருந்த மாணவர்களின் விடைத்தாள்கள், மிக அலட்சியமான முறையில் திருத்தப்பட்டிருப்பது கல்வியாளர்கள் மற்றும் குழந்தை நல செயற்பாட்டாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேள்வி எழுப்பிய மாணவர் மீது அவதூறு: சனநாயகத்தின் மீது வீசப்படும் கற்கள்!
அதுவும், முதன்முதலாக தனது மதிப்பெண் குறித்த சந்தேகம் எழுப்பிய மாணவர் வேதாந்தை – சமூக ஊடகத்தில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் என அவதூறு பரப்பும் வேலையையும் செய்துள்ளது, சனநாயக சக்தி மீது மத்திய அரசும் அதன் ஆதரவாளர்களும் வீசும் கற்களாகும். வேதாந்தைத் தொடர்ந்து, மற்ற மாணவர்களும் தங்களது மதிப்பெண்களை மதிப்பீடு செய்த முறைகள் குறித்து சந்தேகம் எழுப்ப, இது தற்போது பூதாகரமான பிரச்சனையாக வெடுத்துள்ளது.
பேரதிர்ச்சியைத் தந்த OSM தொழில்நுட்பம்: பின்னணியில் இருக்கும் தனியார் நிறுவன முறைகேடு!
மாணவர்கள் தங்களது விடைத்தாளை மறுமதிப்பீடு செய்யும் முறையில், விடைத்தாளின் நகல் பிரதிகளை (Photocopies) வாங்கியபோது அது இன்னும் பேரதிர்ச்சியாக இருந்தது. சி.பி.எஸ்.இ அவசரம் அவசரமாக நடைமுறைப்படுத்தியுள்ள On Screen Marking (OSM) எனும் கணினி வழி விடைத்தாள் திருத்தும் முறை தற்போது பலத்த கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
இந்த விடைத்தாள் திருத்தும் பணிக்காகத் தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டெண்டர் குறித்தும் தற்போது அடுக்கடுக்கான புகார்கள் எழுந்துள்ளன:
சர்ச்சைக்குரிய நிறுவனம்:
தற்போது சி.பி.எஸ்.இ-யால் பயன்படுத்தப்பட்ட அதே தனியார் நிறுவனம், ஏற்கனவே தெலுங்கானாவில் இதுபோன்ற தொழில்நுட்பத் தயாரிப்பில் பெரும் குளறுபடிகளைச் செய்து சர்ச்சையானதும், அதன் விளைவாக மதிப்பெண் குறைந்து மன உளைச்சலால் பல மாணவர்கள் தற்கொலை செய்து உயிரை விட்ட கொடூரமான பின்னணியைக் கொண்டது என்ற செய்தி ஊடகங்களில் வெளியாகிப் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொழில்நுட்ப அலட்சியம்:
இவ்வளவு முக்கியமான ஒரு கல்விப் பணிக்குத் தொழில்நுட்ப ரீதியாகப் பின்பற்றப்பட வேண்டிய எவ்வித முறையான சோதனைகளோ (Testing), படிநிலை அடிப்படையிலான தொழில்நுட்ப மாற்றம் (Phase-based migration) அல்லது சுமை சோதனைகளோ (Stress Tests) எதுவும் செய்யப்படவில்லை என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
பயிற்சி இன்மை மற்றும் பின்னூட்டங்கள் (Feedbacks) புறக்கணிப்பு:
விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் இந்த மென்பொருள் (Software) குறித்த எவ்வித முறையான பயிற்சிகளும் அளிக்கப்படவில்லை. பயிற்சியின் போது, ஆசிரியர்கள் சுட்டிக்காட்டிய தொழில்நுட்பச் சிக்கல்களும், அவர்கள் அளித்த பின்னூட்டங்களும் (Feedbacks) அதிகாரிகளால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
பயிற்சியற்ற ஊழியர்கள்:
விடைத்தாள்களை கணினியில் ஏற்றுவதற்காக ஸ்கேன் செய்யும் பணியைக் கூட, எவ்விதப் பயிற்சியும் பெறாத தகுதியற்ற நபர்களைக் கொண்டு மிக அலட்சியமாகச் செய்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இத்தனை குறைபாடுகளுக்கும் மத்தியில், அவசரம் அவசரமாக இந்தத் திருத்தும் முறையை நடைமுறைப்படுத்தியது ஏன் என சமூக ஆர்வலர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தேசத்தின் எதிர்காலம் மீதான அலட்சியமும் பொதுப்பட்டியல் அரசியலும்
ஒரு மாணவர் தனது குழந்தைமையின் பெரும் பகுதியை 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்காகச் செலவு செய்கிறார். மாணவரோடு இணைந்து பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள் எனப் பலரது உழைப்பும், பொருளாதாரமும், நேரமும் இதனுடன் இணைந்துள்ளது. அப்படி நமது தேசத்தின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யும் சக்திப்படைத்த மாணவர்களை உருவாக்க வழிவகுக்கும் ஒரு தேர்வை, மிகவும் அலட்சியப் போக்கிலும் பொறுப்பற்ற தன்மையிலும் கையாண்டிருப்பது இந்த தேசத்தின் மீதும், கல்வி முறையின் மீதும் நம்பிக்கையற்ற தன்மையையே உருவாக்கி இருக்கிறது.
கல்வி பொதுப்பட்டியலில் (Concurrent List) இருப்பதன் விளைவு: கல்வி என்பது மத்தியப் பட்டியலில் (மற்றும் பொதுப்பட்டியலில்) இருப்பதால், இதுபோன்ற தேசிய அளவிலான தொடர் பிரச்சனைகள் ஏற்படும் போது, அதன் மீது மாநில அளவில் சனநாயக ரீதியாகக் கேள்வி எழுப்பும் மற்றும் தீர்வு காணும் உரிமையை நாம் முழுமையாகப் பெற இயலாமல் போகிறது என்பதையே இந்த தற்போதைய நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.
தசிஎகச-வின் அழுத்தமான கோரிக்கைகளும் வேண்டுகோளும்:
மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்: மாணவர்களின் எதிர்காலத்தை வைத்துச் சூதாடியதற்கு மத்திய அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும். இதற்குப் பின்னால் இருக்கும் முறைகேடுகள் குறித்து மத்திய அரசு உடனடியாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
ஒன்றிணைந்து குரல் கொடுப்போம் (அமைப்புகளுக்கு அழைப்பு): மாணவர்களின், சிறார்களின் நலனையும் மனநலனையும் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு ஆசிரியர் அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், கல்வி சார்ந்த இயக்கங்கள், பெற்றோர்-ஆசிரியர் கழகங்கள், மற்றும் அரசியல் கட்சிகள் இந்த முறைகேடுகள் குறித்து சனநாயக ரீதியாகத் தங்களது பலத்த எதிர்ப்பு குரல்களைப் பதிவு செய்திட தசிஎகச வேண்டுகோள் விடுக்கிறது.
தமிழ்நாடு அரசுக்கு அவசர வேண்டுகோள்:
நம் நாட்டுப் பிள்ளைகளின் கல்வி உரிமை காக்கப்பட, தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, மத்திய அரசுக்குத் தகுந்த அழுத்தத்தைத் தந்து, நமது தமிழ்ப் பிள்ளைகளின் எதிர்காலத்தைக் காத்திட அவசர நடவடிக்கை எடுத்திட வேண்டும். அதோடு மட்டுமல்லாது, நமது மாநில மாணவர்களின் கல்வி நலனைப் பேணக்கூடிய சமச்சீர் கல்வி குறித்தான போதிய விழிப்புணர்வையும் பரவலாக்க வேண்டும் என வேண்டுகிறோம். லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்வோடும் கனவுகளோடும் விளையாடுவதை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், மத்திய கல்வி அமைச்சகம் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு உரிய நீதி வழங்க வேண்டும் என்றும் தசிஎகச சார்பில் மிக வலுவாக வலியுறுத்தப்படுகிறது.







Comments are closed, but trackbacks and pingbacks are open.