திருச்சியில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் – தமிழ் அமைப்புகள் சார்பில் தமிழக முதல்வருக்கும் – அமைச்சருக்கும் பாராட்டு !
திருச்சியில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் – தமிழ் அமைப்புகள் சார்பில் தமிழக முதல்வருக்கும் – அமைச்சருக்கும் பாராட்டு ! திருச்சியில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்படும் என்று அறிவித்த தமிழ்நாடு முதல் அமைச்சருக்குத் தமிழ் அமைப்புகளின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
07.07.2024 ஞாயிறு முற்பகல் 11 மணிக்குத் திருச்சிராப்பள்ளி, மரக்கடை, அரசு சையது முர்துசா மேனிலைப் பள்ளியில் திருச்சிராப்பள்ளி மாவட்டத் தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் முனைவர் கு.திருமாறன் தலைமையில் 17 அமைப்புகள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பெற்றன.
தீர்மானம் 1
திருச்சிராப்பள்ளி மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வண்ணம், திருச்சிராப்பள்ளியில் “கலைஞர் நூற்றாண்டு நூலகம்“ அமைக்கப்படும் என தமிழ்நாட்டு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டப்பேரவையில் அறிவித்ததைத் திருச்சிராப்பள்ளி மாவட்டத் தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு மகிழ்வுடன் வரவேற்றுப் பாராட்டி மனம் நிறைந்த நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் 2
“கலைஞர் நூற்றாண்டு நூலகக்“ கட்டிடம் அமையும் இடத்தை திருச்சிராப்பள்ளி நகரப் பகுதியில் மக்கள் எளிதில் வந்து போகும் வண்ணம் தெரிவுசெய்து கட்டுமானப் பணிகளைத் தொடங்குமாறு மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்களை வேண்டுகின்றது.
தீர்மானம் 3
“கலைஞர் நூலக“ வளாகத்தில் மனிதர்குலம் உய்யுமாறு உயர்ந்த அறநெறி காட்டிய உலகப் பேராசான் திருவள்ளுவருக்குச் சிலையமைத்துச் சிறப்புச் செய்யுமாறு மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்களிடம் இன்றியமையாத வேண்டுகோளாக முன்வைக்கிறது.
தீர்மானம் 4
“கலைஞர் நூற்றாண்டு நூலக“ வளாகத்தில் திருக்குறள் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களை வருங்காலத் தலைமுறையினரும் அறிந்துகொள்ள ஆய்வரங்குகள் கருத்தரங்குகள் நிகழ்த்துதற்கு உதவியாகச் சிற்றரங்கம் ஒன்றினைத் “திருவள்ளுவர் கூடம்“ என்னும் பெயரில் அமைத்திடல் வேண்டும் என்றும், நிகழ்வுகளைத் தமிழ் அமைப்புகள் கட்டணமின்றி நடத்திக்கொள்ள- சிற்றரங்கினைத் தந்து உதவிட வேண்டும் என்றும் வேண்டிக்கொள்கிறது.
தீர்மானம் 5
திருச்சிராப்பள்ளியில் “கலைஞர் நூற்றாண்டு நூலகம்” அமைவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட, தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாடு, குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் மாண்புமிகு கா.நா. நேரு – தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேசு பொய்யாமொழி ஆகிய பெருமக்களுக்கு இக்கூட்டமைப்பு நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறது.