பாரதிதாசன் பல்கலைக்கழகம் – பெரியார் தொண்டருக்கு 1 இலட்சம் வழங்குவது நிறுத்தம் ! அதிர்ச்சியில் பெரியார் பற்றாளர்கள் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பாரதிதாசன் பல்கலைக்கழகம் – தந்தை பெரியார் பிறந்தநாள் விழா –  அகவை முதிர்ந்த பெரியார் தொண்டருக்கு 1 இலட்சம் வழங்கப்படுவது நிறுத்தம் – திருச்சி மிசா சாக்ரடீஸ், பெரியாரியப் பற்றாளர் கருணாகரன் கண்டனம்

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 2006-07ஆம் ஆண்டுகளில் கலைஞர் தலைமையில் நடைபெற்ற திமுக ஆட்சிக் காலத்தில், “பெரியார் உயராய்வு மையம்” அமைக்கப்பட்டது. அதற்குத் தமிழ்நாடு அரசு ரூ.30 இலட்சம் நிதியையும் பல்கலைக்கழகத்திற்கு வழங்கியுள்ளது. பெரியார் உயராய்வு மையத்திற்கு இயக்குநரும், கல்வி சாரா அலுவலர் ஒருவரும் நியமிக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு விதியை வகுத்துள்ளது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

பெரியார் உயராய்வு மையம்
பெரியார் உயராய்வு மையம்

மேலும், தந்தை பெரியார் பிறந்தநாள் விழா ஒவ்வொரு ஆண்டும் செப்.17ஆம் பல்கலைக்கழகத்தில் கொண்டாடப்படவேண்டும் என்றும் விதியை வகுத்தளித்துள்ளது. அந்தப் பிறந்தநாளின்போது, பெரியார் கொள்கைப்படி வாழ்ந்து அகவை முதிர்ந்த பெரியார் தொண்டருக்கு ரூ.1 இலட்சம் வழங்கவேண்டும் என்றும், பெரியார் கருத்துகளை மக்களிடம் பரப்புரை செய்து வருவோருக்கு ரூ. 50ஆயிரம் வழங்கவேண்டும் என்றும், பெரியார் குறித்து எழுதப்பட்ட சிறந்த நூல் ஒன்றுக்கு ரூ.25ஆயிரம் வழங்கப்பட வேண்டும் என்றும் விதிகள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

2007ஆம் ஆண்டு தொடங்கி தந்தை பெரியார் பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு, அகவை முதிர்ந்த பெரியார் தொண்டருக்கு ரூ. 1 இலட்சமும், பெரியார் கருத்துகளை மக்களிடம் பரப்புரை செய்வோருக்கு ரூ.50ஆயிரமும், பெரியார் குறித்த சிறந்த நூலுக்கு ரூ.25 ஆயிரம் முறைப்படி 2020ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்டு வந்தது.

பெரியார் உயராய்வு மைய இயக்குநர் (பொ) கோவிந்தராசு
பெரியார் உயராய்வு மைய இயக்குநர் (பொ) கோவிந்தராசு

இந்நிலையில், 2021ஆம் ஆண்டு பிப்.6ஆம் நாள் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பொறுப்பேற்ற பேராசிரியர் செல்வம் அவர்களின் 3 ஆண்டு காலங்களில் பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்படவில்லை. துணைவேந்தர் செல்வம் ஆளுநரோடு நெருக்கமாக உள்ள ஆர்எஸ்எஸ் சிந்தனையாளர் என்ற செய்தியும் உள்ளது.

தற்போது துணைவேந்தர் செல்வம் ஆளுநரின் அருள்பார்வையால் ஓராண்டு நீடிப்பு பெற்று துணைவேந்தர் பொறுப்பில் நீடித்து வருகிறார்.

கடந்த 2024 ஜூன் மாதத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மேனாள் ஒருங்கிணைப்பாளர், தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரியின் தமிழ் இணைப்பேராசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன் சமூக ஊடகங்களில் “பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா நடத்தப்படுவதில்லை, பெரியார் பிறந்தநாள் நடத்தப்பட பெரியாரியப் பற்றாளர்கள் குரல் கொடுக்கவேண்டும்” என்று செய்தி வெளியிட்டிருந்தார்.

பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம.செல்வம்
பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம.செல்வம்

இதனைத் தொடர்ந்து ஜூலை முதல் வாரத்தில், நாளிதழ்களில், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் செப்.17ஆம் நாள் 2023ஆம் ஆண்டுக்கான பெரியார் பிறந்தநாள் கொண்டாடப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

முனைவர் தி.நெடுஞ்செழியன் பல்கலைக்கழகத் துணைவேந்தரை நேரில் சந்தித்து, பெரியார் பிறந்தநாள் விடுபாடுகள் இல்லாமல் கொண்டாடப்படவேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். தற்போது பாரதிதாசன் பல்கலைக்கழக இணைய தளத்தில், “பெரியார் பிறந்தநாள் 2021 – 22, 22 – 23, 23 – 24 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கும் கொண்டாடப்படும்” என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், பெரியார் கொள்கைகளை மக்களிடையே பரப்பி வரும் பெரியார் சிந்தனையாளர்களுக்குப் பெரியார் சிறப்பு விருதும், பெரியார் சிந்தனைகளையொட்டி எழுதப்பட்ட சிறந்த நூலுக்கு பெரியார் விருது பரிசு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக இணையத் தளத்தில்
பல்கலைக்கழக இணையத் தளத்தில்

இதில், பெரியார் கொள்கையின்படி வாழ்ந்து அகவை முதிர்ந்த பெரியார் தொண்டருக்கு வழங்கப்படும் ரூ. 1 இலட்சம் குறித்து எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்த செய்தியாகும்.

இது குறித்து மதிமுக மாநில இலக்கிய அணிச் செயலாளர் மிசா சாக்ரடீஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“பாரதிதாசன் பல்கலைக்கழகம் என்பது மாநில அரசின் நிதியில் நடைபெறும் ஒரு தன்னாட்சிப் பெற்ற நிறுவனம். ஆண்டுதோறும் செப்.17ஆம் நாள் பெரியார் பிறந்தநாள் பல்கலைக்கழகத்தில் கொண்டாடப்பட ரூ.30 இலட்சம் நிதியைத் தமிழ்நாடு அரசு கொடுத்துள்ளது.

இந்நிலையில், பெரியார் பிறந்தநாளை விடுபாடுகள் இல்லாமல் கொண்டாடப்பட வேண்டும் என்ற பெரியாரியப் பற்றாளர்களின் வேண்டுகோளைப் பல்கலைக்கழகம் முழுமனதுடன் ஏற்று நடத்த முன்வரமால், பெரியார் பிறந்தநாளை அரைகுறையாக நடத்தி முடித்தோம் என்ற வகையில் கொண்டாடுவது என்று அறிவிப்பைப் பல்கலைக்கழக இணையத்தில் வெளியிட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

It's the gold standard! Download Peppy Gold now and use my code for a sparkling start: 'PG*YVWWWW5225'

பெரியார் பற்றாளர் கருணாகரன்
பெரியார் பற்றாளர் கருணாகரன்

அந்த அறிவிப்பில் ரூ. 1 இலட்சம், 50 ஆயிரம், 25 ஆயிரம் யாருக்கு வழங்கப்படவுள்ளது என்பது தெளிவுப்படுத்தப்படவில்லை. அகவை முதிர்ந்த பெரியார் தொண்டருக்கு வழங்கப்பட வேண்டிய ரூ. 1 இலட்சம் குறித்து எந்த அறிவிப்பும் இணையத்தில் வெளியிடப்படவில்லை என்பது வருத்தத்திற்குரியது.

ஒவ்வொரு ஆண்டுகளுக்கும் ரூ. 1.75 இலட்சம் என 3 ஆண்டுகளுக்கும் வழங்கப்படும் என்றும், அதற்குரியவர்கள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும் என்ற முறையான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. முறையான அறிவிப்பைப் பல்கலைக்கழகம் நாளிதழ்களில் வெளியிடவேண்டும். விண்ணப்பங்கள் பெற கடைசி தேதி என்று ஆகஸ்ட்டு 16 என்பது ஆகஸ்ட்டு 30 என்று மாற்றி அமைக்கப்படவேண்டும். முறையான அறிவிப்பைப் பல்கலைக்கழகம் இன்னும் ஒரு வாரத்திற்குள் அறிவிக்கவேண்டும்.

இல்லையென்றால் பெரியார் பற்றாளர்கள் பல்கலைக்கழகத்திற்குச் சென்று துணைவேந்தரிடம் பெருந்திரள் முறையீடு செய்வோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். பெரியார் பிறந்தநாளை முறைப்படி கொண்டாடுவதில் பல்கலைக்கழகத் துணைவேந்தரும், பெரியார் உயராய்வு மைய இயக்குநர் (பொ) கோவிந்தராசனும் நாடகம் ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.

திருச்சி மிசா தி.சாக்ரடீஸ்
திருச்சி மிசா தி.சாக்ரடீஸ்

மாண்புமிகு தமிழ்நாடு முதல் அமைச்சரும், தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சரும் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தருமான மாண்புமிகு பொன்முடியும், பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு உரிய அறிவுரைகளை வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பாரதிதாசன் பல்கலைக்கழகம் தொடங்கிய காலத்திலிருந்து பணியாற்றி ஓய்வுபெற்ற பல்கலைக்கழகப் பணியாளர் பெரியாரியப் பற்றாளர் கருணாகரன் அவர்கள் அங்குசம் இதழிடம் பேசியபோது,“பெரியார் பிறந்தநாள் 2021 – 24 வரை இடைவெளியில்லாமல் கொண்டாடப்படும் என்ற பல்கலைக்கழக இணைய தளத்தின் அறிவிப்பைப் படித்துவிட்டு, பெரியார் உயராய்வு மைய இயக்குநர் (பொ) கோவிந்தராசுவிடம் பேசினேன்.

அப்போது அகவை முதிர்ந்த பெரியார் தொண்டர்களுக்கு வழங்கப்படும் ரூ. 1 இலட்சம் குறித்து எந்த அறிவிப்பும் இணைய தள அறிவிப்பில் இல்லையே என்றேன். விண்ணப்பம் செய்தால் வழங்குவோம். பெரியார் பிறந்தநாள் 3 ஆண்டுகளுக்குக் கொண்டாட பல்கலைக்கழகம் ரூ. 6 இலட்சம் நிதியை ஒதுக்கியுள்ளது என்றார். தொடர்ந்து நான், அறிவிப்பு வெளியிடாமல் எப்படி விண்ணப்பம் செய்வார்கள் என்றேன்.

பேராசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன் - துணைவேந்தர் முனைவர் ம.செல்வம் - சந்திப்பு
பேராசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன் – துணைவேந்தர் முனைவர் ம.செல்வம் – சந்திப்பு

கோவிந்தராசு,‘இதற்கு நான் பொறுப்பு அல்ல. துணைவேந்தர்தான் பொறுப்பு. எல்லா விண்ணப்பங்களையும் துணைவேந்தரிடம் கொடுத்துவிடுவேன். அவர்தான் ஆட்சிக்குழு உறுப்பினர்களை வைத்து விருதுக்குரியவர்களைத் தேர்வு செய்வார். என்னைப் பொறுப்பிலிருந்து நீக்கவேண்டும் என்று தமிழ்நாடு முதல் அமைச்சருக்குக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2022, 2023 ஆம் ஆண்டுகளில் பெரியார் பிறந்தநாள் நடத்தத் துணைவேந்தரிடம் கோப்புகளை வைத்தபோது, துணைவேந்தர் ‘பெரியார் பிறந்தநாள் நடத்தவேண்டாம்’ என்று கோப்பை தூக்கி எறிந்ததை நான் எப்படி வெளியே சொல்லமுடியும். இறுதி அதிகாரம் படைத்தவர் துணைவேந்தர்.

அவர் பெரியார் தொண்டருக்கு ரூ. 1 இலட்சம் வழங்கவேண்டும் என்று முடிவெடுத்தால் இயக்குநர் பொறுப்பில் உள்ள நான் அறிவிப்பை வெளியிடுவேன். துணைவேந்தர் அப்படியொரு முடிவை எடுக்கவில்லையே….. நான்தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்று சமூக ஊடகங்களில் செய்தி வெளியாவது எனக்கு வேதனையைத் தருகிறது” என்று அலைபேசியைத் துண்டித்தார். நான் மீண்டும் தொடர்பு கொண்டபோது கோவிந்தராசோடு தொடர்பு கொள்ளமுடியவில்லை” என்றார்.

மேலும் அவர் பேசும்போது, “கடந்த காலங்களில் ரூ. 1 இலட்சம் வழங்கப்பட்ட பெரியார் தொண்டர்களில் சிலர், ஐயா ஆனைமுத்து, தி.க. வீ.அ.பழனி, திருவாரூர் தங்கராசு, ஞானலாயா கிருஷ்ணமூர்த்தி, பல்கலைக்கழகத் துணைப்பதிவாளர் தமிழ்ச் சுடர் அம்மா அவர்களுக்கு வழங்கப்பட்டது.

தற்போது பெரியார் விருது பட்டியலில் ரூ. 1 இலட்சம் என 3 ஆண்டுகளுக்கு 3 இலட்சம் மறுக்கப்பட்டு பெரியார் பிறந்தநாள் விழா நடத்துவது என்பது விழா இப்படித்தான் நடக்கவேண்டும் என்று விதி வகுத்தளித்த மறைந்த தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களுக்குச் செய்யும் துரோகம் என்பதைப் பல்கலைக்கழகம் உணரவேண்டும்.

பல்கலைக்கழகம் தொடங்கிய காலத்திலிருந்து பணியாற்றியவன் என்ற முறையில், பெரியாரின் சீடர் பாரதிதாசன் பெயரில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் பெரியார் பிறந்தநாளை மனமில்லாமல் கொண்டாடுகிறார்கள் என்று நினைக்கும்போது வேதனையாக உள்ளது.

அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடி

தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு உரிய அறிவுரைகளையும் வழிகாட்டுதலைகளையும் வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்று முடித்துக்கொண்டார்.

தமிழ் சமூகத்தின் மாற்றத்திற்கு ஆணிவேராகத் திகழ்ந்துகொண்டிருக்கும் தந்தை பெரியாரின் பிறந்தநாளை, தமிழ்நாடு அரசு விதிகளின்படி பாரதிதாசன் பல்கலைக்கழகம் கொண்டாடப்போகிறதா? அல்லது ஏதோ கொண்டாட வேண்டும் என்ற கசந்த மனநிலையில் வேண்டா வெறுப்பாகக் கொண்டாடப் போகிறதா? தமிழ்நாடு முதல் அமைச்சர், உயர்கல்வித் துறை அமைச்சர் போன்றோர் உரிய அறிவுரைகைளை வழங்குவார்களா? என்பதைப் பொறுத்திருந்துப் பார்போம்.

– ஆதவன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.