சினிமாவை வாழவிடுங்கள்- ‘தடை அதை உடை’ இயக்குனரின் உருக்கமான பேச்சு!
‘காந்திமதி பிக்சர்ஸ்’ பேனரில் அறிவழகன் முருகேசன் தயாரித்து இயக்க, அங்காடித் தெரு மகேஷ், திருக்குறள் குணாபாபு நடிப்பில், 1990-களுக்கு முன்பு பட்டுக்கோட்டையில் நடந்த உண்மைச் சம்பவத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம் ‘தடை அதை உடை’.
தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, திரை பிரபலங்களுடன் படக்குழுவினர் கலந்துகொள்ள சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நேற்று ( அக்டோபர் 21-ஆம் தேதி) இரவு நடந்தது.
இந்நிகழ்வில் பேசியவர்கள் *இசையமைப்பாளர் சாய் சுந்தர்*
“இது என் முதல் படம், முதல் மேடை.என்னுடைய இசை உங்களுக்கு பிடித்திருக்குமென நம்புகிறேன். இந்தப்படத்தில் பாடிய சின்னப்பொண்ணு அக்கா, காளிதாஸ், சர்வேஷ் அண்ணன் உட்பட அனைவருக்கும் நன்றி. இயக்குநர் அறிவழகன் தான் எல்லாப் பாடல்களையும் எழுதினார். மிக அழகாகவே எழுதியுள்ளார். இந்த வாய்ப்பு தந்த அறிவழகன் சாருக்கு நன்றி. படம் உங்களுக்கு பிடிக்குமென நம்புகிறேன்”.
நடிகர் குணா பாபு
“சின்ன டீமான நாங்கள் எல்லோரும் சேர்ந்து உழைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளோம். அருள்தாஸ் அண்ணன் எங்களுக்காக வந்துள்ளார். அவருடன் நான் விக்ரம் படத்தில் வேலை பார்த்தேன். அவருடன் வேலை பார்த்தது சந்தோசம். கேடி என்கிற கருப்புதுரை பார்த்து, பாரி அண்ணன் அறிவழகன் சாரிடம் அறிமுகப்படுத்தினார். அப்படித் தான் இந்த வாய்ப்பு கிடைத்தது. மிக அழகாக இப்படத்தை எடுத்துள்ளார். முயன்றே எழுவோம், விழுந்தே எழுவோம் என ஒரு வரி படத்தில் வருகிறது அனைவருக்கும் ஊக்கம் கொடுக்கும் வரிகள்”.
நடிகர் அருள்தாஸ்
“இந்த படக்குழுவில் வெகு சிலரை மட்டும் தான் தெரியும். இயக்குநர் வெளிநாட்டில் வேலை பார்ப்பவர். அவர் சம்பாதித்த பணத்தில் அவரது சொந்த ஊரில் படமெடுத்துள்ளார்.
வாய்ப்புத் தேடும் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்ததற்காக அவரை கண்டிப்பாக பாராட்டலாம். எல்லோருமே திறமையாளர்கள். நண்பர் பாரி நல்ல ரோல் செய்துள்ளார். எல்லா நடிகர் நடிகையர்களுக்கும், தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். இந்த முயற்சி எல்லோருக்கும் வெற்றியைத் தரட்டும்”.
‘திருக்குறள்’ இயக்குநர் ஏ.ஜெ. பாலகிருஷ்ணன்
“இந்தப்படத்தின் பெயர் மிக முக்கியமானது. உலகளவில் பார்த்தால் எழுத்து தடை செய்யப்பட்டது, நாடகங்கள் தடை செய்யப்பட்டது, சினிமா தடை செய்யப்பட்டது. அந்தவகையில் தடை அதை உடை எனும் இப்படம் ஜெயிக்க என் வாழ்த்துக்கள். இவ்விழாவிற்கு நான் வரக் காரணம் எங்கள் படத்தில் நடித்த குணா தான்.

என் படத்தில் குதிரை சவாரியில் உயிரைப் பணயம் வைத்து நடித்தார். அவர் அர்ப்பணிப்பு பெரிதாக இருந்தது. இந்தப்படக்குழுவினர் பெரும் உழைப்பில் இப்படத்தை எடுத்துள்ளனர். புதிய குழு ஜெயிக்க என் வாழ்த்துக்கள்”.
படத்தின் இயக்குநர் அறிவழகன்
“எனது சொந்தப் பணத்தை போட்டு எடுத்ததற்காக ஊரே திட்டிக்கொண்டிருக்கிறார்கள். உனக்கு ஏன் வேண்டாத வேலை என்றார்கள். ஆனால் ஜெயித்து விடுவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருப்பதற்கு காரணம் மக்களும் பத்திரிகையாளர்களும் தான். நல்ல படைப்பை கைவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. என் தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் வரும் அளவு திறமை இருக்கிறது. படம் பரபரவென போகும். கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும். ஒரு மாதம் சினிமா எடுக்காமல் இருந்தால் பல குடும்பங்கள் தெருவுக்கு வந்துவிடும்.அதே சமயம் விமர்சகர்கள் படத்தை விமர்சிக்காவிட்டால் எதுவும் நடக்காது. தயவு செய்து சினிமாவை வாழ விடுங்கள். இந்தப்படம் உங்களை யோசிக்க வைக்கும், உங்கள் வாழ்க்கையை மாற்றும். அனைவரும் பாருங்கள்” என உருக்கமாக பேசினார்.
‘தடை அதை உடை’ யில் ‘அங்காடித் தெரு’ மகேஷ், சமீபத்தில் வெளியான ‘திருக்குறள்’ படத்தில் இரண்டாவது கதாநாயகனாக நடித்த குணா பாபு, கே.எம்.பாரிவள்ளல், திருவாரூர் கணேஷ், மஹாதீர் முகமது ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர்.
இயக்குனர், எழுத்தாளர் மற்றும் நடிகர் வேல்முருகன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பாக்கியம் கௌதமி, பிரபல மேடை நாடக நடிகர் எம்.கே.ராதாகிருஷ்ணன், மற்றும் இவர்களுடன் விளாங்குடி எம்.ஆர். நாகராஜ், டெல்டா சரவணன், ஆம்பல் சதீஷ், காத்து கருப்பு கலை, சுபா, சூரியபபிரதாபன் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். தங்கப்பாண்டியன், சோட்டா மணிகண்டன் இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர். அறிவழகன் பாடல்கள் எழுத, சாய் சுந்தர் இசையமைத்துள்ளார்.
படத்தொகுப்பு: டாய்சி
கலை இயக்கம் – சிவகுமார், மணி,
தயாரிப்பு மேற்பார்வை -வேல்முருகன்
நிர்வாகத் தயாரிப்பு – சாமிநாதன் நாகராஜன், காமராஜ் மற்றும் தமிழ்வாணன்.
மக்கள் தொடர்பு: புவன் செல்வராஜ்
கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த அறிமுக இயக்குனர் அறிவழகன் முருகேசன்.
— ஜெடிஆர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.