சமர்த்துப் பிள்ளை தான், ஆனா…
அண்ணன் சூர்யா தயாரித்து, தம்பி கார்த்தி நடித்து, முத்தையா டைரக்ட் பண்ணிய ‘விருமன்’ படம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி ரிலீசாகி, இரண்டாவது வாரத்திலும் 300 தியேட்டர்களில் ஓடியது. ‘விருமன்’ ஹிட்டா? அவுட்டா? என டுபாக்கூர் யூடியூப் பேர்வழிகள் தாறுமாறு தக்காளிச் சோறு கிண்டினார்கள். நமக்கு எதுக்கு அந்தக் கெரகமெல்லாம்?
இப்ப நாம் சொல்ல வர்றது என்னன்னா.. ‘விருமன்’ நாயகி அதிதி ஷங்கரப் பத்தியும் அவரின் சம்பளத்தப் பத்தியும் தான். விருமனில் நடிப்புக்கும் நடனத்திற்கும் அதிதி பாஸ் மார்க் வாங்கிவிட்டாலும் இன்னும் கொஞ்சம் பயிற்சி எடுத்தால் ஹிட் ஹீரோயின் லிஸ்டில் சேருவார் என்றன அனைத்து விமர்சனங்களும். நமது அங்குசம் விமர்சனத்திலும் அதிதியைப் பாராட்டியிருந்தோம்.
பொதுவாக ஹீரோயின்களுக்கு முதல் படம் என்றால் மிக சொற்பத் தொகையே சம்பளமாக தருவார்கள். ஆனால் படத்தின் தயாரிப்பாளரான சூர்யாவோ, டைரக்டர் ஷங்கரின் மீதுள்ள அபிமானத்தாலும் மரியாதையாலும் கௌரவமான சம்பளத்தையும் படத்தின் புரமோஷனுக்காக அதிதி காட்டிய அக்கறைக்கும் ஆர்வத்திற்கும் குறிப்பிடத்தகுந்த அளவு தொகையும் கொடுத்தார்.
‘விருமன்’ ரிலீசாவதற்கு சில நாட்களுக்கு முன்பு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘மாவீரன்’ என்ற படத்திலும் கமிட்டானார் அதிதி. படத்தின் தயாரிப்பாளர் அருண் விஸ்வா ஆந்திரக்காரர் என்பதால் (சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ படத்தின் இணைத் தயாரிப்பாளரும் இவர் தான்) அதிதிக்கு 40 லட்சம் சம்பளம் கொடுத்துள்ளாராம்.
வீட்டில் அதிதிக்கு ஷங்கர் நடிப்புப் பயிற்சி கொடுக்க, மற்ற ஹீரோயின்களின் மேனரிசம், ஆக்டிவிட்டீஸ் இவற்றிலிருந்து எப்படி டிஃபெரண்டாக இருக்க வேண்டும் என்பதை அதிதியின் அம்மா ஈஸ்வரி தான் சொல்லிக் கொடுக்கிறாராம். இவர்கள் இருவரையும்விட முக்கியமான ஆள் என்றால் அது தங்கதுரை என்பவர் தான். சூர்யாவின் மேனேஜராக இருக்கும் இந்த தங்கதுரை தான் அதிதிக்கு கதை கேட்பது, சம்பளம் ஃபிக்ஸ் பண்ணுவது எல்லாமே.
“புள்ள சமர்த்து தான், ஆனா இப்பவே சம்பளம் அதிகம்னா போகப்போக எவ்வளவு ஏறுமோ?”.. என்கிறார்கள் சில தயாரிப்பாளர்கள்.
-மதுரை மாறன்