கோயம்பேடு போகும் … ஆனா, போகாது … ! குழப்பம் – குளறுபடி – கிறுகிறுக்க வைத்த கிளாம்பாக்கம் பேருந்து முனையம் !
கோயம்பேடு போகும் … ஆனா, போகாது … ! குழப்பம் – குளறுபடி – கிறுகிறுக்க வைத்த கிளாம்பாக்கம் பேருந்து முனையம் !
சென்னை பெருநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, கோயம்பேடு ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு மாற்றாக, செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் சுமார் 88.52 ஏக்கர் பரப்பளவில் புதிய பேருந்து முனையத்தை தொடங்கி வைத்திருக்கிறார், முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இந்தியாவிலேயே, மிகப்பெரிய பேருந்து முனையம் என்ற பெருமையோடு, பல்வேறு நவீன வசதிகள் பலவும் கொண்டதாக 393.74 கோடி ரூபாய் செலவில், தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் இந்த பேருந்து முனையம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ”கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்” என பெயரிடப்பட்டுள்ள இந்த முனையம் 2024 ஆம் ஆண்டு ஜனவரி-01 முதல் செயல்படத் தொடங்கும் என்பதாக அறிவித்திருந்தார்கள்.
பேருந்துகளே இல்லாத பேருந்து முனையத்தை திறந்து வைப்பது எப்படி சரியாக இருக்கும் என்று யோசித்தார்களோ, என்னவோ? அரசு அறிவிப்பதற்கு ஒருநாள் முன்னதாகவே, ”கிளப்புடா வண்டிய கிளாம்பாக்கத்துக்கு”னு சொல்லிட்டாங்க போல. பணி நிமித்தமான நேர்காணல் ஒன்றுக்காக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்தில் (SETC) திருச்சியிலிருந்து சென்னை கோயம்பேடு எம்.ஜி.ஆர். பேருந்து முனையத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்திருக்கிறார்.
டிச-30 அன்று இரவு 10 மணிக்கு திருச்சியிலிருந்து புறப்படும் அந்த பேருந்து மறுநாள் அதிகாலை சென்னை கோயம்பேடு சென்றடையும் விதத்தில் டிக்கெட் விநியோகிக்கப்பட்டிருக்கிறது. சாதா வகை பேருந்து அல்ல; குளிர்சாதன வசதி கொண்டு படுக்கை வசதியுடன் கூடிய பயணம். பேருந்து கட்டணமாக 755 வசூலித்திருக்கிறார்கள். இதுவரை எல்லாமே சுபம்தான். பேருந்தில் ஏறியாச்சு. பேருந்து கிளம்பியது. அதிகாலையும் வந்தது. கலைந்தும் கலையாத தூக்கக்கலக்கத்தோடே பேருந்திலிருந்து இறங்கி பார்த்தால், பயணிகள் அனைவருக்குமே அதிர்ச்சி காத்திருந்தது. ஒருவர் முகத்தை ஒருவர் வியப்போடு பார்த்தபடியே, ”இப்போ நாம எங்கே இருக்கிறோம்?” என்ற கேள்விதான் அனைவரது இடத்திலும். “புதுசா திறந்திருக்க கிளாம்பாக்கம் சார்” என்றிருக்கிறார், நடத்துனர்.
”கோயம்பேட்டுக்குத்தானே டிக்கெட் எடுத்திருக்கிறோம். கிளாம்பாக்கத்தில் இறக்கிவிட்டால், எப்படி? அதுவும் அதிகாலை 3 மணிக்கு. நாங்கள் இருங்கிருந்து கோயம்பேடு எப்படி செல்வது?” என்று பயணிகள் கோரஸாக கேட்க. “கிளாம்பாக்கம் வரைதான் பேருந்தை இயக்க அனுமதி கொடுத்திருக்காங்க. நாங்க ஒன்னும் சொல்ல முடியாது. அதிகாரிங்க கிட்ட பேசிக்கோங்க.” என நழுவினார், நடத்துனர். அந்த அதிகாலையில், எந்த அதிகாரியைத் தேட? கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்குள்ளேயே அமைந்திருந்த அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில் உறங்கிக்கொண்டிருந்த அலுவலர் ஒருவரை எழுப்பி முறையிட்டோம்.
தூக்கத்தை தொந்திரவு செய்திட்டோம்னு நினைச்சாரோ, என்னவோ, “தென்மாவட்ட பேருந்துகள் இனி இங்கிருந்துதான் இயங்கும் என்று அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதைப் பார்க்கவில்லையா?” என்றார் எழுந்த வேகத்திலேயே நக்கலாக. அதெல்லாம் சரி, நீங்கள் படித்த அதே செய்திதாள்களில் ஜனவரி-01 முதல்தான் இந்த புதிய நடைமுறை செயல்படத்தொடங்கும் என்பதாகத்தானே அறிவித்திருக்கிறார்கள். இன்று டிச-31 தானே? என்றிருக்கிறார்கள், பயணிகள். “நான் கிளார்க்தான். காலைல 8 மணிக்கு அதிகாரிங்க வருவாங்க. அவங்ககிட்ட கேட்டுக்கோங்கனு..” சொல்லிட்டு பழையபடி உறங்க ஆயத்தமானார், அந்த ’அதிகாரி’. அடுத்த அதிகாரி வரும் வரையில் அவர் உறங்கலாம்.
ஆனால், ஆயிரம் சோலியோடு சென்னைக்கு வந்த எல்லோரும் சேர்ந்தே உறங்க முடியுமா? துளைத்தெடுக்கும் அந்த மார்கழிப் பணியிலும் குழந்தை குட்டிகளையும், கூடவே சுமந்துவந்த சுமைகளையும் சுமந்தபடி பேருந்து முனையத்தை விட்டு வெளியேறி, ஆளுக்கொரு ஆட்டோவை பிடித்து அவரவர் செல்லும் இடங்களுக்கு சென்றிருக்கின்றனர், அந்த அதிகாலை 3.30 மணியளவில். அதிக கட்டணம் கொண்ட குளிர்சாதன வசதியுடைய ஸ்லீப்பர் கோச் என்பதால் அதன் வாடிக்கையாளர்களால் ஆட்டோ பிடித்து பயணிக்க முடிந்தது. இதே, போக – வர என கச்சிதமாக சில்லரையை எண்ணி பயணிக்கும் அன்றாடங்காய்ச்சிகளாக இருந்தால்? தடுமாறித்தான் போயிருப்பார்கள்!
பொங்கல் பண்டிகை வரையில் பழைய நடைமுறையே நீடிக்கும் என்பதாக அறிவித்திருக்கிறார், போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர். மேலும், இணைப்பு பேருந்து சேவை குறித்தும், எத்தனை நிமிடங்களுக்கு ஒருமுறை பேருந்துகள் இயக்கப்படும் என்றெல்லாம் விரிவாக பேசியிருக்கிறார். ஆனாலும், கிளாம்பாக்கத்தோடு பயணம் முடித்து வைக்கப்பட்டிருக்கிறது. ரயில்நிலைய இணைப்பு, இணைப்பு பேருந்து வசதிகள், மிக முக்கியமாக இணைப்பு மேம்பாலம் கட்டப்படாமலேயே அவசரகதியில் இந்த பேருந்து முனையம் திறந்து வைக்கப்பட்டிருப்பதாக விமர்சிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
மிக முக்கியமாக, பொங்கல் பண்டிகையையொட்டி, ஏற்கெனவே முன்பதிவு செய்த பயணிகளிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தொடர் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா, தமிழக அரசும் சம்பந்தபட்ட போக்குவரத்து துறையும்?
-ஆதிரன்.