மேட்டூர் அணை திறக்கும் தேதியை முதல்வர் அறிவிப்பார்:
மேட்டூர் அணை திறக்கும் தேதியை முதல்வர் அறிவிப்பார்:
துரைமுருகன் தகவல்!
குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடும் தேதியை விரைவில் முதல்வர் அறிவிப்பார் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அணையில் 97 அடி தண்ணீர் உள்ள நிலையில் இந்த ஆண்டு ஜூன் 12 தண்ணீர் திறப்பது குறித்தும் தூர்வாரி பணிகள் குறித்தும் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி துறை அமைச்சர் கே என் நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எட்டு மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ஜூன் 12ல் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்க இக்கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளதாகவும், விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தையும் முதல்வரிடம் எடுத்துச் சென்று ஆலோசனை செய்து, அதன்பின்னர் தண்ணீர் திறக்கும் தேதியை முதல்வர் அறிவிப்பார் என்றும் கூறினார்.
மேலும் தூர்வாரும் பணிகள் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர் இந்த ஆண்டு போதிய கால அவகாசம் இல்லாத காரணத்தினால் தூர்வாரும் பணியை உடனடியாக தொடங்க இருக்கிறோம் அடுத்த ஆண்டு தூர்வாரும் பணியில் விவசாயிகள் சொன்ன கருத்துகளை ஏற்று மாற்றி அமைக்க ஆவன செய்யப்படும் என்றார் துரைமுருகன்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்க வேண்டும் என்றும், அப்போதுதான் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாட முடியும் என்றும் கூறினர்.
மேலும் தூர்வாரும் பணியை முறைப்படுத்தி அனைத்துப் பகுதிகளிலும் தூர்வார வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.