அதானியின் குள்ளநரித்தனம் அம்பலம்!
அதானியின் குள்ளநரிதனம்..
இந்தியாவில் பல அரசு நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விட்டார்கள். அந்த ஏலத்துல அதானி நிறுவனமும் கலந்துகொண்டது. அதானி நிறுவனம் இதில் 4 நிலக்கரி சுரங்கங்களை ஏலத்தில் எடுத்தது. மற்ற நிலக்கரி சுரங்கங்களை வேறு பல நிறுவனங்கள் எடுத்தன. இதில் அதானி நிறுவனத்திற்கு கிடைத்த ஏல விலைதான் மிக மிக குறைவாக இருந்தது.
அதாவது அரசாங்கத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும்படியாக இருந்ததாக பேசப்படுகிறது. அதைப்பற்றிதான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.
கடந்த 2022 நவம்பர் மாதம் ஏல வரலாற்றில் வரலாறு காணாத வகையில் 141 நிலக்கரி சுரங்கங்களை ஏல விற்பனைக்கு மத்திய அரசு முன் வைத்தது. இதில் அதானியின் நிறுவனமான எம்.எச்.நேச்சுரல் ரிசோர்ஸ் பிரைவேட் லிமிடெட் ஏலத்தில் கலந்துகொண்டது. முக்கியமாக இது மகாராஷ்டிராவில் உள்ள ஒரு பெரிய நிலக்கரி சுரங்கத்தை ஏலத்தில் எடுப்பதற்காக பங்கேற்றது.
இதில் அதானி நிறுவனம் அந்த ஏலத்தை எடுத்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இது எப்படி என்று பார்த்தோமென்றால் அதானி நிறுவனத்துடன் போட்டி போட்ட கம்பெனி ஒன்றே ஒன்றுதான்.
அது கேவில் மைனிங் என்ற கம்பெனிதான். இந்த கம்பெனி ஆரம்பித்து 11 மாதம்தான் ஆகிறது. இது எப்படி அதானி நிறுவனத்துடன் போட்டி போட்டது என்ற கேள்வி எழுந்தது.
மேலும் இந்த நிறுவனம் ஏலம் எடுப்பதற்கு எந்த முனைப்பும் காட்டவில்லையாம். உப்புக்கு சப்பாணி என்ற வகையில் பங்கேற்ற அந்த நிறுவனம் அதானியின் நிறுவனத்திற்கு அந்த ஏலத்தை விட்டுக்கொடுத்து விட்டு போனது.
இந்த ஏலத்திற்கு வந்த மகாராஷ்டிராவிலுள்ள 200 மில்லியன் டன் நிலக்கரி உள்ள நிலக்கரி சுரங்கத்தை வெட்டி எடுத்து விற்றால் மிகப்பெரிய லாபம் ஈட்டலாம். அப்படியிருந்தும் இந்த ஏல நிகழ்வு எப்படி ஏற்பட்டது என்ற பல கேள்விகள் எழுந்தன.
இந்த கேவில் மைனிங் உரிமையாளர் உத்கர்ஷா. இவருக்கு ஏடிஐ கார்ப்பரேஷன் என்ற இன்னொரு கம்பெனியும் உள்ளது. இந்த ஏடிஐ கார்ப்பரேஷன் அதானி நிறுவனத்தின் பினாமி கம்பெனியாக செயல்பட்டு வந்தது தற்போது தெரியவந்துள்ளது.
இந்த கேவில் மைனிங் கம்பெனியும். ஏடிஐ கார்ப்பரேஷனும் ஒரே முகவரியில்தான் செயல்படுகிறது. இதில் ஏற்கனவே ஏடிஐ கார்ப்பரேஷன் மீது முறைகேடு புகாரும் உள்ளது. 2020ம் ஆண்டு இந்த ஏடிஐ கார்ப்பரேஷனுக்கு அதானியின் முக்கிய 4 கம்பெனிகள் மூலம் ரூ.620 கோடி கடனாக கொடுக்கப்பட்டது.
பின்னர் சில மாதங்களிலேயே இந்நிறுவனம் ரூ.610 கோடியை அதானி பவரில் திரும்ப செலுத்தியது. திருப்பிக்கட்டவே முடியாத இந்த பெரிய தொகையை எப்படி ஏடிஐ கார்ப்பரேஷன் திருப்பி கட்டியதுதான் ஏற்க முடியாத ஒன்று.
அதானிக்கு பினாமி நிறுவனமாக ஏலத்தில் போட்டியிட்ட கேவில் மைனிங் நிறுவனத்தின் உரிமையாளர் உத்கர்ஷாவும் அதானியும் நெருங்கிய நண்பர்கள் என்று பல ஆங்கில நாளேடுகளில் செய்தி வெளி வந்தன. இதை வைத்து பார்க்கும்போது அதானி நிறுவனத்தின் பினாமி நிறுவனமாக கேவில் மைனிங் செயல்பட்டது கண்கூடாக தெரிகிறது.
இதே போல சட்டீஸ்கரில் உள்ள புருங்கா நிலக்கரி சுரங்கத்தை அதானியின் நிறுவனமான சிஜி நேச்சுரல் ரிசோர்ஸ் பிரைவேட் லிமிடெட், ஹைதராபாத்தில் உள்ள கட்டுமான பொறியியல் நிறுவனமான பவர்மெக் புராஜெக்ட்ஸ் லிமிடெட்க்கு எதிராக போட்டியிட்ட நிலையில் அந்த ஏலத்தை அதானியின் சிஜி நேச்சுரல் ரிசோர்ஸ் கைப்பற்றியது.
இதில் பவர் மெக் கடந்த ஆண்டுதான் அதானி குழுமத்திடமிருந்து ரூ.6,000 கோடிக்கும் அதிகமான ஆர்டர்களை பெற்றிருந்தது.
அதற்கு கைமாறாக இது அதானி நிறுவனத்திற்கு சாதகமாக ஏலத்தை விட்டுக்கொடுத்துள்ளது.
மகாராஷ்டிராவிலுள்ள தஹேகோன் கோலாரி நிலக்கரி சுரங்கத்தை அதானியின் மற்றொரு நிறுவனமான அம்புஜா சிமிண்ட்ஸ், மேற்கு வங்கத்தை சேர்ந்த வணிக கூட்டு நிறுவனமான கங்காராம்சக் மைனிங் (பி) லிட்., நிறுவனத்தை பெயரளவுக்கு போட்டி போட செய்து தஹேகான் கோவாரி சுரங்கத்தை கைப்பற்றியது.
ஓல்டு மெஹரா உஜ்ஜயினி நிலக்கரி சுரங்கம் ஏலத்திற்கு வந்தது. இதில் அதானி நிறுவனத்திற்கு எதிராக குஜராத்தின் அரசு நிறுவனமான மினரல் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் 7.5 சதவீதத்திற்கு அதானி நிறுவனத்திற்கு விட்டுக் கொடுத்து போனது.
இதில் அதானி நிறுவனம் மொத்தமாக எடுத்த 3 நிலக்கரி சுரங்கங்களின் ஏலம் மதிப்பு வெறும் 5.5 சதவீதம்தான். ஒன்று மட்டும் 7.5 சதவீதமாகும். இந்த 5.5 சதவீதம் என்பது அரசுக்கு மிகப்பெரிய வருமான இழப்பாகும்.
2021ம் ஆண்டில் நிலக்கரி ஏலம் மந்தமாக இருப்பதாக கூறி ஏலத்திற்கு தேவையான குறைந்தபட்ச தகுதியுள்ள ஏலதாரர்களின் எண்ணிக்கையை மூன்றிலிருந்து இரண்டாக குறைத்தது மத்தியில் ஆளும் மோடி அரசு.
மூன்றுக்கும் குறைவான தகுதியுள்ள ஏலதாரர்கள் இருந்தால் முதல் முயற்சியிலேயே ஏலம் ரத்து செய்யப்படும் என்ற நிபுணர் குழு பரிந்துரைகளை கண்டுகொள்ளாமல் 2 நிறுவனங்கள் மட்டும் ஏலத்தில் இடம்பெறச் செய்யும் விதியை உருவாக்கியது.
புதிய விதிகள் அமலான பிறகு அதானி நிறுவனங்கள் பங்கேற்கும் ஏலத்தில் மட்டும் அதானி நிறுவனத்தின் பினாமி நிறுவனமே பங்கேற்றது நிரூபணமானது.
அரசாங்கத்தின் விதிமுறைகளின்படி ஏலம் எடுக்கும் நிறுவனத்திற்கு சாதகமாக மற்றொரு கம்பெனி பங்கேற்றால் ஏலம் ரத்து செய்யப்படும் என்று கூறப்படுகிறது. அதுபோல அதானி ஏலத்திற்கு எடுத்த 4 நிலக்கரி சுரங்கங்களும் ரத்து செய்யப்படுமா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
நன்றி : ஸ்க்ரோல்