மீண்டும் வேலையை காட்டத்துவங்கும் வசூல் மன்னர்கள் ……
பழைய ஸ்டேஷனுக்கு திரும்பி
பணம் வசூலிக்கும் போலீசார்
சிவகங்கை மாவட்டத்தில் மணல் கொள்ளை அதிகளவு நடந்து வருகிறது. இது தவிர டாஸ்மாக் பார்கள் என மாவட்டத்தில் உள்ள 20க்கும மேற்பட்ட ஸ்டேஷன்களில் சிறப்பு எஸ்ஐக்கள் பலர் “நாட்டாமை’, போல செயல்பட்டு கட்டப்பஞ்சயாத்து செய்து வருவதாக புகார்கள் கிளம்புகின்றன. இவர்கள் அனைவரும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் அருகாமையில் உள்ள ராமநாதபுரம், விருதுநகர், மதுரை மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டனர். தேர்தல் தேதி அறிவிப்புக்கு பிறகு புதிதாக வெளிமாவட்டங்களில் இருந்து இன்ஸ்பெக்டர், எஸ்ஐ, சிறப்பு எஸ்ஐக்களாக வந்திருந்தவர்கள் மணல் கடத்தல், புறநகரில் இயங்கிவந்த பார்கள், கட்டப்பஞ்சயாத்துக்களை ஒழித்தனர். இதனால் வருமானம் இழந்த ஆளுங்கட்சியினர், தேர்தல் முடிந்தபின் தங்களுக்கு வேண்டப்பட்ட சிறப்பு எஸ்ஐக்களை, தாங்கள் விரும்பிய ஸ்டேஷன்களுக்கு மீண்டும் கொண்டு வந்து விட்டனர். மீண்டும் வசூல் மன்னர்கள் தங்கள் வேலையை காட்டத்துவங்கி விட்டனர். திருப்பாச்சேத்தி, திருப்புவனம், மானாமதுரை, சிப்காட், பூவந்தி, காரைக்குடி டவுன், சிவகங்கை டவுன், ரூரல் என பல போலீஸ் ஸ்டேஷன்களில் மணல் கொள்ளையர்களுடன் பல சிறப்பு எஸ்ஐக்கள், மாமா, மச்சான் உறவுமுறை சொல்லி மாமூலால் லட்சாதிபதியாகியுள்ளனர். சமூக விரோதிகளுடன் நெருங்கிய நட்பு கொண்டிருப்பதால் மாவட்டத்தில் நடந்த கொலை, கொள்ளைகளை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்கின்றனர். தென்மண்டல ஐஜி, கொஞ்சம் சிரத்தை எடுத்து மீண்டும் பணிக்குத் திரும்பி வசூலில் ஜொலிப்பவர்களை இனம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வலுத்துள்ளது.