இயக்குநர் வேலு பிரபாகரன் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு
சமீபத்தில் மறைந்த திரைப் பெரியார் இயக்குநர் வேலு பிரபாகரன் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு நேற்று சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.
நிகழ்வில் நடிகர் சத்யராஜ், இயக்குநார் கதிர், பாடகர் அந்தோணி தாசன், ப்ளூ சட்டை மாறன், இயக்குநர் அகரன், தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன், திராவிடர் விடுதலைக் கழக பொதுச்செயலாளர் விடுதலை ராசேந்திரன், திராவிடர் கழக பொருளாளர் வீ. குமரேசன், தயாரிப்பாளர் சிட்டிபாபு ஆகியோர் கலந்து கொண்டு நினைவேந்தல் உரை ஆற்றினார்கள்.
நடிகர் சத்யராஜ் இயக்குநர் வேலு பிரபாகரனின் படத்தை திறந்து வைத்து பேசும் போது வேலு பிரபாகரன் கொடுத்த ஒரு புத்தகம் தான் தன்னை சிந்திக்க தூண்டியதாகவும், தன்னை பகுத்தறிவாளனாக மாற்றியதாகவும், தான் பகுத்தறிவாளனாக மாறியதால் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினார். மேலும் வேலு பிரபாகரன் மருத்துவமனையில் இருந்த போது தொலைபேசியில் ஆறுதல் சொல்ல அழைத்தபோது ‘நான் பிறந்து பெரியாரின் கருத்துக்களை இந்த மக்களுக்கு என்னால் முடிந்தவரை கொண்டு சேர்த்திருக்கேன். நான் வந்த வேலை நிறைவாக முடிந்திருக்கிறது’ என்று சொன்னதாகவும் பேசிய அவர், ஒரு பகுத்தறிவாளன் மரணத்தைக் கூட எப்படி இயல்பாக எடுத்துக் கொள்கிறார் பாருங்கள் என்று சிலாகித்து பேசினார்.
மேலும் வந்திருந்த ஆளுமைகள் அனைவரும் வேலு பிரபாகரனுக்கும் தங்களுக்குமான நட்பையும், அன்பையும், தங்கள் அனுபவங்களையும் கூறி இயக்குநர் வேலு பிரபாகரனின் கொள்கை பற்றியும், சிந்தனைக் கூர்மையையும், தொழில்நுட்ப வல்லமையையும் பாராட்டி அவரது நினைவுகளை நினைவுகூர்ந்தனர்.
இந்நிகழ்வை இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தொகுத்து வழங்கி தனது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். இறுதியாக அவருக்கு உற்ற துணையாக இருந்த டிஜிட்டலி ஜெகதீஷ், அவரது சகோதரர் வேலு ராஜா, அர்ஜுன் வேலு ஆகியோர் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டு நன்றி உரையாற்றினர்.
— மதுரை மாறன்