செவ்வஞ்சலி தோழர் நாறும்பூ நாதன்.
ஆதிச்சநல்லூர் நாகரிகம் பற்றிய அரிய தகவல்கள் ஆய்வுப் பூர்வமாக வந்திருந்த நேரம். அது தொடர்பாகச் சிலரிடம் நேர்காணல் நடத்திக் கட்டுரையாகத் தர வேண்டும் என ‘செம்மலர்’ ஆசிரியர் குழுவில் முடிவு செய்யப்பட்டது.. அதற்காகத் தயாராகிக்கொண்டிருந்தபோது தொலைபேசியில் தொடர்புகொண்டார் தோழர் நாறும்பூநாதன். “நீங்க அதைப் பத்தி எழுதறதுக்கு முன்னால நான் சொல்றதைக் குறிச்சு வைச்சுக்கோங்க. என்கிட்ட இருக்கிற மத்த தகவல்களையும் அனுப்புறேன். அதையெல்லாமும் உங்ககிட்ட இருக்கிற விசயங்களோடு சேர்த்து எழுதுங்க,” என்று கூறினார். அரை மணி நேரத்தில் அந்தத் தகவல்கள் மின்னஞ்சலில் வந்து சேர்ந்தன. அந்தக் கட்டுரை சிறப்பான ஒன்றாகப் பாராட்டுப் பெற்றது. இவ்வளவு தகவல்களையும் வைத்து அவரே ஒரு கட்டுரை எழுதியிருந்தால் வேறு எந்த ஏடும் அதை அப்படியே வெளியிட முன்வந்திருக்கும். ஆனால் செம்மலரில் வர வேண்டும் என்ற எண்ணத்தோடும், எனக்கு உதவுகிற அன்போடும் அவற்றைப் பகிர்ந்துகொண்டார்.
இப்படி மற்றவர்களுக்கு உதவுவது அவருடைய இயல்பிலேயே இருந்தது. இலக்கியப் படைப்பாக்கத்திலும், பகிர்வுக் கூட்டங்களிலும் பங்கேற்றுக்கொண்டே இத்தகைய களப்பணிகளிலும் இடையறாது ஈடுபட்டவர்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் தெருக்கூத்துக் கலைஞராக நடித்த, மெய்யான தெருக்கூத்துக் கலைஞருமான தங்கராசு, தமுஎகச கலைச்சுடர் விருது பெற்றபோது, அதைத் தெரிவிப்பதற்காக அவருடைய வீட்டுக்குச் சென்றார் நாறும்பூநாதன். மழையில் ஒதுங்கவும் இயலாத குடிசையில் அந்த அற்புத்க் கலைஞர் இருப்பதைக் கண்டு வருந்தி, பின்னர் மாவட்ட ஆட்சியரோடு தொடர்பு கொண்டார். ஆட்சியர் உடனடியாக தங்கராசுவுக்கு வீடு கட்டிக்கொடுக்க ஆணையிட்டார். இவ்வாறு பாதிக்கப்படும் எளிய மக்கள் யாராக இருந்தாலும், அரசின் உதவிகள் முறைப்படி கிடைக்கச் செய்வதற்கான முயற்சிகளில் இறங்கிவிடுவார். அந்த இயல்பின் காரணமாகவே ஆட்சியர் அலுவலகத்தில் அவருடைய குரலுக்கு எப்போதும் செவிமடுக்கும் நிலை உருவானது.
கி.ரா. உள்ளிட்ட மூத்த எழுத்தாளர்களின் கைப்பிடித்து நடந்தவர். இளம் படைப்பாளிகளுக்குக் கைகொடுத்தவர். புதிய புதிய புத்தகங்களை வாசித்து அவற்றை இணையவழி நிகழ்வுகளில் அறிமுகம் செய்வார். எப்படி அய்யா இந்தப் புத்தகமெல்லாம் தேர்ந்தெடுத்தீர்கள் என்று நான் வியந்து கேட்டிருக்கிறேன். கொரோனா நாட்களில் இணையவழிச் சந்திப்புகளில் குழந்தைகளுடன் உரையாடுவதை விரும்பிச் செய்தார். எனது இதயத்திற்கான மாற்றுப்பாதை அறுவை சிகிச்சை நடந்திருந்தபோது, தனக்கு நடந்திருந்த அதே போன்ற சிகிச்சையைக் குறிப்பிட்டு, அஞ்சாமல் இருங்கள், பணிகளைத் தொடருங்கள் என்று ஊக்கமளித்தார்.
தமுஎகச, வங்கி ஊழியர் சங்கம், நெல்லை மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி தோழர்கள் ஒவ்வொருவரும் தங்களின் சொந்த இழப்பாக உணர்வார்கள். அவரின் குடும்பத்தாருக்கும், அவருடைய சகோதரர்களும் இயக்கக் கண்மணிகளுமான சுப்பிரமணியன் ராமகிருஷ்ணன், ஓவியர் குமரகுருபரன் ராமகிருஷ்ணன் இவர்களுக்கும் எப்படி ஆறுதல் சொல்வது?
செவ்வஞ்சலி தோழர் நாறும்பூ நாதன்.