பள்ளி மாணவிக்கு ஸ்கேன் எடுக்காத மருத்துவ ஊழியர் கேள்வி கேட்டு திணறடித்த காங்கிரஸ் கட்சியினர்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பள்ளி மாணவிக்கு ஸ்கேன் எடுக்கமால் அலட்சியம் காட்டிய அலுவலரை கேள்வி கேட்டு திணறடித்த காங்கிரஸ் கட்சியினர்.
அரசு மருத்துவமனைகளில் பணிபுாியும் மருத்துவா்கள் மற்றும் மருத்துவ பணியாளா்களின் அலட்சிய போக்கினால் சிகிச்சைகாக வரும் நோயாளிகளின் மனநிலையை சீர்குலைக்கும் விதமாக பல்வேறு சம்பவங்கள் நடந்து வரும் நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் ராஜசேகர். இவருடைய மகள் தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பில் பயின்று வருகிறார். சில தினங்களுக்கு முன்பு அந்த மாணவி பள்ளி இருக்கும்போது திடீரென மயங்கி விழுந்து தலையில் அடிபட்டுள்ளது.
இதையடுத்து ராஜசேகர் பள்ளியில் இருந்து தனது மகளை அழைத்து வந்து கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். அப்போது சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர் ஸ்கேன் எடுத்து வரும்படி கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து ராஜசேகர் தனது மகளை அழைத்துக் கொண்டு ஸ்கேன் எடுக்க சென்றபோது அங்கிருந்த அலுவலர் காளியப்பன் என்பவர் தனது மகனுடன் செல்போன் பார்த்து கொண்டிருந்தார்கள் கூறப்படுகிறது.
ராஜசேகர் ஸ்கேன் எடுக்க சொன்னபோது, தான் ஜூம் மீட்டிங்கில் இருப்பதாகவும் தன்னால் எடுக்க முடியாது என்று கூறியுள்ளார். தன்னுடைய குழந்தை நிலையை பார்த்து தயவு செய்து எடுங்கள் என்று ராஜசேகர் எவ்வளவு கூறியும் காளியப்பன் எடுக்க மறுத்து விட்டதாக தெரிகிறது.
இதையடுத்து ராஜசேகர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணிடம் புகார் செய்தார். இதற்கு பின்னர் பாலகிருஷ்ணன் அறிவுறுத்திய பிறகும், அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அலட்சியம் காட்டிய ஸ்கேன் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காங்கிரஸ் கட்சியினர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இதன் பின்னர் காங்கிரஸ் கட்சியினருடன் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் மற்றும் மருத்துவர்கள் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அப்போது அங்கு வந்த ஸ்கேன் அலுவலர் காளியப்பனிடம் காங்கிரஸ் கட்சியினர் மீட்டிங் தான் முக்கியம் – சிகிச்சை அளிப்பது முக்கியமில்லை என்று அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பி திணறடித்தனர்.
இதனால் காளியப்பன் பதில் கூற முடியாமல், பரிதவித்தார். மேலும் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் கலைந்து சென்றனர். இதனால் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பேட்டி: காமராஜ்.
செய்தி : மணிபாரதி.