சோப்பு தயாரிப்பு நிறுவனத்திற்கு ரூ.17.53 லட்சம் இழப்பீடு – நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி
கரூர், செப்.14- சோப்பு தயாரிக்கும் பழைய எந்திரம் கொடுத்து ஏமாற்றிய நிறுவனம் நுகர்வோருக்கு ரூ.17.53 லட்சம் வழங்க கரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கரூர் குருநாதன் தெருவை சேர்ந்தவர் உமேஷ் குமார். இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த 2022ம் ஆண்டு ரூ24.78 லட்சம் செலுத்தி சோப்பு தயாரிக்கும் எந்திரம் வாங்கியுள்ளார். அந்த நிறுவனம் தரம் குறைந்த, பழைய எந்திரத்தை புதியது போல மாற்றி அனுப்பியது, பின்னர்தான் தெரிய வந்தது. பழைய எந்திரத்தை திரும்ப பெற்றுக் கொண்டு தனது பணத்தை திரும்ப வழங்க வேண்டும் என உமேஷ்குமார் கேட்டுள்ளார்.
ஆனால் அந்த நிறுவனம் எந்திரத்தை திரும்ப பெற்று கொள்ளாமலும், பணத்தையும் திரும்ப வழங்காமலும் இருந்துள்ளது. இதையடுத்து, கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் உமேஷ்குமார், வழக்கு தாக்கல் செய்தார். இந்த பிரச்னை குறித்து விசாரணை நடந்து வந்த சமயத்தில், குறிப்பிட்ட அந்த நிறுவனம், உமேஷ்குமார் வங்கி கணக்கில் கொஞ்சம் கொஞ்சமாக ரூ.9.35 லட்சம் செலுத்தியுள்ளது.
இந்த வழக்கில், நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் பாரி, உறுப்பினர் ராஜேந்திரன் கொண்ட அமர்வு வழங்கிய உத்தரவில், அந்த நிறுவனம் பழைய எந்திரத்தை திரும்ப பெற்றுக் கொண்டு உமேஷ்குமாருக்கு வழங்க வேண்டிய ரூ.15.43 லட்சத்தை 12 சதவீத வட்டியுடன், மன உளைச்சலை ஏற்படுத்தியதற்கு இழப்பீடாக ரூ.2 லட்சம், வழக்கு செலவுத்தொகையாக ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை உத்தரவு வழங்கிய தேதியில் இருந்து 3 மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.