விருதுநகரில் அதிவேகத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்தால் அடுத்தடுத்து உயிர்கள் பலி !
விருதுநகரில் அதிவேகத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்தால் அடுத்தடுத்து உயிர்கள் பலி ! ஒரே வழித்தடத்தில் ஒரே பதிவு எண் கொண்ட தனியார் பேருந்தின் அதிக வேகத்தால் சில மாத இடை வெளியில் அடுத்தடுத்து விபத்தில் பலியான இரண்டு உயிர்கள்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி டு சாத்தூர் 17 கிலோமீட்டர் கொண்ட இந்த சாலையில் தினம்தோறும் பள்ளி கல்லூரி தொழிற்சாலை என ஏராளமான பொதுமக்கள் தங்களது இருசக்கர வாகனங்களிலும் தனியார் பேருந்து மூலமாகவும் தினசரி பயணித்து வருகிறார்கள்.
இந்த வழித்தடத்தில் கடந்த மே 31ஆம் தேதி காலை 9 மணி அளவில் சிவகாசியில் இருந்து சாத்தூர் நோக்கி அதிக வேகத்தில் வந்த தனியார் பேருந்து மேட்டமலை கிராமம் அருகே சல்வார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி ஆட்டு வியாபாரியின் மீது மோதி சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பலியானார்.
மேற்கண்ட சம்பவத்தில் இயக்கப்பட்ட அதே தனியார் பேருந்து நேற்று செப்ட-15 காலை 9 மணி அளவில் சிவகாசியில் இருந்து சாத்தூர் நோக்கி வரும்பொழுது கோணாம்பட்டி விளக்கு அருகே இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற சிவகாசி நாரணாபுரம் பகுதியை சேர்ந்த பாப்பையா (47) மீது பேருந்து மோதி சிறிது தூரம் இழுத்துச் சென்று அருகில் இருந்த பேருந்து நிறுத்தம் பின் சுவர் பக்கவாட்டில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த பாப்பையா பேருந்து அடியில் சிக்கி படுகாயம் அடைந்த அவரை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த பிரியதர் என்ற பெண் காலில் சிறு காயங்களுடன் சாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து தொடர்பாக ஆர்.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர் தங்கம் கொடியை பிடித்து சாத்தூர் நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில்.
சிவகாசியில் இருந்து சாத்தூர் செல்லும் சாலை வரை முறையாக விபத்து பகுதிகளில் வேகத்தடையும், தடுப்பு பேரிக்காடுகளும், அமைக்காததாலும், தனியார் பேருந்துகள் தங்களுடைய லாபத்திற்காக பேருந்து நிலையங்களில், அதிக அளவிலான பயணிகளை ஏற்றுவதில் கவனம் செலுத்தி அதிக நேரம் நிற்பதாலும், அந்த நேரத்தை சாலையில் மிச்சப்படுத்த அதிவேகத்தில் பேருந்துகள் இயக்கப்படுவதாலும், இது போன்ற தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மேலும் இது போன்ற விபத்து உயிரிழப்புகள் ஏற்படாத வண்ணம் முறையான வேகத்தடையும், தடுப்புகளும், அமைத்து அதிவேகத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்துகளை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
– மாரீஸ்வரன்