டிரைவாின் காலை சிதைத்த 7 டாக்டர்கள் ! அதிரடி ட்ரீட்மெண்ட் தந்த நீதிமன்றம்!
டிரைவாின் காலை சிதைத்த 7 டாக்டர்கள் ! அதிரடி ட்ரீட்மெண்ட் தந்த நீதிமன்றம்!
விபத்தில் சிக்கி கால் பாதிக்கப்பட்ட நபருக்கு 76 இலட்ச ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டுமென்று நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. ஆக்சிடென்ட் கேசுக்கும் நுகர்வோர் நீதிமன்றத்துக்கும் என்ன சம்பந்தம் என்பதுதானே, உங்கள் சந்தேகம்? உண்மைதான். இது விநோதமான வழக்குதான். கொஞ்சம் விவகாரமானதும்கூட.
தஞ்சை – விளார் பகுதியை சேர்ந்தவர் பாரிவள்ளல். கடந்த 2022-ஆம் ஆண்டு செப்-15 அன்று சென்னைக்கு பணி நிமித்தமாக சென்றிருந்தபோது, எதிர்பாராத விதமாக டூவீலரிலிருந்து தவறி விழுகிறார். அருகில் உள்ள அருள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்கிறார். முட்டிக்கு கீழே முறிவு ஏற்பட்டிருப்பதாக, மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமென பரிந்துரைக்கிறார்கள். அதே மருத்துவமனையில் சிகிச்சையை தொடர விரும்பாத பாரிவள்ளல், அதேநாளில், தாம்பரம் அருகேயுள்ள கஸ்தூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்படுகிறார்.

அங்கு அவருக்கு செப்-16 அன்று எலும்பு மூட்டு மருத்துவர் சாய்பிரசாத் தலைமையில், மருத்துவர்கள் சுந்தர்ரஞ்சன், முகம்மது சாதிக் உள்ளிட்டோரை கொண்ட மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சையை மேற்கொள்கிறார்கள். அறுவை சிகிச்சை முடிந்த நிலையில், காலில் வீக்கம் ஏற்பட்டு கடும் வலியால் துடிக்கிறார். மருத்துவரிடம் முறையிடவே, அதே நாளில் மீண்டும் மற்றொரு அறுவை சிகிச்சையை மேற்கொள்கிறார்கள். இதனை தொடர்ந்து செப்-22 அன்று மூன்றாவது முறையாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. செப்-29 இல் நான்காவது முறையாகவும்; அக்-01 இல் ஐந்தாவது முறையாகவும் நிறைவாக, அக்-10 அன்று ஆறாவது முறையாகவும் பாரிவள்ளலுக்கு அடுத்தடுத்து அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது.
அவரது சிகிச்சையில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாத நிலையில், சம்பந்தபட்ட கஸ்தூரி மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்படுகிறார் பாரிவள்ளல். சொந்த ஊருக்கு திரும்பிய பாரிவள்ளலுக்கு, மீண்டும் தொந்தரவு ஏற்படுகிறது. சுமார் நான்கு மாதங்கள் கடந்த நிலையில், 2023 ஆம் வருடம் பிப்ரவரி 15 ஆம் நாள் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்கிறார்கள். பாரிவள்ளலை பரிசோதித்த அரசு மருத்துவர்கள் அவரது கால் இந்த அளவுக்கு சிக்கலானதற்கு இதற்கு முன்னர் செய்த அறுவை சிகிச்சைகள்தான் காரணம் என்பதை எடுத்துரைக்கிறார்கள்.

இதனை தொடர்ந்து, 25.04.2023 இல் தனியார் மருத்துவமனையான தஞ்சாவூர் வினோதகன் நினைவு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் லியோஜோசப்-பும் இதனை உறுதிபடுத்துகிறார். 31.05.2023 இல்தொடர் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு செல்கிறார்.
இங்கே, பாரிவள்ளல் பாதிப்பிற்குள்ளானதற்கு காரணமாக தஞ்சாவூர் அரசு மருத்துவர்களும் தனியார் மருத்துவரும் உறுதிபடுத்திய காரணங்கள்தான் முக்கியமானது.
கால் தசைகள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத, நான்கு தனித்தனி அறைகளாக பிரிக்கப்பட்டிருக்கும். இதில் ஏதேனும் தொந்தரவு ஏற்படும்போது, அவற்றின் மீதான வெளி அழுத்தத்தின் காரணமாக தசைகள் சேதாரமாக வாய்ப்பிருக்கிறது. முதல் முறை அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு முன்பு வரையில், கம்பார்ட்மென்டல் சின்ட்ரோம் என்றழைக்கப்படும் கால் தசை நார் பாதிப்புகள் ஏதும் பாரிவள்ளலுக்கு ஏற்படவில்லை. முதல் அறுவை சிகிச்சையில் கம்பார்ட்மென்ட் தொந்தரவாகியிருக்கிறது. அது அழுத்தத்தை கொடுக்க வீக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதன் காரணமாகவே, அதே நாளில் அடுத்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக, ஆன்ட்ரீரியர் கம்பார்ட்மென்டில்தான் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
இதனால் பாதிக்கப்பட்ட திபியாலிஸை பாரிவள்ளல் குடும்பத்தினரின் முன் அனுமதியைப் பெறாமலேயே நீக்கிவிடுகிறார்கள். இதனை தொடர்ந்து, நெக்ரோசிஸ் என்ற வகையிலான பாதிப்பு ஏற்படுகிறது. அதாவது அதிக அழுத்தம் காரணமாக செல்கள் பாதிப்பிற்குள்ளாகின்றன. திரும்பவும் மீட்டெடுக்க முடியாத செல் இழப்பை நிகழ்கிறது. இதன் காரணமாக, பாதிக்கப்பட்ட மொத்த பகுதியையும் நீக்கிவிடுகிறார்கள். இது நான்காவது அறுவை சிகிச்சையில் செய்யப்பட்டிருக்கிறது. நிறைவாக, ஆறாவதாக செய்யப்பட்ட அறுவை சிகிச்சையில், நீக்கப்பட்ட பகுதிகளின் இடத்தில் எதிர் காலின் தொடைப்பகுதியிலிருந்து சதையை எடுத்து தைத்து வீட்டுக்கு அனுப்பி விடுகிறார்கள்.
இதில், முதல் விசயம், மருத்துவர்களின் அலட்சியம் காரணமாக ஏற்பட்ட பாதிப்பு. இரண்டாவது, அதனை தொடர்ந்து நிகழ்ந்த எதிர்பாராத துணை விளைவுகள். மூன்றாவது, இவை எதுபற்றியும் சம்பந்தபட்ட நோயாளியின் குடும்பத்திற்கு தெரிவிக்காமலேயே, அடுத்தடுத்து ஆறு அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டது. இதன் காரணமாக, அவரது கால் 50% நிரந்தர ஊனமாகிப்போனது.
இந்த விவகாரங்களை முன்வைத்துதான், சம்பந்தபட்ட மருத்துவமனையின் சேவைக்குறைபாட்டுக்கு எதிராக, பாதிக்கப்பட்ட நுகர்வோராக பாரிவள்ளல் தஞ்சாவூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்கிறார்.
இவரது வழக்கை, தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் தீர்வு ஆணையத்தின் தலைவர் டி.சேகர், உறுப்பினர் கே.வேலுமணி ஆகியோரை கொண்ட அமர்வு விசாரித்தது. பாதிக்கப்பட்ட பாரிவள்ளல் சார்பில் வழக்கறிஞர் பி.சந்திரபோஸ் வழக்கை நடத்தியிருக்கிறார்.

விசாரணையில் முடிவில், மேற்படி குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆன நிலையில்தான் அதிரடி தீர்ப்பை வழங்கியிருக்கிறது, நுகர்வோர் ஆணையம்.
பாரிவள்ளலுக்கு நிரந்தர எரிச்சல் உணர்வு, வலி, துன்பம், அவரது வலது முழங்கால் சிதைந்துபோனது, உதவியாளருக்கான சேவையை அமர்த்திக் கொள்ள, வழக்கு செலவு, மற்றும் மனரீதியான வேதனை – சித்தரவதைகள் ஆகியவற்றுக்காக 50 இலட்சமும், இழப்பீடாக 15 இலட்சமும், மருத்துவ செலவுகளுக்காக 10 இலட்சமும், கூடுதல் மருத்துவ தேவைக்கு 1 இலட்சமுமாக ஆக மொத்தம் 76 இலட்ச ரூபாயை இழப்பீடாக வழங்குமாறு உத்தரவிட்டிருக்கிறார்கள்.
மேற்படி, 76 இலட்சம் ரூபாயை, பாரிவள்ளலின் பாதிப்புக்கு நேரடி காரணமாக அமைந்துள்ள மருத்துவர்கள் சாய்பிரசாத், சுந்தராஜன், முகம்மது சாதிக், கிருஷ்ணமூர்த்தி, கிருத்திகா, சரவணன் மற்றும் கஸ்தூரி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் ஆகிய ஏழு பேரும் கூட்டாக இணைந்து இழப்பீட்டை வழங்க வேண்டுமென்று தீர்ப்பளித்திருக்கிறார்கள். இழப்பீட்டை 15.09.2022 தேதியிலிருந்து 10% வட்டியுடன் வழங்க வேண்டும். தீர்ப்பு வெளியான 45 நாளுக்குள் வழங்க தவறும்பட்சத்தில், 15% வட்டி கணக்கிட்டு வழங்க வேண்டுமென்றும் தீர்ப்பளித்திருக்கிறார்கள்.
இழப்பீடு என்பது ஒருவகை ஆறுதல் மட்டுமே. இழப்பீடு அவரது இழந்த காலை ஒரு போதும் மீட்டுத்தந்துவிட போவதில்லை. பாதிக்கப்பட்ட பாரிவள்ளலின் வயது வெறும் 35-க்குள். மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறார். வாழ்க்கையை அப்போதுதான் ஆசையாய் தொடங்கியவர், எதிர்பாராத விபத்தில் சிக்கி காலை இழந்து நிற்கிறார். அடிப்படையில் வாகன ஓட்டுநர். 50% கால் ஊனத்தோடு, சட்டப்படி அவரால் இனி வாகனத்தை இயக்கவே முடியாது. பிறகு, வாழ்க்கையை எப்படி ஓட்டுவார்?
— வே.தினகரன்.