“160 வருஷத்துல அள்ளவேண்டிய மணலை 30 வருஷத்துல அள்ளிட்டாங்களே…”
“160 வருஷத்துல அள்ளவேண்டிய மணலை 30 வருஷத்துல அள்ளிட்டாங்களே…”
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், விராகலூர் கிராமத்தில் 60 ஏக்கர் பரப்பளவில் மணல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் மற்றும் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தினர்.
கட்டுமானத்தேவைக்கு மணல் தட்டுப்பாடு என்ற காரணத்தைக்கூறி, சட்டவிரோதமான முறையில் மணல் குவாரிகளைத் திறப்பதற்குப் பதிலாக, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அளவை அதிகரிக்க வேண்டும்; தமிழகத்தில் உள்ள அணைகளை முறையாக தூர்வாரினாலோ போதுமானது என்கிறார்கள்.
இவ்விவகாரம் தொடர்பாக, கூட்டமைப்பின் சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், ”45 ஆறுகள், ஆண்டு முழுக்க தண்ணீரோடு ஓடும் கேரளாவில் கடந்த 1992 முதல் 38 ஆண்டுகளாக மணல் குவாரிகள் எதுவும் இல்லை. ஆனால் 33 ஆறுகள் மட்டுமே உள்ள தமிழகத்தில், அறிவியல் முறைப்படி – இயற்கை மீண்டும் தன்னை தகவமைத்துக் கொள்ளும் வகையில் ஆற்றில் மணலை அள்ளாமல் எந்த விதியும் பின்பற்றாமல் சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டதால், 160 ஆண்டுகள் அள்ள வேண்டிய மணலின் அளவு, கடந்த 30 ஆண்டுகளில் ஆற்றின் அடிமட்டம் வரை அள்ளப்பட்டு விட்டது. இதனால் எண்ணற்ற சூழலியல் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது.
மணல் குவாரி அமைக்க, எம் சாண்ட்க்கு எதிர்ப்பு தெரிவித்தால் வீடு கட்ட மணலுக்கு என்ன செய்வது என்ற கேள்வி இயற்கையாக அனைவர் முன் எழும். ஒரு இயற்கை அழிவை தடுத்து நிறுத்த கோரிக்கை முன் வைக்கும் பொழுது, அதற்கான மாற்று சொல்லாமல் எப்போதும் அந்த கோரிக்கையை நாங்கள் முன்வைப்பது இல்லை.
ஆறுகளில் மணல் குவாரி அமைப்பதற்கு மாற்றாக, இதற்கு ஏற்கனவே தமிழக அரசு அறிவித்து நடைமுறையில் தற்போது 2022 வரை இருந்த, வெளிநாடுகளில் இருந்து இயற்கை ஆற்று மணல் மாதம் ஒன்றுக்கு 5 லட்சம் மெட்ரிக் டன் அளவு இறக்குமதி என்பதை மாதம் 15 லட்சம் மெட்ரிக் டன் என்ற அளவாக உயர்த்தி இறக்குமதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த இரண்டாண்டாக அரசுக்கு தெரிவித்து வருகிறோம். இவ்வாறு மாதம் ஒன்றுக்கு 15 லட்சம் மெட்ரிக் டன் வெளிநாட்டு இயற்கை ஆற்று மணலை இறக்குமதி செய்வதன் மூலம், தமிழகத்தின் தேவையான தினசரி சுமார் 21,000 லாரி லோடுகள் தமிழகம் முழுக்க கட்டுமானப் பணிகளுக்கு கொடுக்க முடியும். வெளிநாட்டு இயற்கை ஆற்று மணல் டன் ஒன்றுக்கு சுமார் 1,000/- க்கு இறக்குமதி செய்து கொடுக்க, நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் தயாராக உள்ளது.
எனவே தமிழக அரசு கொள்கை ரீதியாகவே, ஆறுகளில் புதிதாக மணல் குவாரி அமைக்கும் முடிவை கைவிட வேண்டும். வெளிநாட்டு இயற்கை ஆற்று மணலை இறக்குமதி செய்வதை தீவிரப்படுத்த வேண்டும்.” என்ற மாற்று திட்டத்தையும் முன்மொழிந்திருக்கிறார்கள். மிக முக்கியமாக, ”காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் தொடர்ந்து ஐந்தாண்டுகளாக, தமிழகத்தில் உள்ள 33 ஆறுகளிலும் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளை முறையாக அறிவியல் அடிப்படையில் தூர்வாரினாலே, தமிழகத்திற்கு ஐந்து ஆண்டுகளுக்கு தேவையான மணல் கிடைக்கும் என தெரிவித்து வருகிறது.
இதே கருத்தை தமிழக மூத்த பொதுப்பணித்துறை பொறியாளர் சங்கமும் அதன் தலைவர் மதிப்பிற்குரிய பொறியாளர் வீரப்பன் அவர்களும் அரசுக்கு தெரிவித்து வருகிறார். ” என்பதையும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
– அங்குசம் செய்திப் பிரிவு