வாழ்நாள் முழுமைக்கும் மாணவனாக திகழ வேண்டும் – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு !
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
”பழம் பெருமைமிக்க இந்த கல்லூரியில் பயின்று பட்டம் பெறுகின்ற நாள் மாணவ மாணவிகளுக்கு முக்கிய தருணம். மனித வளர்ச்சியில் சிறந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழ்கிறது. அதற்கான வாய்ப்பை இன்று , நேற்றல்ல 1920 ம் ஆண்டே நீதிக்கட்சி காலம் தொடங்கி அனைவருக்கும் சமமான கல்வி என்ற வாய்ப்பை ஏற்படுத்தி தந்தவை திராவிட இயக்கங்கள். அதேபோல் கிறிஸ்தவ மிஷனரிகளின் பங்கும் அதில் முக்கியத்துவம் வாய்ந்தது.
இன்று பட்டம் பெறுகிற ஒவ்வொரு மாணவ மாணவியும் கல்லூரிக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும். இதே கல்லூரியில் பயின்று வாழ்வின் உயர்ந்த நிலையை எட்டியவர்கள் பலர். அதிலும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் ஓவியர் மனோகர் தேவதாஸ். எனது சட்டமன்ற தொகுதியில் நான் போட்டியிடும் போது உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்ட பேராசிரியர் சாலமன் பாப்பையா எங்களுடைய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள சக அமைச்சர் சக்கரபாணி உள்ளிட்ட ஏராளமானோர் இந்த கல்லூரிக்கு பெருமை சேர்ப்பவர்கள்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இன்றுடன் கற்பது நின்று விடாமல் வாழ்நாள் முழுமைக்கும் கற்றுக்கொள்கிற மாணவனாக திகழ வேண்டும்.” என்றார். இந்நிகழ்வில், அமெரிக்கன் கல்லூரி முதல்வர் செயலர் டாக்டர் தவமணி கிறிஸ்டோபர் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், கலந்து கொண்டனர்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.