கிரிக்கெட் போட்டிகள் உருவானதே சூதாட்டத்திற்காகத்தான் ! IPLக்கு முன்பும் கிரிக்கெட் இருந்தது (11)
“எதிரணி பேட்ஸ்மேன் தூக்கி அடிக்கிற பந்துகளை அசால்ட்டா புடிச்ச திறமையெல்லாம் காணாமப் போய், அசட்டையா கோட்டை விடுற இடத்துக்கு சி.எஸ்.கே. வந்திருக்கு”
“டே-நைட் மேட்ச்ல ஃப்ளட் லைட்ல கேட்ச் பிடிக்கும்போது கவனமா இருக்கணும்.”
“டாஸ் வின் பண்ணிட்டு ஃபீல்டிங் எடுக்குறப்பவே அதை யோசிக்கணும்ல”
ஐ.பி.எல் போட்டிகள் குறித்து டீக்கடையில் விவாதித்துக் கொண்டிருந்தார்கள் ரசிகர்கள். ஒவ்வொரு ஆட்டமும் முடிந்தபிறகு அதைப் பிரித்து மேய்வது ரசிகர்களின் இயல்பு. டீக்கடையில், உள்ளூர் மைதானத்தில் என விமர்சித்துக் கொண்டிருந்தவர்களுக்கு சமூக வலைத்தளங்கள் வாய்ப்பாக அமைந்துவிட்டதால், ஒவ்வொரு ஓவரையும் டீ-கோட் செய்யுமளவுக்கு ரசிகர்களின் விவாதங்கள் வளர்ந்திருக்கின்றன.
கிரிக்கெட் ஒவ்வொரு கட்டத்திலும் தனக்கான மாற்றத்தையும் வளர்ச்சியையும் கச்சிதமாக அடைந்த விளையாட்டு. அதில் ஒரு கட்டத்தில், வினையூக்கியாக செயல்பட்டவர் கெர்ரி பாக்கர். வியாபார நோக்கத்தில்தான் அவர் இதில் இறங்கினார். அந்த வியாபாரத்தை புதுமையாகவும் நேர்த்தியாகவும் செய்யத் தொடங்கினார். உலகின் 35 முன்னணி ஆட்டக்காரர்களை இழுத்து, வண்ண சீருடையில், பகல் – இரவு போட்டிகளை நடத்தி ரசிர்களை ஈர்த்தனர் பாக்கரின் பிசினஸ் கூட்டாளிகள்.

டி.வி. ஒளிபரப்பு உரிமையில் ஏற்பட்ட மோதலின் தொடர்ச்சியாக, பாக்கர் டீமுக்கு ஆஸ்திரேலியாவின் பிரபல கிரிக்கெட் ஸ்டேடியங்களில் அனுமதி மறுக்கப்பட்டிருந்தன. அவரது டீம்கள் ஆடும் எந்த ஒரு போட்டியும் அதிகாரப்பூர்வ கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. இந்தப் போட்டிகளில் அடிக்கப்படும் செஞ்சுரிகள், ரெகார்டுகள் எதுவும் பதிவு செய்யப்படாது என்பன போன்ற ஐ.சி.சி.யின் நெருக்கடிகளைக் கடந்துதான் வோர்ல்டு சீரிஸ் கிரிக்கெட் போட்டிகளை நடத்தினார் கெர்ரி பார்க்கர்.
விடா முயற்சி உடனடியாக விஸ்வரூப வெற்றியாக மாறாவிட்டாலும், படிப்படியான முன்னேற்றங்களை கண்டது. சில நூறு பேர் மட்டுமே பார்வையாளர்களாக இருந்த ஸ்டேடியங்கள் மெல்ல மெல்ல பிக்அப் ஆகி. நிரம்பி வழிந்தன. ஆஸ்திரேலியா கிரிக்கெட் அமைப்பு இறங்கி வரத் தொடங்கியிருந்தது. சிட்னி கிரிக்கெட் மைதானம் வோர்ல்டு சீரிஸ் கிரிக்கெட் போட்டிகளை நடத்த அனுமதிக்கப்பட்டது.
“சியர்ஸ்“
மகிழ்ச்சிப் பொங்க வழிந்தது உற்சாக நுரை.
“இது நமக்கு முதல் வெற்றி”
“எந்த கிரிக்கெட் அஃபிஷியல் இல்லைன்னு சொன்னாங்களோ அந்த கிரிக்கெட்தான் இனி அஃபிஷியலாகும்” -ப்ளேயர்ஸிடம் நம்பிக்கையுடன் சொன்னார் பாக்கர். என்ன காரணத்துக்காக அவர் புது டீம்களை உருவாக்கினாரோ, அது நிறைவேறும் தருணம் வந்தது.
ஆஸ்திரேலிய ஒளிபரப்பு நிறுவனமான ஏ.பி.சி, பாக்கரின் சேனல்களுக்கு அதிகாரப்பூர்வ கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை வழங்க ஒப்புக்கொண்டது.
“இதற்குத்தானே ஆசைப்பட்டாய்..” என்று கேட்டது பாக்கரின் மனசு.
“இதைத்தான் ஆசைப்பட்டேன். ஆனால், இதைவிட பலவற்றை அடைந்துவிட்டேன்” என்று மனசாட்சியிடம் மறைக்காமல் பதில் சொன்னார் பாக்கர்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பின் தரப்பிடமிருந்து, “டி.வி. ரைட்ஸ் கொடுத்திடுறோம்ல.. வோர்ல்ட் சீரிஸ் கிரிக்கெட் நடத்துவதை விட்டுடுங்க. போட்டிகளையெல்லாம் நாங்களே நடத்திக்கிறோம்” என பாக்கரிடம் தெரிவிக்கப்பட்டது.
“டி.வி. ரைட்ஸை நீ வச்சிக்க.. கிரிக்கெட்டை எங்ககிட்ட கொடுத்திடு” -இந்த டீலிங் பாக்கருக்குப் பிடித்திருந்தது. ஓ.கே. சொன்னார்.
1977, 1979 என இரண்டு சீசன்களாக நடந்த வோர்ல்ட் சீரிஸ் கிரிக்கெட் முடிவுக்கு வந்தது. ஆனால், அதுவே கிரிக்கெட் வரலாற்றின் அடுத்தகட்ட தொடக்கமாக அமைந்தது.
பள்ளிக்கூடத்தில் சரியாக படிக்காத பையனை ஸ்போர்ட்ஸில் ஈடுபட வைப்பது பி.டி.மாஸ்டர்களின் வழக்கம். “நல்லா விளையாடினா ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலை கிடைக்கும்” என்று நம்பிக்கை தருவார்கள். இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பலரும் ஏதாவது ஒரு நிறுவனத்திலோ, வங்கியிலோ வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். வெஸ்ட் இன்டீஸ், இலங்கை அணி ஆட்டக்காரர்களும் அப்படித்தான்.

“கிரிக்கெட் திறமையை வைத்து வேலை தேடவேண்டாம். கிரிக்கெட்டே பணம் கொட்டும் வேலைதான். உங்க திறமைக்கேற்ப பணத்தை அள்ளலாம்” என்று ப்ளேயர்களை உணர வைத்தவர் கெர்ரி பாக்கர். ‘டொக்’, ‘டொக்’ என்று 5 நாட்கள் ஆடிக்கொண்டிருந்த நிலையை மாற்றி, விறுவிறுப்பான பகல்-இரவு மேட்ச்களை பாக்கர் நடத்தியதால் கிரிக்கெட்டுக்கான ரசிகர்கள் அதிகமாகினர்.
விளம்பரம், மார்க்கெட்டிங், புரமோஷன் உள்ளிட்ட வியாபார நுணுக்கங்கள் அனைத்தையும் கிரிக்கெட்டுடன் கச்சிதமாகப் பொருத்தியிருந்தார். கிரிக்கெட் வியாபராத்தில் விற்பனை செய்யப்படும் பொருள்? வேறு என்ன, ப்ளேயர்கள்தான்.
ஏலம், பேரம், சூதாட்டம் இவையெல்லாம் ஐ.பி.எல்.லுக்கு முன்பும் கிரிக்கெட்டில் உண்டு. கிரிக்கெட் போட்டிகள் உருவானதே சூதாட்டத்திற்காகத்தான்.
(ஆட்டம் தொடரும்)
— கோவி.லெனின், மூத்த பத்திரிக்கையாளா்








Comments are closed, but trackbacks and pingbacks are open.