காரீப் பருவ தோட்டக்கலைப் பயிர்களுக்கு காப்பீடு அறிவிப்பு!
காரீப் பருவத்தில் தோட்டக்கலைப் பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் விவசாயிகளுக்கு தகவல்
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் தாங்கள் சாகுபடி செய்த தோட்டக்கலைப் பயிர்களை காப்பீடு செய்து இயற்கை இடர்பாடுகளான வறட்சி, வெள்ளம் மற்றும் மகசூல் இழப்புகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து காப்பீடு பெறுவதற்கு இத்திட்டம் மிக பயனுள்ளதாகும்.
காரீப் பருவத்தில் தோட்டக்கலைப் பயிர்களான வாழை, வெங்காயம், மரவள்ளி மற்றும் மஞ்சள் பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் அந்தநல்லூர், மணிகண்டம், திருவெறும்பூர், முசிறி, தாத்தையங்கார்பேட்டை, துறையூர். உப்பிலியபுரம், வையம்பட்டி, மண்ணச்சநல்லூர், இலால்குடி. புள்ளம்பாடி மற்றும் தொட்டியம் வட்டாரங்களில் பயிர் காப்பீட்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பிர்காவில் 2025-26-ஆம் ஆண்டு காரீப் பருவத்திற்கு பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.
2025-26-ம் ஆண்டு காரீப் பருவத்தில் தோட்டக்கலை பயிர்களான வாழை, மரவள்ளி, மஞ்சள் பயிர்களுக்கு 16.09.2025 வரையிலும் மற்றும் வெங்காய பயிருக்கு 01.09.2025 வரையிலும் விண்ணப்பிக்கலாம். பிரீமியம் தொகையாக ஏக்கர் ஒன்றிற்கு வெங்காயப் பயிருக்கு ரூ.2102/-ம் வாழைக்கு ரூ.3532/-ம் மரவள்ளி பயிருக்கு ரூ.1662/-ம் மஞ்சள் பயிருக்கு ரூ.3665/-ம் அரசு பொது சேவை மையங்கள். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் வாயிலாக காப்பீட்டுத் தொகையினை செலுத்தி பதிவு செய்திட வேண்டும்.
இப்பயிர்க் காப்பீடு பதிவு செய்திட நடப்பு பருவ அடங்கல், சிட்டா, வங்கிக் கணக்கு புத்தக நகல் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன், பதிவு செய்யும் விவசாயியின் பெயர், விலாசம். நில பரப்பு, சர்வே எண் மற்றும் உட்பிரிவு, பயிரிட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் ஆகிய விவரங்களை சரியாக அளித்து பதிவு செய்து, உரிய தொகையினை செலுத்தி, இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.