காப்பர் கம்பியில் தங்க மூலாம் பூசி பலே மோசடி ! கோடிகளில் புரண்ட கேடிகள் !
வங்கியை ஏமாற்றி தங்க முலாம் பூசப்பட்ட நகைகளை அடகு வைத்து கோடிக் கணக்கில் மோசடி செய்த கும்பலை மதுரை போலீசார் கைது செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா, பள்ளிக்குண்டு கனரா வங்கிக் கிளையின் மேலாளர் சுஜித்குமார் சாகு என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், மோசடியில் ஈடுபட்ட மணிகண்டன், முத்து செல்வன், கருப்பன், பவுன்ராஜ், பழனி மணிகண்டன் ஆகிய 6 பேரை கைது செய்து சிறையிலடைத்திருக்கிறார்கள்.
முறையாக அறிவிப்பு அனுப்பியும் உரிய காலத்தில் நகையை திருப்பாதவர்கள் கணிசமாக இருப்பதை சந்தேகத்துடன் அணுகிய மேலாளர், அடகு வைத்த தங்க நகைகளை தணிக்கைக்கு உட்படுத்தியிருக்கிறார். அப்போதுதான் அந்த மோசடி அம்பலமாகியிருக்கிறது.
குறிப்பிட்ட பகுதியை சேர்ந்த நபர்கள் தனித்தனியாக அடகு வைத்த பொருட்கள் அனைத்துமே தங்க வளையல்களாக மட்டுமே இருந்திருக்கின்றன. அடுத்து, அவை ஒவ்வொன்றும் 5 பவுனுக்கு குறையாத எடையையும் கொண்டிருந்திருக்கின்றன. வெளியிலிருந்து வேறு ஒரு நகை மதிப்பீட்டாளரை அழைத்து வந்தும், எத்தனை முறை தேய்த்துப் பார்த்தாலும் தங்கம் என்பதை உறுதிபடுத்தியுமிருக்கின்றன. மேலும், சந்தேகப்பட்டு, வளையலை இரண்டாக உடைத்துப் பார்த்தபோதுதான், அதிர்ச்சி காத்திருந்தது.
5 பவுன் எடை கொண்ட வளையலில், 4 பவுனுக்கு காப்பர் கம்பி. அந்த காப்பர் கம்பியை சுற்றி 1 பவுன் அளவுக்கு தங்க முலாம் பூசப்பட்டிருக்கிறது. ஒரே நபரின் பெயரில் வைத்தால் சந்தேகம் வரும் என்பதால், அதே ஊரைச் சேர்ந்த பல்வேறு நபர்களின் பெயர்களில் அடகு வைத்திருக்கிறார்கள். இவ்வாறு அந்த ஒரு கிளையில் மட்டுமே, 14 நபர்களை அடையாளம் கண்டிருக்கிறார்கள்.
மாவட்ட காவல் குற்றப்பிரிவு போலீசில் வங்கி மேலாளர் புகார் அளித்ததையடுத்து, மாவட்ட எஸ்.பி. அரவிந்த் உத்தரவின் பேரில், காவல் துணை கண்காணிப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் மேற்பார்வையில், மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் சாதுரமேஷ் தலைமையிலான போலீசார் நடத்திய புலன்விசாரணையில்தான் இந்த மோசடி அம்பலமாகியிருக்கிறது.
“அவர்கள் வங்கியில் கொடுத்த விலாசமே தவறானது. சில வீடுகள் பூட்டப்பட்டிருந்ததும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர்கள் பயன்படுத்திய கைப்பேசி எண்களை வைத்து தற்போது 6 பேரை கைது செய்திருக்கிறோம். இன்னும் 8 பேரை தேடி வருகிறோம். இவர்கள் இதே பாணியில், 44 முறை அடகு வைத்திருக்கிறார்கள். சுமார் ரூ 1 கோடி 49 லட்சம் வரையில் மோசடி செய்திருக்கிறார்கள். இதுதவிர, கள்ளிப்பட்டியில் உள்ள தனியார் வங்கியிலும் இதே போல் 22 முறை அடகு வைத்து ரூ28 கோடி யே 84இ லட்சத்தி 600 ரூபாய் மோசடி செய்திருக்கிறார்கள். அவர்களையும் தேடி வருகிறோம்.” என்பதாக அதிர்ச்சியூட்டுகிறார், இந்த வழக்கை கையாண்டுவரும் இன்ஸ்பெக்டர் சாதுரமேஷ்.
— ஷாகுல் படங்கள் : ஆனந்தன்.