இடுப்பளவு ஓடை நீரில் … சேரும் சகதியுமான பாதையைக் கடந்து … எப்போது மாறும் அரை நூற்றாண்டு அவலம் ?
தமிழகத்தில் அதிர்ச்சியிலும் ஆழ்த்தும் வகையிலான சமூக அவலங்கள் பல இன்னும் பொதிந்துதான் கிடக்கின்றன போலும். இந்த வகையிலான அவலம் ஒன்றை, ஒன்றிரண்டல்ல சுமார் அரை நூற்றாண்டு காலம் சகித்துக் கொண்டு காலம் தள்ளி வருகிறார்கள் தேனி மாவட்டம் பெருமாள் கோவில்பட்டி கிராமத்தினர்.
வாழ்ந்து மறையும் அக்கிராமத்தினரை கௌரவமான முறையில் நல்லடக்கம் செய்ய மயானத்திற்கு செல்ல முறையான பாதை இல்லாமல் அவதியுற்று வருகிறார்கள். அசுத்தமான ஓடை தண்ணீரில் இடுப்பளவு நீரில் இறங்கியும் சகதியில் கால்வைத்தும்தான் சடலத்தை மயானத்திற்கே எடுத்து செல்ல முடியும் என்பதை என்னவென்று சொல்வது?
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பெருமாள் கோவில்பட்டி கிராமம் திருமலாபுரம் ஊராட்சியில்தான் இந்த அவலம். இந்த கிராமத்தில் வசிக்கும் ஒவ்வொரு சாதியினருக்கும் தனித்தனி சுடுகாடு அமைந்திருக்கும் நிலையில், தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான சுடுகாடு பெருமாள் கோயில்பட்டியின் கிழக்குப்புறம் அமைந்திருக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்புதான், ஊராட்சி ஒன்றிய நிதியிலிருந்து தகன மேடை அமைத்திருக்கிறார்கள். ஆனால், அந்த தகனமேடைக்கு செல்வதற்கு முறையான பாதை வசதி இல்லை.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இதனால், தாழ்த்தப்பட்ட பிரிவு மக்கள் குடும்பங்களில் ஒவ்வொரு இறப்பு நேரும் போதும் உடலை தேர்கட்டி தூக்கி முழங்கால் முதல் இடுப்பளவு தண்ணீர் வரை உள்ள ஓடைப்பகுதி கழிவு நீரில் நடந்து பெரும் அவதிப்பட்டு மயானத்திற்கு சென்று வருகின்றனர்.
இது குறித்து கிராமம் உருவான கடந்த 50 ஆண்டுகளாக திருமலாபுரம் ஊராட்சி நிர்வாகம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் தேனி மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றில் புகார் மனு அளித்தும் தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்கிறார்கள்.
இந்நிலையில், ஜன-30 அன்று 102 வயது குருசாமி என்ற முதியவர் இறந்துவிட்டார். அவரது பிள்ளைகளும் அவரது குடும்பத்தினருமாக ஒன்று சேர்ந்து இறந்தவர் உடலை தூக்கிக்கொண்டு ஓடை கழிவுநீரில் நடந்துசென்று பெரும் அவதிக்கு மத்தியில் மயானத்தில் அடக்கம் செய்திருக்கிறார்கள்.
இந்நிலையில், வாழ்ந்து மறையும் மனிதர்களை கௌரவமான முறையில் நல்லடக்கம் செய்வதற்கு ஏதுவாக, பெருமாள் கோவில்பட்டி தாழ்த்தப்பட்ட மக்களுக்கான மயானத்திற்கு செல்வதற்குரிய பாதை அமைத்து தருமாறு கிராமத்தினர் சார்பில் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
தவறும்பட்சத்தில், அடுத்த மரணம் ஏற்படும்போது பிரேதத்துடன் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்திருக்கிறார்கள். மனது வந்து பாதை அமைத்து தருமா மாவட்ட நிர்வாகம்?
— ஜெய்ஸ்ரீராம்.