எஸ்.பி. போட்ட ரிப்போர்ட் – பச்சைக்கொடி காட்டிய ஐ.ஜி. – வகையாய் சிக்கிய டி.எஸ்.பி. முத்தரசு !
எஸ்.பி. போட்ட ரிப்போர்ட் – பச்சைக்கொடி காட்டிய ஐ.ஜி. – வகையாய் சிக்கிய டி.எஸ்.பி. முத்தரசு !
வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த புகாரில் வகையாய் சிக்கியிருக்கிறார், திருச்சி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் முத்தரசு.
திருச்சி மொராய் சிட்டியில் அமைந்துள்ள இவரது வீடு மற்றும் இவரது பூர்வீகமான தஞ்சாவூர் – நாஞ்சிக்கோட்டையில் அமைந்துள்ள வீடு ஆகியவற்றில் அதிரடி சோதனைகளை நடத்தியிருக்கின்றனர், பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஹேமசித்ரா தலைமையிலான போலீசார்.
இவர்கள் நடத்திய சோதனையில், 25-க்கும் மேற்பட்ட சொத்து ஆவணங்களையும்; 8-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளையும், வங்கி லாக்கர் சாவிகள் சிலவற்றை கைப்பற்றியிருப்பதாகவும்; சம்பந்தபட்ட வங்கியின் அனுமதியை பெற்று, லாக்கரை திறந்து பார்த்தால் இன்னும் பல விசயங்கள் வெளிவர வாய்ப்பிருப்பதாகவும் போலீசு வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள்.
கடந்த 2014 இல் இன்ஸ்பெக்டராக இருந்த பொழுது 35 இலட்சம் சொச்சமாக இருந்த இவரது சொத்து மதிப்பு, டி.எஸ்.பி.யாக பதவிஉயர்வு பெற்ற நிலையில், ஒரு கோடியே 38 இலட்சம் சொச்சமாக உயர்ந்திருக்கிறது.
எல்.ஐ.சி.யின் ஏஜெண்டாக இருந்துவரும் இவரது மனைவியின் வருமாணத்தையும் சேர்த்து கணக்கிட்டாலும் கூட, மிக குறுகிய காலத்திலேயே இவரது சொத்து மதிப்பு இரட்டிப்பாக உயர்ந்திருப்பதை சுட்டிக்காட்டுகிறார்கள். பெரும்பணக்காரர்கள் மட்டுமே நுழைய முடியும் மொராய் சிட்டியில், டி.எஸ்.பி. அந்தஸ்தில் இருக்கும் ஒருவர் கோடி கணக்கில் பணத்தை கொட்டி சொந்த வீட்டை கட்டியிருக்கிறார் என்பதிலிருந்தே இதன் பரிமாணத்தை புரிந்து கொள்ளலாம் என்கிறார்கள்.
குளித்தலை, மதுரை, திருச்சி அரியமங்கலம், துவாக்குடி உள்ளிட்ட காவல் நிலையங்களில் இன்ஸ்பெக்டராக முத்தரசு பணியாற்றியபோதே, இவர் மீது இலஞ்சப்புகார்கள் எழுந்ததாக சொல்கிறார்கள்.
குறிப்பாக, திருச்சியில் மதுவிலக்கு பிரிவு டி.எஸ்.பி.யாக இருந்தபோது வரைமுறையின்றி சகட்டுமேனிக்கு வசூல் வேட்டையில் ஈடுபட்டு சர்ச்சையில் சிக்கியதாகவும் சொல்கிறார்கள். இவர் போதை பொருள் உள்ளிட்ட ”சாராய வேட்டை” நடத்தியதைவிட, இல்லீகல் ஆசாமிகளை குறிவைத்து இவர் நடத்திய ”பண வேட்டை”தான் பலமானது என்கிறார்கள்.
துறையூர் – உப்பிலியபுரம் மலைப்பாங்கான பகுதியில் சாராய ஊறல்களை ஊறப்போடுபவர் தொடங்கி, பனை மரத்திலிருந்து இறக்கப்படும் கள்ளு வரைக்கும் மாதந்தோறும் “கப்பம்” கட்டியாக வேண்டுமாம். இந்த கணக்கு வழக்குகளில் சில கரண்சிகள் குறைந்தாலும், அடுத்த நாளே அதிரடி ரெய்டு நடக்குமாம்
கடந்த 2022 இல் மாவட்ட எஸ்.பி.யாக சுஜித்குமார் இருந்த சமயத்தில் துறையூர் பச்சமலையில் அதிரடி ரெய்டை நடத்தினார். ரெய்டு தகவல் முன்கூட்டியே சம்பந்தப்பட்ட பார்ட்டிகளுக்கு கசிய, அவர்கள் எல்லை தாண்டி சென்றுவிட்டனர். ரெய்டில் ஒருவர்கூட சிக்கவில்லை. ஆனாலும், இதற்காகவே தலைமறைவான பார்ட்டிகளிடமிருந்து தலைக்கு பத்தாயிரம் வரை வசூலித்தார் என்ற குற்றச்சாட்டு அப்போதே எழுந்தது. அங்குசத்திலும் இது குறித்த செய்தியை வெளியிட்டிருக்கிறோம்.
(செய்தி இணைப்பு: பச்சமலையில் ஆய்வில் ஈடுபட்ட போலீஸ் எஸ்.பி!.)
பச்சமலையில் ஆய்வில் ஈடுபட்ட போலீஸ் எஸ்.பி!.
சந்துக்கடைக்கு தனி ரேட்டு; டாஸ்மாக் கடை வழக்கமாக திறக்கும் நேரத்திற்கு முன்பாகவே டீக்கடை போல டாஸ்மாக் பாரை திறந்து வைத்துக்கொள்ள தனி ரேட்டு என நல்லாவே ”கல்லா” கட்டினார் என்கிறார்கள்.
இதுபோன்று டி.எஸ்.பி. முத்தரசுக்கு எதிரான புகார்கள் தொடர்ச்சியாக வரப்பெற்ற நிலையில்தான், துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதோடு, திருநெல்வேலிக்கும் தூக்கியடிக்கப்பட்டதாக சொல்கிறார்கள்.
தூத்துக்குடியில் ஆவண காப்பு டி.எஸ்.பி.,யாக பணியிட மாற்றம் செய்யப்பட்ட மிக குறுகிய காலத்திலேயே, மீண்டும் திருச்சிக்கே இடமாறுதல் பெற்று திரும்பியிருக்கிறார். அதுவும், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் பதவியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்.
கடந்த செப்டம்பர் மாதத்தில், இதே திருச்சி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு டி.எஸ்.பி.யாக இருந்த ஆல்பர்ட், பத்திர மோசடி வழக்கில் தொடர்புடைய பத்திர எழுத்தர் கீதா என்பவரை வழக்கிலிருந்து விடுவிக்க ஒரு இலட்சம் இலஞ்சம் கேட்டதற்காக கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, முத்தரசு சிக்கியிருக்கிறார்.
இலஞ்சப்புகாரில் சிக்கி பணியிடமாறுதல் பெற்று வேறு மாவட்டத்திற்கு தூக்கியடிக்கப்பட்ட நிலையில், மீண்டும் பழைய மாவட்டத்திற்கே அதுவும் காசு பணம் புழங்கும் நில அபகரிப்பு தடுப்பு பிரிவுக்கே இடம் மாறுதல் பெற்று வர முடிந்திருக்கிறதென்றால் அரசியல்வாதிகளிடத்தில் முத்தரசுக்கு உள்ள முக்கியத்துவம் என்னவென்று பார்த்துக்கொள்ளுங்கள் என நமட்டு சிரிப்பை உதிர்க்கின்றனர் போலீசு வட்டாரத்தில்.
இதற்கிடையில், நிலுவையிலிருந்த டி.எஸ்.பி. முத்தரசு மீதான துறை ரீதியான விசாரணை முழுமைபெற்ற நிலையில் சில மாதங்களுக்கு முன்பு விரிவான அறிக்கையை திருச்சி மாவட்ட எஸ்.பி. வருண்குமார் மேலதிகாரிகளுக்கு அனுப்பி வைத்ததாகவும்; அந்த அறிக்கை திருச்சி சரக டி.ஐ.ஜி. பகலவன் மற்றும் திருச்சி ஐ.ஜி. கார்த்திக்கேயன் ஆகியோரின் கவனத்திற்கு சென்றதையடுத்து தான், இந்த அதிரடி நடவடிக்கையை முடுக்கிவிட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள் போலீசு வட்டாரத்தில்.
எது எப்படியோ, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு காட்டும் அக்கறையும் மெனக்கெடலும், காவல்துறையில் திளைக்கும் இலஞ்ச லாவண்யத்தை கண்காணித்து கட்டுப்படுத்துவதிலும் காட்ட வேண்டும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.
– அங்குசம் புலனாய்வு குழு.