‘தமிழக அரசு ஊழியர்கள் புத்தகம் வெளியிடத் தடை’ – அவதூறு கிளப்பும் பத்திரிகை செய்திகள்!
‘தமிழக அரசு ஊழியர்கள் புத்தகம் வெளியிடத் தடை’ என்று ஏதோவொரு நாளிதழில் செய்தி வந்திருப்பதை பலரும் பகிர்ந்து அரசைக் கண்டித்து வருகிறார்கள். பத்திரிகை செய்திகளின் தரம் எந்தளவுக்கு வீழ்ச்சி அடைந்திருக்கிறது என்பதற்கு உதாரணம் இது.
சமீபத்தில் வெளிவந்த அக்குறிப்பிட்ட அரசாணையை அந்தச் செய்தியை வெளியிட்டவரால் படித்துப் புரிந்து கொள்ள முடியவில்லையா அல்லது வேண்டுமென்றே அவதூறு கிளப்புவது நோக்கமா என்று தெரியவில்லை.
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகள் புதிதாக உருவாக்கப்பட்டவையல்ல. காலகாலமாக நடைமுறையில் இருந்து வருபவை. பழைய conduct rules படி அரசு ஊழியர்கள் எந்த நூலை எழுதுவதாக இருந்தாலும் அலுவலகத் தலைவரின் அனுமதி பெற்றாக வேண்டும். அதுதான் இவ்வளவு காலமாக நடைமுறையில் இருந்து வந்துள்ளது. மேலும் அரசை விமர்சனம் செய்யும் வகையிலும் நாட்டின் இறையாண்மைக்கு எதிராகவும் எழுதக்கூடாது; இலக்கியம் சார்ந்து எழுதலாம்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இதெல்லாம் பழைய நடைமுறை. இப்போது தமிழக அரசு அந்த விதியில் ஒரு மாற்றம் கொண்டு வந்துள்ளது. அனுமதி கேட்க வேண்டியதில்லை, தகவல் மட்டும் தெரிவித்தால் போதுமானது என்பதே அந்த சட்டத் திருத்தம். கலைஞர் நூற்றாண்டில் அரசு ஊழியர்கள் புதிய நூல்களை தயக்கமின்றி படைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்று இந்தப் புதிய அரசாணை கூறுகிறது. தடை போடவில்லை. ஊக்குவிக்கிறது. அரசுக்கு எதிராக எழுதக்கூடாது என்பதில் மாற்றமில்லை.
இணைப்பில் காணும் அரசாணை சொல்வது இதுதான்.
ஆனால் நூலின் மூலம் கிடைக்கும் வருவாயை அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும், வருமான வரி செலுத்தும் படிவத்திலும் குறிப்பிடவேண்டும். இதிலும் மாற்றம் இல்லை. அனுமதி வாங்க வேண்டும் என்பதை தகவல் தெரிவித்தால் மட்டுமே போதுமானது என்று இந்த அரசாணையின் மூலம் திருத்தியிருக்கிறார்கள்.
இதனை ‘தடை’ என்று இக்குறிப்பிட்ட நாளிதழ் மடைமாற்றம் செய்து திசைதிருப்புவதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
— குப்புசாமி கணேசன்.