எதிர்பாராத அரசியல் அடித்து ஆடும் அரசியல் கட்சிகளின் ஆடுகளம் !
அதிமுக பிஜேபி கூட்டணி – அதோ கதியான அண்ணாமலை என அடுத்தடுத்து அரசியல் திருப்பங்களை கொண்டிருக்கிறது, தமிழகம். எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான அச்சாரங்கள் இப்போதே, களைகட்டி வருகின்றன என்பதைத்தான் இந்த அரசியல் நகர்வுகள் எடுத்துரைத்திருக்கின்றன.
பிரதமர் மோடியின் பிம்பம் மெல்ல மறைந்தும், அமித்ஷாவின் ஆதிக்கம் மேலோங்கியும், அடுத்த சீசனுக்கான பிம்பமாக யோகி ஆதித்யநாத் முன்தள்ளப்படுவதுமான காலத்தில் இருக்கிறோம். எல்லா வகையிலும் தமக்கு குடைச்சலாகவே இருந்துவரும் திமுகவை எப்படியாவது வீழ்த்தியே ஆகவேண்டும் என்ற ஒரே நோக்கில், “டார்கெட் தமிழ்நாடு” திட்டத்தை கையில் வைத்திருக்கிறார், அமித்ஷா.

இதன் முன்னோட்டமாகத்தான், தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்களுடனான அடுத்தடுத்த சந்திப்புகளை அமித்ஷா நடத்தி கூட்டணியை உறுதி செய்தார். ஒரு பக்கம் கட்சிகளுக்கிடையே அணி சேர்க்கை தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில், வெற்றி வாய்ப்பை உறுதிபடுத்தும் வகையில் நட்சத்திர வேட்பாளர்களை வலைவீசி பிடிக்கும் வேலையும் சத்தமில்லாமல் நடந்து கொண்டுதானிருக்கிறது.

தமிழக அரசியலில் திருச்சி என்றாலே திருப்பம் என்பார்கள். அதுபோலவே, ரோட்டரியன் அமைப்பின் சர்வதேச முக்கிய தலைவரும், திருச்சியின் பிரபலமான தொழிலதிபருமான ஒரு பெரும்புள்ளி எந்த கட்சியின் வேட்பாளராக களம் காணப்போகிறார் ? என்ற எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது.
கேட்கவே ’கிக்’ கான செய்திதான். முன்னணி அரசியல் கட்சிகள் வலைவீசும் அந்த இளம் தொழிலதிபர் வேறு யாருமல்ல, கடந்த சட்டமன்றத் தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையத்தின் சார்பில் திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட்ட முருகானந்தம் தான்.
நட்பு வட்டாரத்தில் MMM என்ற அழைக்கப்படும், பொறியியல் துறையில் வல்லுநரான எம்.முருகானந்தம், கடந்த 2006ம் ஆண்டு, EXCEL MARITIME 7 LOGISTICS PVT LTD என்ற நிறுவனத்தை, சென்னையை தலைமையிடமாகக் கொண்டு ஆரம்பித்து, 15 ஆண்டுகளில் பல்வேறு தொழில் நிறுவனங்களை நிர்மாணித்து, எரிசக்தி துறை, மனிதவளம், ஏற்றுமதி, இறக்குமதி உள்ளிட்ட வர்த்தக நடவடிக்கைகளில் தடம் பதித்து, 24ற்கும் மேற்பட்ட இந்திய நகரங்களிலும் வெளிநாடுகளிலும் கிளைகளை நிறுவி, தனது அனைத்து நிறுவனங்களையும் எக்ஸல் என்ற குடையின் கீழ் கொண்டு வந்து, எக்ஸல் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக (EXCEL GROUP OF COMPANIES, CHAIRMAN & MANAGING DIRECTOR) செயலாற்றி வருபவர்.

16வது வயதில் ரோட்டரியின் இளைஞர் அமைப்பான ரோட்டராக்ட்டில் இணைந்து கடந்த 27+ ஆண்டுகளில் ரோட்டரி சேவையுடன் ஏராளமான சமூகப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.
தனது 16 வது வயதில் ரோட்டரி பயணத்தை ஒரு ரோட்டராக்டராக தொடங்கி, மிகவும் இளம் வயதிலேயே 2016-17 ல் ரோட்டரி மாவட்ட ஆளுநராக பொறுப்பேற்றவர். சர்வதேச ரோட்டரி இன்டர்நேஷனல்/USA-வின் மிக உயர்ந்த பட்ச விருதான SERVICE ABOVE SELF விருதை பெற்ற ஒரே இந்தியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். உச்சமாக, தற்போது, ரோட்டரி இன்டர்நேஷனல் தலைவராக முதல்முறையாக தமிழகத்திலிருந்து அதுவும் திருச்சியிலிருந்து ஆண்டு வருபவர். தனது தாயார் மகரக வள்ளியின் நினைவாக பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், மருத்துவ முகாம்களையும் நடத்தி வருபவர்.
இத்தகைய பின்னணி கொண்ட இவரை எப்படியும் வளைத்துவிட வேண்டுமென்று, பாஜக சார்பில் முருகானந்தத்திடம் முதலில் மூச்சை போட்டது, பாஜகவின் அகில இந்திய தலைமை தானாம். அதன் முக்கிய தலைவர்கள் சிலர் தனிப்பட்ட முறையில் நேரிலே சந்தித்தவர்கள் “உங்களைப் போன்ற தொழில் அதிபர்கள் மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக உழைக்கும் நீங்கள் அரசியலுக்கு வருவது நல்லது. வரும் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் மாநில அளவில் முக்கிய பொறுப்பு கொடுக்கிறோம் , திருச்சி தொகுதியில் நீங்கள் போட்டியிட வேண்டும்” ஜெயிச்சுட்டு மட்டும் வாங்க, ரெங்கராஜன் குமாரமங்கலம் மாதிரி மந்திரி ஆக்க வேண்டியது எங்களுடைய பொறுப்பு என்று சத்தியம் பன்னாத குறையாக பேசியிருக்கிறார்கள். அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமையும் பட்சத்தில் யோசிக்கலாம் என்று அப்போது சொல்லி அனுப்பியவர், இப்போது அவர் அன்று எதிர்பார்த்தது போலவே, எல்லாம் கனிந்து வரும் சூழலில் மீண்டும் வலை வீசியிருக்கிறதாம் தாமரை மற்றும் இலை தரப்பினர்.
இது ஒருபுறமிருக்க, அதிமுகவின் முன்னாள் அமைச்சர் புதுக்கோட்டை விஜயபாஸ்கருக்கு நேரடி உறவின் பங்காளி முறை உள்ள ஆளு, போயும் போயி பி.ஜே.பி.ல சேரப்போறீங்களா ? பேசாம, அதிமுகவிலே சேர்ந்திடுங்கனு பேசியிருக்காங்களாம் அதிமுக தரப்பில். திருவெறும்பூர் தொகுதியைச் சேர்ந்த முக்குலத்தோர் சமூகம் சார்ந்த முருகானந்தத்தின் உறவினர்கள் வழியாக அன்பு கட்டளைகள் வந்த வண்ணமிருக்க, எடப்பாடியார் முன்னிலையில் அவரை கட்சியில் சேர்க்க முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ரொம்பவே மூச்சை போட்டிருக்கிறார்.
அதிமுகவும் பி.ஜே.பியும் போட்டி போட்டுக்கொண்டு ஆளைத் தக்கவைக்க முயற்சிப்பதையறிந்த ஆளும்கட்சி தரப்பிலிருந்து தங்கள் பக்கள் பக்கம் வளைத்துப்போட மாவட்ட அமைச்சர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரடி பேச்சுவார்த்தைகள் நடந்தேறியிருக்கிறது. எந்தக் கட்சியின் சார்பில் நின்றாலும், தேர்தலில் தான் போட்டியிடுவது என்பதில் முருகானந்தம் உறுதியாக இருப்பதை அறிந்து, அவருக்காக அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது சொந்த தொகுதியான திருவெறும்பூரை அவருக்காக விட்டுக் கொடுக்கவும் தயாராக இருப்பதாகவும் உறுதி கொடுத்து துணை முதலமைச்சர் வரை அழைத்து சென்று பேசி உறுதி கொடுத்தார்களாம்.

கடந்த, 1980-ம் ஆண்டு கட்சி நிர்வாகிகளுக்கேக்கூட முன்ன பின்ன அறிமுகமே இல்லாத, என்.செல்வராசு; திருச்சியில் பிறந்திருந்தாலும் சென்னையில் செட்டிலாகி தொழிலதிபராக உருவெடுத்த இனிகோ இருதயராஜ்; அதே போன்று புதுக்கோட்டையை சேர்ந்த குமார் அதிமுக சார்பில் புதிதாக முதல்முறையாக திருச்சியில் களம் கண்டு தொடர்ந்து 10 ஆண்டுகள் எம்.பியாக ஜொலித்தவர். முக்கியமாக, அரசியலுக்குப் புதியவர்கள் என்றாலும் , சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட சமூகச் சிந்தனையாளர்களுக்கு வரவேற்பு கொடுக்கும் தொகுதியாகத் திருச்சி இருந்திருக்கிறது என்ற சென்டிமெண்ட்.
ஓ.கே.னு சொன்னா, அவர் ஏற்கெனவே போட்டியிட்ட, அவரும் போட்டியிட விரும்பும் திருவெறும்பூர் தொகுதியை முருகானந்தத்துக்கு ஒதுக்கிடலாம். அவரு நின்னாலே போதும் அமோகமா ஜெயிச்சிடுவாருனு ரொம்பவே சந்தோசத்துல இருக்காம் சூரியன் தரப்பில்.

எதையும் விரிவாகவும், நுணுக்கமாகவும் ஆராய்ந்து நிதானமாக முடிவெடுக்கக்கூடியவர் என்பதால் எதற்கும் பிடி கொடுக்காமல் அமைதி காத்து வருகிறாராம். கூடவே, எதையும் அலட்டிக் கொள்ளாமல் தனக்கு செல்வாக்கான தொகுதிகளில் திருவரம்பூர், புதுக்கோட்டை, பகுதியில் தொடர்ந்து மருத்துவ முகாம்களையும் சத்தமில்லாமல் நடத்தி வருவதும் தனித்து களமிறங்கப் போகிறாரா ? என்ற குழப்பத்தையும் ஆளும் கட்சியான திமுகவிற்கு ஏற்பட்டுள்ளதாம்.
இதற்கு இடையில் எதிர்பாராத விதமாக பிஜேபி – அதிமுக இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்ட நிலையில்…..எந்தக் கட்சி அவரை வென்றெடுக்கப் போகிறது, என்பது தான் பம்பர் பரிசு கனவோடு லாட்டரி முடிவுக்காக காத்திருக்கும் மனநிலையில் வலைவீசிய அரசியல் கட்சிகளை ஆழ்த்திவிட்டது.
-அங்குசம் செய்தி குழு