பூங்கா அமைக்க கால தாமதம் ! அறப்போராட்டத்தில் நலச்சங்க பொதுமக்கள் !
திருச்சி உய்யக்கொண்டான் திருமலை சண்முகா நகர் நலச்சங்கத்தின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சி. முத்துமாரி தலைமையில் அதன் தலைவர் எஸ்.வி. வேலாயுதன், செயலாளர் பி. குமரன், பொருளாளர் என். செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து இன்று திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரிடம் ஒரு புகார் மனு அளித்தனர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது.
திருச்சி வயலூர் ரோடு உய்யகொண்டான் திருமலை சண்முகா நகர் 6-வது குறுக்குத் தெருவில் அரசாங்கத்திற்கு சொந்தமான இடத்தில் பூங்கா அமைக்க 2023-ல் திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தால் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் தனி நபர் கொடுத்த வழக்கினால், அந்த பணியில் தாமதம் ஏற்பட்டு பின்னர் அந்த இடம் அரசுக்கு சொந்தமானது என உயர் நீதிமன்றத்தால் கடந்த 28-3 -2025 அன்று தீர்ப்பளிக்கப்பட்டது.
அதன்படி பூங்கா அமைக்க வேண்டி 30 -6 -2025 அன்று தங்களை (கலெக்டர்) நேரில் சந்தித்து பணிகளை துரிதப்படுத்த நலச்சங்கம் சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டது.
பின்னர் தங்களது உத்தரவின் அடிப்படையில் 30- 7 -2025 அன்று நில அளவையர் மூலம் பூங்கா அமைய உள்ள இடம் அளவீடு செய்யப்பட்டு ஆணையர் உதவி ஆணையர் முன்னிலையில் எல்லை குறிக்கப்பட்டு பூங்கா பணிகள் விரைவில் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இது நாள் வரை பணிகள் தொடங்காமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து சண்முகா நகர் நலச்சங்கம் சார்பில் மாநகராட்சி நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு கடந்த டிசம்பர் மாதம் 11-ந் தேதி புத்தூர் நான்கு ரோட்டில் அமைதியான முறையில் உண்ணாவிரத அறப்போராட்டம் நடத்தினோம்.
ஆனால் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் திட்டமிட்டு தீர்ப்பு வழங்கப்படாமல் இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.
தற்போது பூங்கா பகுதி சமூக விரோத செயல்கள் நடைபெறும் இடமாக மாறி வருகிறது. ஆகவே மக்கள் அப்பகுதியை பயன்படுத்த அச்சப்படுகின்றனர். ஆகவே விரைந்து பூங்கா அமைத்திட அதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.
இந்நிகழ்வின் போது துணைத் தலைவர் டாக்டர் ஆர்.சிவக்குமார் இணைச் செயலாளர்கள் ஏ.பொன்ராஜ், எஸ்.ஆதவன், டி.ராஜசிங்கம் மற்றும் நிர்வாகிகள், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.