திருச்சியில் அனுமதியின்றி மரங்களை வெட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை !
திருச்சி மாவட்ட பகுதியில் அனுமதியின்றி மரத்தை வெட்டுவோர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கையை முன்வைத்திருக்கிறது, தண்ணீர் அமைப்பு.
இந்த விவகாரம் தொடர்பாக அவ்வமைப்பின் சார்பில் செயலாளர் கி.சதீஸ்குமார் மற்றும் செயல் தலைவர் கே.சி.நீலமேகம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ”திருச்சி காஜாமலை பகுதியில் 61 வது வார்டுக்கு உட்பட்ட ஆர். எஸ். புரம் பகுதியில் அனுமதி இன்றி பத்துக்கும் மேற்பட்ட மரங்களை வெட்டியுள்ளனர்.
மரம் வளர்ப்பதற்கு அரசும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில் இது போன்று அரசு அனுமதி இன்றி மாநகராட்சி அனுமதியின்றி மரத்தை வெட்டிக் குவிப்பதை தண்ணீர் அமைப்பு சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.
எனவே, இயற்கையை பசுமையை பாதுகாக்க பசுமையான திருச்சியை உருவாக்க பசுமைப் பரப்பை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தை சிதைக்கும் விதமாக இது போன்ற நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
எனவே மரத்தை வெட்டியோர்க்கு உடனடியாக தக்க அபராதம் விதித்து சட்டப்படி நடவடிக்கை எடுத்து உடனடியாக தண்டனை வழங்குமாறு தண்ணீர் அமைப்பு சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
இதுபோன்று பல்வேறு பகுதிகளில் அனுமதி இன்றி மரம் வெட்டப்படுவதை இனிமேலும் வேடிக்கை பார்க்காமல் மரம் வெட்டுவோர்கள் மீது உரிய அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்குமாறு தண்ணீர் அமைப்பு சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.” என்பதாக கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
– அங்குசம் செய்திப்பிரிவு.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.