எப்படியாவது தடுத்து நிறுத்துங்க … அநியாயமா எங்க வீடுகளை இடிச்சு தள்ளுறாங்க … கதறும் 42 குடும்பங்கள் !

”எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் போலீஸ் படையோடு வந்து நாப்பது வருஷமா நாங்க குடியிருக்க வீட்டை இடிச்சிட்டு இருக்காங்க. வீட்ல இருந்த பண்ட பாத்திரங்களை எடுக்கக்கூட விடலைங்க. புள்ளைங்க படிக்கிற சர்டிபிகேட்டையாவது எடுத்துக்கிறோம் ஒரு அரை மணிநேரம் டயம் கொடுங்கன்னு கெஞ்சி கேட்டுப் பார்த்துட்டோம். கொஞ்சம்கூட ஈவு இரக்கம் இல்லாமல் எங்க கண்ணு எதிர ஆசையா கட்டுன வீடுகளை இடிச்சு தரமட்டமாக்கிட்டாங்க. 42  குடும்பம் இப்போ நடுத்தெருவுல நிக்கிறோம்.”னு கதறுகிறார்கள், நாமக்கல் மாவட்டம் வசந்தபுரம் கிராமம் குப்பம்பாளையத்தை சேர்ந்த மக்கள்.

புறம்போக்கு இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டிய வீடுகள் அல்ல இவை. 1998 இல் அரசே கொடுத்த பட்டாவை கையில் வைத்திருக்கிறார்கள். அவரவர்களின் வாய்ப்பு வசதிக்கு ஏற்ப எளிமையான வீட்டை கட்டியிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், அரசின் கலைஞர் கனவு இல்லம், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் என மத்திய மாநில அரசுகளின் பங்களிப்புத் திட்டங்களின் கீழும் இதே பட்டா இடத்தில் வீடுகள் கட்டப்பட்டிருக்கின்றன.

எப்படியாவது தடுத்து நிறுத்துங்க ...ஒரு காலத்தில் அது தனியார் நிலமாக இருந்திருக்கிறது. வருவாய்த்துறையினர் தரப்பில் அதனை முறையாக கையகப்படுத்தாமல், கவனக்குறைவோடும் அலட்சியத்தோடும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பட்டா போட்டு கொடுத்திருக்கிறார்கள்.

தற்போது, அந்த நிலத்தின் உரிமையாளரின் வாரிசு என்று மேற்படி நிலத்திற்கு உரிமை கொண்டாடி, அங்கே குடியிருக்கும் மக்களிடம் நிலத்தின் மதிப்பைக் காட்டிலும் ஏழு மடங்குத்தொகையை கொடுத்தால் மட்டுமே தொடர்ந்து குடியிருக்க அனுமதிப்பேன் என்று பேரம் பேசி வந்த நிலையில், இடத்திற்கு உரிமை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, ஒருதலை பட்சமான உத்தரவையும் பெற்றுவிட்டார்கள். அந்த நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், போலீசு துணையோடு தற்போது வீடுகளை இடித்து தரைமட்டமாக்கி வருகிறார்கள்.

“வழக்கு தாக்கல் செய்கின்றபோது வீடுகள் இருந்த நிலையில் அந்த வீடுகளை இடிப்பதற்கு செயலுத்து கட்டளை கோரி பெற்றிருக்க வேண்டும். ஆனால்,  அவ்வாறான கோரிக்கை வழக்கில் எதுவும் இல்லை. அவ்வாறான கோரிக்கை இல்லாத நிலையில் நிறைவேற்றுகை நீதிமன்றம் வீடுகளை இடிக்க உத்தரவிட்டதே தவறானதாகும். சொல்லப் போனால் விளம்புகை மற்றும் செயலுறுத்து கட்டளை பெறாத நிலையில் சுவாதீன  தீர்ப்பானை நிறைவேற்ற முடியாத தீர்ப்பனையாகும். (Non Executable decree) ஆகும்.

6.10.2026 ல் பிறப்பிக்கப்பட்டுள்ள சுவாதீன உத்தரவை ரத்து செய்வதற்கு நாமக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் 16.10.2026 இல்  மனு தாக்கல் செய்யப்பட்டது. ஒரு தலைப்பட்ச உத்தரவு ஏற்பட்டு முப்பது நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது என்று மனுக்களை திருப்பி விட்டார்கள். ஆனால், இறுதி உத்தரவு ஏற்படுகின்ற வரை 30 நாள் கணக்கு வராது என்று எவ்வளவோ சொல்லியும், சென்னை உயர்நீதிமன்ற நீதி அரசர் சதீஷ்குமாரின் ஆனந்தன் எதிர் லட்சுமி சாமுண்டீஸ்வரி முன் தீர்ப்பில் தெளிவாக அது கூறப்பட்டுள்ளது என்பதை எடுத்துக்காட்டியும் நீதிமன்றம் கேட்கவில்லை. நீதிமன்றம் ஒருவேளை அக்-16 அன்றே மனுக்களை வரிசைப்படுத்து தற்காலிக தடை வழங்கியிருந்தால் வீடுகள் இடிக்கப்படுவதை தடுத்து இருக்கலாம். வீடுகளை எடுப்பது என்பது ஒரு கடினமான நடவடிக்கை. அந்த நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு அதனை தவிர்ப்பதற்கு எவ்வளவு தூரம் வாய்ப்புகள் வழங்க முடியுமோ அவ்வளவும் வழங்க வேண்டியது அவசியமானதும் நியாயமானதும் ஆகும். ஆனால், அவ்வாறு செய்யாமல் நீதிமன்றம் வாய்தா தேதி 6.11.2026 தானே. சமாதானம் பேசி முடித்துக் கொள்ளுங்கள் என்று தவறான சமிக்கை காட்டி விட்டு மறுநாளே அமீனாவை அனுப்பி வீடுகளை இடிக்க செய்துள்ளது. இது எந்த வகையான நியாயம் என்று புரியவில்லை.” என்பதாக தனது ஆதங்கத்தை பதிவு செய்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத அதே பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர்.

இதுபோன்ற சென்சிட்டிவான விவகாரங்களில் அரசின் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவர்களின் ஆலோசனையை பெற்றுத்தான் போலீசார் நடவடிக்கையில் இறங்குவார்கள். இந்த குறிப்பிட்ட விவகாரம் அவ்வாறு மேலிடத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதா?

நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில்தான் ஆக்கிரமிப்புகளை அகற்றியிருக்கிறோம் என்பதாக, அதிகாரிகள் சொல்வார்களேயானால், இதுபோல எத்தனையோ நீதிமன்றத்தின் உத்தரவுகள் இன்றளவும் அமல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்ட விவகாரங்களை பட்டியலிட முடியும்.

இந்த குறிப்பிட்ட நீதிமன்ற உத்தரவுக்கு மட்டும் ஏன் இவ்வளவு அவசரம்? அதிலும் குறிப்பாக, அரசே வழங்கிய பட்டாவை கையில் வைத்திருந்தும் இந்த நிலை என்றால், அந்த போலி பட்டா வழங்கிய அதிகாரிகளை அல்லவா இந்நேரம் சிறை பிடித்திருக்க வேண்டும்?

நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் தரக்கூடிய தீவிரவாதிகளின் பதுங்குமிடங்களை போர்க்கால அடிப்படையில் தகர்த்தெறிவதைப்போல, அவ்வளவு மூர்க்கமாக அதிகாரிகள் நடந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன? தனது குடிமக்களை அரசே அகதியாக்கிய இந்த பேரவலத்தை அநீதியை எப்படி புரிந்து கொள்வது?

எப்படியாவது தடுத்து நிறுத்துங்க… கதறும் 42 குடும்பங்கள் அநியாயமா எங்க வீடுகளை இடிச்சு தள்ளுறாங்க…

–         அங்குசம் புலனாய்வுக்குழு

Comments are closed, but trackbacks and pingbacks are open.