அமைச்சர் தொகுதியில் 500 கோடி கோயில் நில சர்ச்சை!
அறுபடை வீடுகளுள் ஒன்றான பழனி தண்டாயுதபாணி கடவுள் பெயரில் அமைந்த 100 கோடி மதிப்பிலான சொத்தையே ஆட்டையப் போட துணிந்த கதையை தமிழகம் கண்டிருக்கிறது. ஆனால், அதைவிட 5 மடங்கில், இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான சுமார் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள 58 ஏக்கர் சொத்தை அபகரித்த கதையை கேள்விபட்டிருக்கிறீர்களா?
ஒன்றல்ல; இரண்டல்ல சுமார் 80 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்துவரும்; மாபெரும் நில மோசடிக்கு எதிராக, சாட்டையை சுழற்றியிருக்கிறது மதுரை உயர்நீதிமன்றக்கிளையின் நீதிபதிகள் வேல்முருகன் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு. தனியாரின் ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்களை தனிநபர்கள் பெயருக்கு பட்டா மாற்றம் செய்வதற்கும் பத்திரப்பதிவு செய்வதற்கும் தடை விதித்திருப்பதோடு, இந்த விவகாரம் தொடர்பாக அரசு மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் 3 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டுமென்றும் அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கிறார்கள்.
அமைச்சரின் தொகுதியில்தான் இந்த அவலம் :
இதில் கொடுமை, சர்ச்சையில் சிக்கியிருப்பது இந்து சமய அறநிலையத்துறை என்பது மட்டுமல்ல; அந்த துறையின் அமைச்சரான ரமேஷின் சொந்த தொகுதியில்தான் இந்த கூத்து.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருப்பராய்த்துறையில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான தாருகாவனேஸ்வரர் (பராய்த்துறை நாதசுவாமி’ திருக்கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை சூறையாடிய அந்த அந்நிய சக்தி வேறு யாருமல்ல; ஆன்மீக சேவையில் பேரும் புகழும் பெற்ற திருப்பராய்த்துறையில் இயங்கிவரும் ராமகிருஷ்ண தபோவனம்தான் இந்த நில மோசடி புகாரில் வகையாய் சிக்கியிருக்கிறது.

பிரிட்டிஷ் காரன் காலத்தைய, 1927 ஆம் ஆண்டின் ரீ-செட்டில்மெண்ட் ஆவணங்களே, இவை மேற்படி தாருகாவனேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான சொத்துக்கள் என்பதை நெற்றி பொட்டில் அடித்தாற்போல கூறுகின்றன. ஆனால், சுமார் 1942 வாக்கில் அங்கே வந்த தபோவனத்தினர் முதலில், அக்கோயில் சொத்துக்களை பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர். பிறகு, இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு 34-ஐ அப்பட்டமாக மீறி, ஊழல் அதிகாரிகளின் துணையோடு மெல்ல தங்கள் பெயருக்கு பட்டா மாற்றமும் செய்திருக்கின்றனர்.
திருப்பராய்த்துறை தபோவனத்தின் தில்லாலங்கடி !
இப்படியாக, திருப்பராய்த்துறை கிராமத்தில் பட்டா எண் 400 – இன் கீழ் சுமார் 14.08 ஏக்கர் நிலங்களும்; அந்தநல்லூர் கிராமத்தில் சுமார் 44 ஏக்கர் நிலங்களும் தபோவனத்தின் பெயருக்கு முறைகேடாக பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
இவ்வாறு தனக்குச் சொந்தமான கோயில் நிலத்தை முறைகேடாக ஆக்கிரமித்ததோடு மட்டுமல்லாது; அந்த இடத்தில் பணியாளர் குடியிருப்புகள், ஆசிரியர் குடியிருப்புகள், அஞ்சலகம், கனரா வங்கிக்கான கட்டிடம் என வணிக ரீதியிலான பல்வேறு கட்டிடங்களை எழுப்பி அதன் மூலம் மாதா மாதம் வாடகையையும் தபோவனம் வசூலித்து வருகிறது என்பதுதான் இதில் ஹைலைட்.

இதில் காலக்கொடுமை என்ன தெரியுமா? இவ்வளவு ஏக்கர் நிலங்களுக்கும் உண்மையான உரிமைதாரரான, தாருகாவனேஸ்வரர் கோயில் தற்போது வரையில் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது என்பதுதான். ஆண்டிற்கு வெறும் 7.78 இலட்சம் முதல் 12.77 இலட்சம் வரையில் மட்டுமே கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்துக் கொண்டு கோயிலில் பணியாற்றும் பணியாளர்களுக்கு அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தைக்கூட வழங்க முடியாமல் தவித்து வருகிறது. அவ்வளவு ஏன், 5 கால பூஜைகள் மற்றும் திருப்பணிகளைக்கூட செய்யமுடியாமல் அந்த சிவபெருமானே இருளில் தத்தளிக்கும் நிலையில் ஆட்பட்டிருக்கிறது.
கோயில் நிலத்தை ஆக்கிரமித்தது; மோசடியான முறையில் பட்டா மாற்றம் செய்ததோடு விவகாரம் முடிந்துவிடவில்லை. கடந்த 2013 ஆம் ஆண்டு முதலாக, தபோவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களுக்காக ஒரு பைசா கூட வாடகை செலுத்தவில்லை. அவ்வப்போது இந்து சமய அறநிலையத்துறையில் வந்து அமரும் சில நேர்மையான அதிகாரிகள் இந்த வாடகைப் பாக்கி விவகாரங்களை தோண்டியெடுத்து பிறப்பித்த நியாயமான உத்தரவுகளையும் கழிவறை காகிதங்களாக கசக்கிப்போட்டுவிட்டது, தபோவன நிர்வாகம்.
ஏழைக்கு ஒரு நீதி தபோவனத்துக்கு ஒரு நீதி :
இதே தபோவனம் அமைந்துள்ள ஊரில், 17 வருடங்களாக வசித்து வந்தபோதிலும் அடிமனை கோயிலுக்குச் சொந்தமானது என்ற ஒரே காரணத்திற்காக, இன்றுவரையில் மின்சார இணைப்பைக்கூட வழங்க மறுத்து வருகிறது உள்ளாட்சி நிர்வாகம். ஆனால், தபோவனமோ சகல வசதிகளுடன் சிவன் சொத்தை ஆண்டு அனுபவித்து வருவதோடு, அடிமடியைக் கைவைத்த கதையாக அடிமனையையும் மெல்ல ஆட்டையைப் போட்டு வந்திருக்கிறது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வந்தாலும் சாமானியர்களை ’ஆக்கிரமிப்பு’ என்ற பெயரில் கிள்ளுக்கீரைகளைப்போல தூக்கிக்கடாசும் அதிகாரிகள்தான், இந்த விவகாரத்தில் கூட்டுக்களவாணிகளாக இருந்து தபோவனத்துக்கு வெண்சாமரம் வீசியிருக்கிறார்கள்.
அறநிலையத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை என்று ஒட்டுமொத்த அரசு இயந்திரமே தபோவனத்தின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு துணை போயிருக்கிறது.

தனி ஒருவன் :
சிவன் சொத்து குல நாசம் என்பார்கள். ஆனால், அந்த சிவனின் பெயரில் உள்ள சொத்தையே, ஆட்டையைப்போட துணிந்த ராமகிருஷ்ண தபோவனத்துக்கு எதிராக எந்த ஒரு இந்து அமைப்பும் கொந்தளிக்கவில்லை. அதே ஊரைச் சேர்ந்தவரும், இந்திய விமானப்படையின் ஓய்வுபெற்ற அதிகாரியும், தீவிர சிவ பக்தருமான கே.தங்கராஜ் என்ற தனி ஒருவனின் தனிப்பட்ட தொடர் முயற்சியால்தான் இப்படி ஒரு மாபெரும் ஊழல் – மோசடி அம்பலத்துக்கு வந்திருக்கிறது. அவரும் இந்த விவகாரம் அறிந்த காலத்திலிருந்து கரடி கத்தாக கத்தி பார்த்துவிட்டார். எந்த இந்துக்களும் அவரோடு கை கோர்க்கவில்லை. ஆனாலும், அவர் விடுவதாயில்லை. அசரவுமில்லை. தபோவனத்தின் பல்வேறு வகையிலான மிரட்டலை கண்டு அஞ்சி ஒதுங்கிவிடவுமில்லை. தனிப்பட்ட முறையில் சில ஆயிரங்களை செலவு செய்து கடும் முயற்சியில் ஆவணங்களைத் திரட்டி இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார்.
இவரது நேர்மையான முன்னெடுப்பை கண்டு நெகிழ்ந்துபோன, வழக்கறிஞர் சுதாகர் நாகராஜ் தன்னால் இயன்ற பங்களிப்பாக வழக்கை திறம்பட நடத்திக் கொடுத்திருக்கிறார்.

“தொடர்ந்து மூன்று மாதங்கள் கடுமையான உழைப்பு சார். வழக்குச் செலவுக்காக ஒரு பைசா வாங்கவில்லை. ஆவணங்களை பிரதியெடுக்கும் செலவு, நீதிமன்றம் கட்டணம் உள்ளிட்டு வழக்கு தொடர்பான அனைத்து செலவுகளையும் அவரே பார்த்துக்கொண்டார். அவரது வழக்கறிஞர் குழுவின் கூட்டுழைப்பில்தான் இப்படி ஒரு உத்தரவு கிடைத்தது.” என பூரிக்கிறார் தங்கராஜ்.
“அவரது சளையாத போராட்டத்திற்கு முன், அவரது அர்ப்பணிப்புக்கு முன் என்னுடைய பங்களிப்பு எல்லாம் தூசு சார். பல்வேறுவிதமான அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், இவ்வளவு மெனக்கெட்டு, அவர் திரட்டிய ஆதாரங்கள்தான் அடிப்படை” என்கிறார், வழக்கறிஞர் சுதாகர் நாகராஜ்.
இந்து அறநிலையத்துறையின் சார்பில், தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டிய வழக்கு. தங்கராஜ் என்ற தனிநபரின் முன்முயற்சியில் பொதுநல வழக்காக தாக்கல் செய்ய நேர்ந்ததே பேரவலம். தேரை இழுத்துத் தெருவில் விட்டிருக்கிறார் தங்கராஜ். பகற்கொள்ளைபோன கோயில் சொத்துக்களை மீட்டெடுப்பதும்; இந்த மாபெரும் மோசடிக்குத் துணை போன அதிகாரிகளை தண்டிப்பதும் இனி உங்கள் பொறுப்பில். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
— அங்குசம் புலனாய்வுக்குழு.






Comments are closed, but trackbacks and pingbacks are open.