12 அம்சக் கோரிக்கைகளுடன் டெங்கு கொசு ஒழிப்பு களப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் !
சிக்குன்குனியா, காலரா, வயிற்றுப்போக்கு, டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட கொசுக்களினால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழகம் முழுவதும் கடந்த 2006-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கலைஞர் அவர்களது ஆட்சிக்காலத்தில் பணியமர்த்தப்பட்டவர்கள்தான் டெங்கு கொசு ஒழிப்பு களப்பணியாளர்கள்.
அப்போதிலிருந்து இப்போது வரையில் அத்துக்கூலிகளைப் போலவே முறையான அடையாள அட்டைக்கூட வழங்கப்படாத நிலையில்தான் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள். கொரோனா தொற்று காலத்தில் இவர்களது களப்பணி குறிப்பிடத்தக்கது. ஆனாலும், இவர்களது பணிசூழல் உத்தரவாதமற்றதாகவே அமைந்திருக்கிறது. குறிப்பாக, அரசியல் கட்சி சார்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகளின் ஆதிக்கத்தின் கீழ்தான் இவர்களது பணிச்சூழல் அமைந்திருப்பதாக வேதனை தெரிவிக்கிறார்கள். அவர்களது விருப்பு – வெறுப்பிலிருந்து தங்களுக்கான பணி வழங்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடுகிறார்கள்.
இந்த பின்னணியிலிருந்துதான், தினக்கூலி முறையை கைவிட வேண்டும்; மாத ஊதியம் வழங்க வேண்டும்; பணிக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிட வேண்டும்; பணி நியமனங்களில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் கொரோனா காலத்தில் பணியாற்றிய அனைத்து பணியாளர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்; சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளுடன் தமிழகம் முழுவதும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருக்கிறார்கள்.
தமிழ்நாடு டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர் சங்கத்தின் சார்பில் சேலம் – கோட்டை மைதானத்தில் மாநில தலைவர் ஜெ நித்யா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் முனியப்பன்; சேலம் மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன்; மாநில செயற்குழு உறுப்பினர் பாலமுருகன்; மகளிர் அணி செயலாளர் அன்னக்கிளி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
– அங்குசம் செய்திப்பிரிவு.