“வியக்க வைக்கும் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழ் துறை பாடத்திட்டம் – பேராசிரியர் சுப.வீரபாண்டியன்
“மொழி சார்ந்த கூறுகளை உள்வாங்கவும், ஒருங்கிணைந்த வளர்ச்சி பெறவும் மாணவர்களுக்கு இந்தப்
பாடத்திட்டம் துணைசெய்கிறது”
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழ்ப்பாடம் குறித்து பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பெருமிதம்
கல்லூரியில் தமிழ்ப் பாடங்களைப் பொறுத்தளவு ஒரு கேள்வி இருந்து கொண்டே இருக்கிறது. இருந்தது என்றும் சொல்லலாம். இருக்கிறது என்றும் சொல்லலாம். அறிவியல் படிக்கிற அதாவது இயற்பியல் படிக்கிற அல்லது வேதியியல் படிக்கிற மாணவர்களுக்கு புறநானூறும் பதிற்றுப்பத்தும் எதற்காகச் சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும்? அதேபோல் வணிகவியலில் படிக்கிறவர்களுக்கு வணிகம் தொடர்பான பாடங்கள் போதுமானது இல்லையா? தேவையில்லாமல் தமிழில், ஆங்கிலத்தில் இலக்கியங்களைப் படித்து ஏன் தங்களின் நேரத்தை வீணாக்க வேண்டும் என்பதாக ஒரு கேள்வி இருக்கிறது. இந்தக் கேள்வியில் மிகச் சரியான அடிப்படை ஏதுமில்லை என்பது ஒரு பக்கம் இருக்க இதனை முழுமையாக நாம் புறந்தள்ளி விடவும் முடியாது என்பதையும் ஏற்க வேண்டும். தமிழ் இலக்கியம் படிக்கிற மாணவர்கள் வேறு. அறிவியல், பொருளாதாரம், வணிகம் படிக்கிற மாணவர்கள் தமிழை ஒரு பாடமாகப் படிப்பது என்பது வேறு. இப்படி இருக்கிற போது இவற்றுக்கு இடையே ஒரு சிறு வேறுபாட்டைக் காட்டுவது சரியானதுதான் என்கிற நெடுங்காலமாகவே இருந்தது உண்மைதான்.
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழ் துறையின் பாடத்திட்டம் இந்த விழாவிற்கு ஒரு நல்ல விடையை முன் வைத்துள்ளது. அந்தக் கல்லூரியின் தமிழ்ப்பாடம் குறித்து ஒரு தகவல் கிடைத்தது. பிறகு நண்பர்கள் வழியாக அந்த நூல்களையும் பெற்றேன். அங்கே தமிழ் பாடத்தை மூன்றாக பிரித்து வைத்திருக்கிறார்கள். தமிழ் இலக்கியம் படிக்கிற மாணவர்கள் சங்க இலக்கியம், நீதி நூல்கள் எல்லாவற்றையும் படிக்கிறார்கள். அப்படி இல்லாமல் அறிவியலோ வரலாறு, பொருளாதாரமோ, வணிகமோ படிக்கிற மாணவர்களுக்கு தமிழ் பாடம் அங்கே எப்படி இருக்கிறது என்று சொன்னால் அது ஒரு தன்னாட்சிக் கல்லூரி என்பதனாலே அவர்களே அந்த பாடத்திட்டத்தை வகுத்துக் கொள்ள முடிந்திருக்கிறது. எப்படி அவர்கள் வைத்திருக்கிறார்கள் என்றால் அறிவியல் தமிழ், வணிகத்தமிழ், தொடர்பியல்தமிழ் என்று மூன்று தமிழ் பாடப் புத்தகங்களை வைத்திருக்கிறார்கள். நான்காம் பருவம் அந்தப் பாடங்கள் வழங்கப்படுகின்றன.
அதிலும் புறநானூறு இருக்கிறது திருக்குறள் இருக்கிறது. ஆனால் எப்படிப்பட்ட பாடல்கள், எப்படிப்பட்ட உரைநடைப் பகுதிகள் அதில் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்றால் அறிவியல் தமிழில் அறிவியல் தொடர்பான பாடங்கள் இருக்கின்றன. தமிழ்ப் பழம் பாடல்களில் எவ்வளவோ அறிவியல் செய்திகள் இருக்கின்றன. வானியல் பற்றிய செய்திகள் புறநானூற்றிலே காணப்படுகின்றன. அந்தப் பாடல்களை எடுத்து வைத்திருக்கிறார்கள்.
அதே மாதிரி திருமூலரின் அணு பற்றிய சிந்தனை இருக்கிறது. மிகச் சிறிய கூறு அணு. அந்த அணுவை ஆயிரம் கூறிடுவது, கடுகைத் துளைத்து ஏழ் கடலை புகுத்தி என திருக்குறளைப் பற்றி இடைக்காடர் சொன்னார் என்றால், அணுவைத் துளைத்து ஏழ்கடல் புகுத்தி என ஔவையார் சொல்கிறார். அணுவை புரோட்டான், எலக்ட்ரான், நியூட்ரான் எனப் பகுக்க முடியும் என பின்னால்தான் அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்தார்கள் ஆனால் எங்கள் புலவர்கள் அணுவை பிளப்பது பற்றி கண்டுபிடித்தார்கள் என்று சொல்வதற்காக இல்லை. அந்த சிந்தனை இருந்திருக்கிறது. அணுவையும் பிளக்க முடியும். அணுவையும் ஆயிரம்மாய் பிளக்க முடியும். இந்தச் சிந்தனை தமிழில் இருந்திருக்கிறது.
தமிழரின் மருத்துவ அறிவியல் குறித்த அறிவு விளக்கப்படுகிறது. இதையெல்லாம் அறிவியல் படிக்கிற மாணவர்களுக்கு அறிவியல் தமிழ் நூலில் கொடுத்திருக்கிறார்கள்., வணிகவியல் படிக்கிற தமிழ்ப்பாடம் எதுவாக இருக்கிறது? அதுவும் தமிழ் இலக்கியம் தான் ஆனால் பட்டினப்பாலையில் வரும் செய்தி இருக்கிறதே. நாளங்காடி அல்லங்காடி அவை பற்றி பேசுகிறார்கள். அல் என்றால் இரவு. அல்லும் பகலும் என்று நாம் இப்போது சொல்லுகிறோம். பகல் நேரத்துக்கடைகள் – இரவு நேரத்துக்கடைகள். அந்தக் கடைகள் பற்றிய செய்திகள் பாடமாக்கப்பட்டு இருக்கின்றன.
அதைப்போல சில வகுப்புகளுக்குத் தொடர்பியல் பாடம். மொழியைக் கற்றுக் கொள்வதன் அடிப்படை நோக்கமே தொடர்பியல் திறனை வளர்த்துக் கொள்வதுதான். தொடர்பியல் திறனை எப்படி வளர்த்துக் கொள்வது? மொழியை எப்படி சரியாக ஆள்வது? என்பதாக இந்தப் பாடத்திட்டத்தை வடிவமைத்து இருக்கிறார்கள்.
இவ்வாறு மொழியில் இருக்கிற இலக்கியங்களைக் கற்றுக் கொண்டு, அதிலுள்ள மொழி சார்ந்த கூறுகளை உள்வாங்கவும், ஒருங்கிணைந்த வளர்ச்சி பெறவும் மாணவர்களுக்கு திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழ்த்துறைப் பாடத்திட்டம் துணைசெய்கிறது. இது என்னை வியக்க வைக்கிறது. இந்த முயற்சி அறிவு வளர்ச்சியோடு, மானிட வளர்ச்சிக்கும் படிக்கட்டுகளாக அமைந்து மாணவர்களைப் பண்படுத்தி உருவாக்குகிறது என அழுத்தமாகச் சொல்ல முடியும்.
சந்திப்பு : யுகன் ஆதன்