தேவர் ஜெயந்திக்கு சம்பவம் ! குமுளி ராஜ்குமார் கைது – பின்னணி என்ன?
தேவேந்திரகுல மக்கள் இயக்கத்தின் நிறுவனர் தலைவர் குமுளி ராஜ்குமார் அக்-16 அன்று பரமக்குடியில் கைது செய்யப்பட்ட நிலையில், தனிப்படை போலீசார் இரகசிய இடத்தில் வைத்து விசாரணையை தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில், போலீசார் பொய்வழக்கில் அவரை கைது செய்ய முயற்சிப்பதாகக்கூறி, நேற்றிரவு (அக்-16) திருச்சி எஸ்.பி. அலுவலகத்தை அவரது உறவினர்களும் தேவேந்திரகுல மக்கள் இயக்கத்தின் ஆதரவாளர்களும் முற்றுகையிட்டனர்.
முற்றுகையில் ஈடுபட்டவர்களிடையே, ஏ.டி.எஸ்.பி. கோடிலிங்கம் பேச்சுவார்த்தை நடத்தினார். “வழக்கு ஒன்றின் விசாரணைக்காக அவர் அழைத்து வரப்பட்டிருப்பதாகவும்; தற்போது அவர் பத்திரமாகவே இருக்கிறார் என்றும்; அவரிடம் நடத்தப்படும் விசாரணைக்குப்பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.” என்பதாக, போராட்டக்காரர்களிடையே வாக்குறுதி அளித்திருந்தார், ஏ.டி.எஸ்.பி. கோடிலிங்கம்.
குமுளி ராஜ்குமாரிடம், திருச்சி – பெட்டவாய்த்தலை போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அவரை கைது செய்து சிறையிலடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக போலீசு வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள்.
யார் இந்த குமுளி ராஜ்குமார் :
தேவேந்திரகுல மக்கள் இயக்கத்தின் நிறுவனர் தலைவராக அறியப்படும் குமுளி ராஜ்குமார், தனது 16 வயதிலேயே குற்ற வழக்கை எதிர்கொண்டவர். திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் அருகே மேலகுளத்தை சேர்ந்த, ஓய்வுபெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் என்பவரின் மகன்தான் இந்த ராஜ்குமார்.
சொந்த ஊரில் வசித்து வந்தபோது, டீக்கடை ஒன்றில் சாதிய ரீதியில் இழிவுபடுத்தப்பட்டதை பொறுத்துக்கொள்ள முடியாத ராஜ்குமார், சாதி பெயரை சொல்லி டீ தர மறுத்த டீக்கடை காரரை தாக்கி அவரது மண்டையை உடைத்தபோது, ராஜ்குமாரின் வயது வெறும் 16. அங்கிருந்து இடமாறுதல் பெற்று குமுளிக்கு செல்கிறார், இன்ஸ்பெக்டர் பெருமாள். குமுளி போலீஸ் குடியிருப்பில்தான் குடும்பத்துடன் வசித்து வந்திருக்கிறார், ராஜ்குமார்.
திருநெல்வேலியைப் போலவே, குமுளியிலும் சாதிய ரீதியிலான ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்கும் நபராக அறியப்படுகிறார், ராஜ்குமார். தேவேந்திரகுல மக்களின் உரிமைக்கான போராட்டத்தில், ஒரு கொலையும் விழுகிறது. 1999-இல் கொலை வழக்கில் கைதாகிறார். 19 வயதில் குண்டாஸில் அடைக்கப்படுகிறார். அப்போது, தேவேந்திரகுல மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்த, பசுபதிபாண்டியனின் அறிமுகம் கிடைக்கிறது. அவரது தீவிர ஆதரவாளராகவே மாறிவிடுகிறார், ராஜ்குமார்.
2010 – இல், தேவேந்திர மக்கள் இயக்கம் என்றொரு இயக்கத்தை தனியே தொடங்கி அதன் நிறுவனர் தலைவர் ஆகிறார். சென்னையில் நடைபெற்ற ஒரு கொலை வழக்கில் கைதாகி, கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் கோவை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அந்த இரண்டரை ஆண்டுகளில் அடுத்தடுத்து இவர் மீது குண்டாஸ் போடப்பட்டிருக்கிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் பேட்டை, திருநெல்வேலி தாலுகா, சுத்தமல்லி, தச்சநல்லூர், மானூர், பாளையங்கோட்டை ஆகிய ஆறு போலீஸ் ஸ்டேஷன்களிலும் குமுளி ராஜ்குமார் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன. இதேபோல், தூத்துக்குடியில் தூத்துக்குடி வடக்கு மற்றும் கோவில்பட்டி போலீஸ் ஸ்டேஷன்; சென்னையில் பல்லாவரம், கிண்டி, சங்கர் நகர் போலீஸ் ஸ்டேஷன்; மதுரையில், மதிச்சியம், அண்ணாநகர் போலீஸ் ஸ்டேஷன்; புதுக்கோட்டை சிபிசிஐடி போலீஸ் ஸ்டேஷன்; ஈரோடு டவுன் போலீஸ் ஸ்டேஷன்; நாகப்பட்டினம் வாய்மேடு போலீஸ் ஸ்டேஷன் ; கடலூர் ஓ.டி. போலீஸ் ஸ்டேஷன்; கரூர் லாலாபேட்டை போலீஸ் ஸ்டேஷன் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில் குமுளி ராஜ்குமாருக்கு எதிராக 8 கொலை வழக்குகள் உள்ளிட்டு 30-க்கும் அதிகமான வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. இவற்றுள் பத்துக்கும் மேற்பட்ட வழக்குகளிலிருந்து விடுதலையும் ஆகியிருக்கிறார். எஞ்சிய வழக்குகளை எதிர்கொண்டு வருகிறார், குமுளி ராஜ்குமார்.
குமுளி ராஜ்குமார் ஒவ்வொரு முறையும் கைதாகும்போதும், கூடவே குண்டாஸ் வழக்கும் போடப்படுவது நிச்சயம் என்கிறார்கள். பெரும்பாலும், தனது சமுதாயத்தினருக்காகவே, இதுபோன்ற அடிதடி மற்றும் கொலை முயற்சிகளில் அவர் ஈடுபட்டு வந்திருக்கிறார் என்பதாகவும் சொல்கிறார்கள்.
16 வயதில் தொடங்கி, தற்போது 44 வயதை எட்டியிருக்கும் குமுளி ராஜ்குமார் சிறையில் கழித்த ஆண்டுகளுக்கு இணையாக, வெளியில் இருந்த நாட்களிலும்கூட தலைமறைவாகவே இருந்ததாகவும் குறிப்பிடுகிறார்கள்.
பெரும்பாலும், எந்த ஒரு கொலையிலும் குமுளி ராஜ்குமார் நேரடியாக ஈடுபடமாட்டாராம். தனது சமுதாயத்தின் நலனுக்காக, அவர்களின் உரிமைக்காக செய்யப்படும் கொலை என்பதாக அவரைப்போலவே இளமை துடிப்பான ரத்த உறவுகளைத்தான் ஈடுபடுத்தி வந்திருக்கிறார் என்கிறார்கள். அவர்களும் சமுதாய நலனுக்காக ஏதோ தியாகம் செய்வதைப்போல, குற்றச்செயல்களில் துணிச்சலோடு ஈடுபட்டு வந்திருக்கின்றனர் என்பதாகவும் சொல்கிறார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வழக்கு ஒன்றில் கைதாகி திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார், குமுளி ராஜ்குமார். கூடவே, அவரது ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அப்போதே, காலில் இரண்டுக்கும் மேற்பட்ட இடங்களில் எலும்பு முறிவோடுதான் அவர்கள் சிறையிலடைக்கப்பட்டிருக்கிறார்கள். எலும்பு முறிவுக்கு கட்டு கட்டி சிறையிலடைத்திருந்தாலும், “கெத்துக்கு” ஒன்றும் குறைச்சல் இல்லாத வகையில்தான் சிறை வாழ்க்கையையும் நகர்த்தியிருக்கின்றனர், அவரது ஆதரவாளர்கள்.
இந்த பின்னணியிலிருந்துதான், திடீரென குமுளி ராஜ்குமார் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை கூட்டியிருக்கிறது. அதுவும், அதிரடிக்கு பெயர்போன திருச்சி எஸ்.பி. வருண்குமார் தலைமையிலான தனிப்படை போலீசாரின் பிடியில் சிக்கியிருக்கிறார், குமுளி ராஜ்குமார்.
எதிர்வரும் அக்டோபர்-30 அன்று தேவர் ஜெயந்திவிழா நடைபெறவிருக்கும் நிலையில், மாற்று சமூகத்தை சேர்ந்த பிரமுகர் ஒருவரை சம்பவம் செய்வதற்காக தனது சகாக்களுடன் சேர்ந்து திட்டமிட்டிருக்கிறார், குமுளி ராஜ்குமார். இதை எப்படியோ மோப்பம் பிடித்துவிட்ட போலீசார், அப்படி ஒரு அசம்பாவிதம் நடந்துவிடக்கூடாது என்ற பதைபதைப்பில்தான், கொத்தாக தூக்கி கொண்டு வந்திருக்கிறார்கள் என்கிறார்கள் போலீசார் வட்டாரத்தில். போலீசாரின் விசாரணையின் முடிவில், மேற்படி கொலைத்திட்டத்திற்கான ஆதாரங்களை திரட்டிய பிறகு, இந்த சதி செயலில் ஈடுபட்ட அனைவரையும் கொத்தாக பிடித்து சிறையிலடைக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள் போலீசு வட்டாரத்தில்.
– அங்குசம் புலனாய்வுக்குழு.